சாலைகளில் ஓடும் வாகனங்களுக்கு இருப்பதை போல், விமானங்களுக்கான ஆயுட்காலம் விதிக்காதது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. குஜராத் விமான விபத்தை அடுத்து சாலை வாகனங்களுடன் ஒப்பிட்டு ஆயுட்காலம் மீதான விவாதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சுற்றுச்சூழலைக் கணக்கில் கொண்டு உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை ஆணையத்தால் டீசல் வாகனங்களுக்கு 10 வருடமும், பெட்ரோல் வாகனங்களுக்கு 15 வருடங்கள் என ஆயுட்காலம் விதிக்கப்பட்டுள்ளது. இவை 2015 மற்றும் 2018 -ல் விதிக்கப்பட்டன. 10, 15 வருடங்களுக்கு பிறகும் சில வாகனங்கள் மாசுகட்டுப்பாடு விதிகளுக்கும் குறைவானப் புகைகளை வீசுகின்றன அந்த வாகனங்களுக்கும் சாலைகளில் ஓட அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்தவகையில், ஆகாயங்களில் பறக்கும் விமானங்களுக்காக எந்தவிதமான ஆயுட்காலமும் அரசு விதிக்கவில்லை எனத் தெரிகிறது.
எனினும், இந்த விமானங்களைத் தயார் செய்யும் நிறுவனங்கள் அதற்கான ஆயுட்காலத்தை நிர்ணயித்துள்ளன. ஆனால், அந்த ஆயுட்காலம் வரையிலும் அவை வானில் பறக்கின்றனவா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. குஜராத்தில் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானம் 12 வருடங்கள் பழமையானது. இது, விபத்திற்குள்ளன பின் சமூகவலைதளங்களில் இதன் மீதான விவாதங்கள் எழுந்துள்ளன. இதனால், விமானங்களின் ஆயுளை ஆய்வு செய்து மத்திய அரசு அதற்கான விதிமுறைகளை நிர்ணயிக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
வானில் பறக்கும் விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கும் அமைப்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) மற்றும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ஐடிஏஒ) உள்ளன. இதன் விதிமுறைகளின் கீழ், இந்தியாவில் விமானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு எதுவும் இல்லை எனக் கருதப்படுகிறது. இதற்கு ஈடாக விமானங்களின் பறக்கும் தகுதியை, அவற்றின் தொழில்நுட்ப நிலை, பராமரிப்பு மற்றும் வழக்கமான ஆய்வுகளைப் பொறுத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில், விமானப் போக்குவரத்தில், வயதை விட பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தரநிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது காரணம்.
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான போயிங் 787-8 வகை விமானம் 11.5 ஆண்டுகள் பழமையானது. இருப்பினும் அதன் வடிவமைப்பு தயாரிப்பு நிறுவனம் அளித்த ஆயுட்காலத்திற்குள் இருந்தது. இந்த விமானத்தை தயாரித்த நிறுவனம் அதற்கு 44,000 விமான சுழற்சிகள் அல்லது 30 முதல் 50 ஆண்டுகள் என அதன் ஆயுட்காலத்தை நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஒரிரு குறிப்பிட்ட நிறுவனங்கள் பயன்படுத்தும் விமானங்கள் 10 முதல் 20 ஆண்டுகள் பழமையானவை எனப் புகார்கள் உள்ளன.
விமானத் தயாரிப்புகளின் தொழில்நுட்பக் கருத்துக்களின்படி, வானில் பறக்கும் அனைத்து விமானங்களுக்கும் டிஜிசிஏ மற்றும் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எப்ஏஏ) ஆகியவை வழக்கமான தணிக்கைகளை நடத்துகின்றன. சி வகை சோதனையை ஒவ்வொரு 18 முதல் 24 மாதங்களுக்கு நடத்தப்படுகிறது. டி வகை சோதனை ஒவ்வொரு 6 முதல் 10 வருடங்களுக்கு செய்யப்படுகிறது.
விமானங்களை காருடன் ஒப்பிட்டும் சமூகவலைதளங்களில் சில விவாதங்கள் எழுந்துள்ளன. இதன்படி, ஒரு காரின் சராசரி ஆயுட்காலம் 20 முதல் 25 ஆண்டுகள் எனக் கருதப்படுகிறது. ஆனால் அதிக சதவீத வாகனங்கள் பத்து ஆண்டுகளில் கூட 1 லட்சம் முதல் 2 லட்சம் கிலோமீட்டர் வரை ஓட்ட முடியாதவர்களால் இயக்கப்படுகின்றன. ஓய்வு பெற்ற பிறகு எப்போதாவது மட்டுமே கார்களைப் பயன்படுத்துபவர்களும் உள்ளனர். இத்துடன், அவர்களிடம் இன்னொரு கார் வாங்க பணமும் இல்லை, வங்கிகளில் கடன் வாங்கத் தகுதியும் இல்லை.



