கிரிக்கெட் ரசிகர்களுக்கான திருவிழா இன்னும் 5 நாட்களில் தொடங்கப் போகிறது. மார்ச் 31-ம் தேதி அகமதாபாத்தில் நடக்கவுள்ள முதலாவது ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சந்திக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த தொடருக்கான பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள் ஈடுபட்டிருக்க, டீம் காம்போசிஷனைப் பற்றி தீவிரமாக யோசித்து வருகிறார்கள் கேப்டன் தோனியும் பயிற்சியாளர் ஃப்ளெம்மிங்கும்.
கடந்த முறை சிஎஸ்கே 9-வது இடத்தைப் பிடித்ததால், அதற்கு பழி தீர்க்க இம்முறை எப்படியும் கோப்பையை வென்றாக வேண்டும் என்ற வெறியில் இருக்கிறார் தல தோனி. டி20 உலகக் கோப்பை, ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை, உலக சாம்பியன்ஷிப் கோப்பை, 4 ஐபிஎல் கோப்பைகள். இதைத்தவிர சாம்பியன்ஸ் லீக் கோப்பை என்று தனது பீரோ முழுக்க கோப்பைகளால் நிறைத்திருக்கும் தல தோனிக்கு கடைசியாக மேலும் ஒரு ஐபிஎல் கோபையை அதற்குள் திணிக்க ஆசை. அதற்காக பயிற்சியாளர்கள் பிளம்மிங் மற்றும் பிராவோவுடன் இணைந்து வீரர்களை பார்த்து பார்த்து கூர்தீட்டி வருகிறார்.
சிஎஸ்கே அணியில் மொத்தம் 25 வீரர்கள் இருந்தாலும், போட்டிகளில் ஆடும் முதல்11 வீரர்களை தோனி இப்போதே முடிவு செய்து வைத்திருப்பதாக சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி பயிற்சியாளர்களுடன் சேர்ந்து அவர் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் முன்னணி படையைப் பார்ப்போம்.
டெவின் கான்வாய் – ருதுராஜ் கெய்க்வாட் (தொடக்க ஆட்டக்காரர்கள்):
எப்போதெல்லாம் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்கிறதோ, அப்போதெல்லாம் அணியின் தொடக்க வீரர்கள் அதில் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள். முரளி விஜய், ஹெய்டன், மெக்கல்லம், ஷேன் வாட்சன், டுபிளஸ்ஸி என்று பழைய காலத்தில் சென்னைக்கு கைகொடுத்த தொடக்க ஆட்டக்காரர்களின் பட்டியல் மிக நீளமானது. அந்த வரிசையில் இந்த ஐபிஎல்லுக்கு சிஎஸ்கே நம்பும் தொடக்க ஜோடி டெவின் கான்வாயும், ருதுராஜ் கெய்க்வாட்டும்.
2021-ல் நடந்த ஐபிஎல்லில் சிஎஸ்கே கோப்பையை வெல்ல முக்கிய காரணமாய் இருந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். கடந்த ஆண்டில் அவர் ஃபார்மில் இல்லாததால் சிஎஸ்கேவுக்கு கோப்பை கைநழுவியது. ஆனால் இப்போது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார் ருதுராஜ். அதனால் தோனியின் ஹிட் லிஸ்டில் அவருக்கு முதல் இடம் இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர் என்பதையும் கடந்து சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாகவும் அவருக்கு பயிற்சியளிக்க தோனி தயாராக இருப்பதாய் சொல்லப்படுகிறது. ஐபிஎல்லில் இதுவரை 36 போட்டிகளில் ஆடியிருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் மொத்தம் 1,207 ரன்களைக் குவித்துள்ளார். ஒரு போட்டிக்கு சராசரியாக 37.72 ரன்களைக் குவிக்கும் கெய்க்வாட், 2021-ல் இருந்த ஃபார்முக்கு திரும்பினால் சிஎஸ்கேவை யாரும் அசைக்க முடியாது.
ஒரு உள்ளூர் வீரருடன் ஒரு வெளிநாட்டு வீரரை தொடக்க ஆட்டக்காரராக அனுப்புவது சிஎஸ்கேவின் வழக்கம் அந்த அவகையில் இம்முறை ருதுராஜுடன் டெவின் கான்வாய் களம் இறங்குவார். கடந்த ஐபிஎல்லில் சிஎஸ்கேவுக்காக 7 போட்டிகளில் ஆடிய அவர் எடுத்த ரன்கள் 252.
அம்பட்டி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், தோனி (மிடில் ஆர்டர்)
எந்த ஒரு அணியும் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டுமென்றால் அதன் முதுகெலும்பாக சொல்லப்படும் மிடில் ஆர்டர் சிறப்பாக இருக்க வேண்டும். இந்த இடத்தில் தன்னுடன் ஆட அம்பட்டி ராயுடு, பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பெயரைத்தான் தல தோனி டிக் செய்திருக்கிறார்.
