No menu items!

முதலீட்டாளர்களுக்கு முதல்வர் கொடுத்த பரிசுகள் என்ன?

முதலீட்டாளர்களுக்கு முதல்வர் கொடுத்த பரிசுகள் என்ன?

தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சில தினங்களாக சான் பிரான்சிஸ்கோ நகரில் அவர் தொழில் முனைவோர்களை சந்தித்து வருகிறார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முதல்வர் தலைமையில் ஆக.29அன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக ஆக. 30 அன்று தமிழக முதல்வர் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

தமிழகத்தில் அமைந்துள்ள ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், ஹான் ஹய் (ஃபாக்ஸ்கான்), பெகட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை தமிழக முதல்வர் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். தமிழக முதல்வர் ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்து பேசியபோது, உலக மின்னணு சாதனங்கள் உற்பத்தி வரைபடத்தில் தமிழகத்துக்கான இடத்தை உறுதி செய்ததற்காக ஆப்பிள் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழக முதல்வர் முன்னிலையில், கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை நிறுவுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை தமிழக முதல்வர் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து அழைப்பு விடுத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Linkedin முதன்மை செயல் அலுவலர் யான் ரோஸ்லான்ஸ்கி மற்றும் உயர் அலுவலர்களை சந்தித்து, டேட்டா சென்டர் விரிவாக்கம், Global Capability Centre (GCC) மற்றும் AI திறன் முயற்சிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து பேசினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் பதிவு

தனது அமெரிக்க பயணம் பற்றி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்குச் சென்று பார்வையிட்டது வியப்பூட்டும் அனுபவமாக அமைந்தது. பல்வேறு வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் பற்றிப் கலந்துரையாடினோம். இந்தக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் தமிழத்தை உயர்த்த உறுதிபூண்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் வழங்கிய பரிசு

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தடம் என்ற பெயரில் ஒரு பரிசுப் பெட்டகத்தை கொடுத்துள்ளார். அந்த பரிசுப் பெட்டகத்தில் உள்ள பொருட்கள்…

திருநெல்வேலி வாழை நார் கூடை
விழுப்புரத்தின் டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை)
நீலகிரி தோடா வேலைப்பாடுடன் கூடிய சால்வை
பவானி ஜமுக்காளம்
புலிகாட்டு பனை ஓலை ஸ்டாண்ட்
கும்பகோணம் பித்தளை விளக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...