மேற்கத்திய ரசிகர்களுக்கு இன்று காலையில் கிடைத்த அதிர்ச்சிகரமான செய்தி, பாடகி மடோனா கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதுதான்.
பாப் உலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்க் கொடியை பறக்கவிட்டிருப்பவர் மடோனா. மைக்கேல் ஜாக்சனைப் போலவே கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ள இவர், இசையுலகின் ஆஸ்கர் என்று கருதப்படும் கிராமி விருதை 7 முறை வென்றுள்ளார். சர்வதேச அளவில் இசை நிகழ்ச்சிகளை நடத்த பலமுறை உலகளாவிய சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் வரும் ஜூலை 15-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம் வரை உலகின் பல்வேறு பல்வேறு பகுதிகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்த மடோனா திட்டமிட்டு இருந்தார். சிகாகோ, நியூயார்க், பாஸ்டன், உள்ளிட்ட நகரங்களில் நடக்கவுள்ள அவரது இசை நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர்.
மடோனாவின் இசை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க, அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க, அவரது மேலாளரான கை ஒசரி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், ‘கடுமையான பாக்டீரியாவின் தாக்குதலால் மடோனாவின் உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 24-ம் தேதி முதல் அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்போது அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மடோனாவின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவரது இசைப் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் கை ஒசரி தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று, சுயநினைவற்ற நிலையில் இருந்த மடோனாவை நியூயார்க்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அவருக்கு அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்து வருவதாகவும் மடோனாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடுமையான பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டுள்ள மடோனாவின் உடல்நிலையைப் பற்றிய மோசமான தகவலை எதிர்பார்த்து தாங்கள் காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மடோனாவின் மூத்த மகள் லார்டெஸ், அவரை அருகில் இருந்து கவனித்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.