அம்பட்டி ராயுடுவைப் பற்றி புதிதாக ஒன்றும் சொல்லத் தேவையில்லை. கடந்த பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் தூணாக செயல்படுகிறார் ராயுடு. ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை 4,190 ரன்களைக் குவித்துள்ள ராயுடு, 2018-ம் ஆண்டில் சிஎஸ்கே கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்தவர். அதன் பிறகும்கூட பல போட்டிகளில் சிஎஸ்கேவுக்கு சுமைதாங்கியாக இருந்திருக்கிறார்.
வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு அதிரடி பேட்ஸ்மேன் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக அதிக விலை கொடுத்து சிஎஸ்கே வாங்கிய வீரர் பென் ஸ்டோக்ஸ். தோனியுடன் ஏற்கெனவே புனே அணிக்காக இவர் ஆடியுள்ளார். அப்போது இந்த ஜோடி புனே அணியை இறுதிப் போட்டிவரை அழைத்துச் சென்றது. அதே மாயத்தை இம்முறையும் இந்த ஜோடி செய்யும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். பென் ஸ்டோக்ஸ் ஆல்ரவுண்டர் என்றாலும், ஆஷஸ் தொடருக்காக பணிச்சுமையை குறைக்க, இம்முறை அவர் பேட்டிங் மட்டுமே செய்வார் என்று கூறப்படுகிறது. இந்த இருவருடன் சேந்து மில்டில் ஆர்டரை வலுப்படுத்த காத்திருக்கிறார் தல தோனி.
இந்த வரிசையில் உள்ள 3 வீரர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மாற்று வீரராக பயன்படுத்த ரஹானேவை வாங்கி வைத்திருக்கிறார்கள். தொடக்க வீரர்களில் யாருக்காவது காயம்பட்டாலும் ரஹானே மாற்று வீரராக இருப்பார் என்கிறார்கள்.
ஜடேஜா, மொயின் அலி, ஷிவம் துபே, ஹங்கர்கேகர் (ஆல்ரவுண்டர்கள்)
ஆல்ரவுண்டர்கள் என்றாலே தோனிக்கு மிகவும் பிடிக்கும். அதனாலேயே சிஎஸ்கேவில் எப்போதும் ஆஅல்ரண்டர்கள் ஏராளமாக இருப்பார்கள். இந்த ஆண்டு அணியில் நிச்சயம் 4 ஆல்ரவுண்டர்களாவது இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால் மொயின் அலி கண்டிப்பாக அணியில் இருப்பார். அவருடன் சர் ஜடேஜாவும். சுழற்பந்து வீச்சுடன் தேவையான நேரத்தில் பேட்டிங்கில் அதிரடி காட்டவும் இவர்கள் தயங்க மாட்டார்கள். கூடவே கடந்த ஐபிஎல்லில் சிஎஸ்கேவுக்காக பல போட்டிகளில் முஷ்டியை மடக்கிய ஷிவம் துபேவும் அணியில் இருப்பார். இப்படி பழைய முகங்கள் நிறைய உள்ள சிஎஸ்கே அணியில் புதுமுகமாக ராஜ்வர்த்தன் ஹங்கர்கேகர் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. கடந்த 2022-ல் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்தியாவின் தொடக்க பந்துவீச்சாளராகவும், அதிரடி காட்டும் பினிஷராகவும் இருந்திருக்கிறார் ஹங்கர்கேகர்.
இவர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் பிரிட்டோரியஸ் களம் இறங்க வாய்ப்பு உள்ளது.
தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷணா (பந்துவீச்சாளர்கள்):
கடந்த முறை சிஎஸ்கே சிறப்பாக ஆட முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் தீபக் சாஹரின் காயம். அந்த தொடர் முழுக்க காயத்தால் சாஹர் ஆட முடியாமல் போக சிஎஸ்கேவின் பந்துவீச்சு பலவீனமடைந்தது. ஆனால் இந்த முறை அவர் முழு உடல்நலத்துடன் இருப்பது சிஎஸ்கேவுக்கு புது தெம்பை அளித்துள்ளது. அவர் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக செயல்படுவார். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் சிஎஸ்கே ஆடும்போது இலங்கை அணியைச் சேர்ந்த தீக்ஷணா, தோனியின் துருப்புச் சீட்டாக இருப்பார். ஆனால் அதுவே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் போட்டி நடந்தால் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மங்களா, அல்லது முகேஷ் சவுத்திரியை தோனி அணியில் சேர்ப்பார் என்கிறது சிஎஸ்கே வட்டாரம்.