No menu items!

வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ்: வட மாநிலங்களை மூழ்கடிக்கும் ‘சுனாமி மழை’!

வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ்: வட மாநிலங்களை மூழ்கடிக்கும் ‘சுனாமி மழை’!

டெல்லி, ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சல், ஜம்மு காஷ்மீர் உள்பட வட மாநிலங்கள் முழுவதும் கடந்த சில தினங்களாக கொட்டி வரும் வரலாறு காணாத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த திடீர் கனமழைக்கு என்ன காரணம்?

வரலாறு காணாத பேய் மழை

வட இந்திய மாநிலங்களில் இது பருவ மழைக் காலம்தான். ஜூன் 1ஆம் தேதியை ஒட்டி கேரளாவில் தொடங்கும் தென் மேற்கு பருவ மழை படிப்படியாக முன்னேறி ஜூன் கடைசி, ஜூலை தொடக்கத்தில் வட இந்திய மாநிலங்களில் தொடர் மழைப் பொழிவை உருவாக்கும். இது ஆண்டு தோறும் வழக்கமான நடைமுறை. ஆனால், இப்போது பெய்து வருவது பருவ மழையை மூழுகடிக்கும் மிக அபூர்வமான ‘சுனாமி மழை’. நாடு முழுவதும் 10-7-23 அன்று இயல்பை விட 81% அதிக மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, டெல்லியில், கடந்த ஞாயிறு (9-7-23) அன்று ஒரே நாளில் 15.3 சென்டி மீட்டர் மழை பதிவானது. இது கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத டில்லியின் ‘ஜூலை மாத’ மழை அளவு என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 1982 ஜூலை மாதம் இதுபோல் ஒரே நாளில் 153 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதனால், டில்லியில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. யமுனை ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. மழையால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

டில்லி பரவாயில்லை என்னும் அளவுக்கு இமாச்சல் பிரதேச நிலை படு மோசம். இங்கு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத கனமழை பெய்து வருகிறது. இமாச்சலில் கனமழைக்கு இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர். 94 பேர் படு காயமடைந்துள்ளனர்.

இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நேற்று ட்விட்டரில், “அடுத்த 24 மணி நேரத்துக்கு பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இமாச்சலில் பாலங்கள், நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இது உயிர் பலி அதிகரிக்க காரணம். குல்லு நகருக்கு அருகே ஓடும் பீஸ் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் கனமழையில் உதம்பூர் பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் ராம்கார் பகுதியில் ஒரு பேருந்து வெள்ளத்தில் சிக்கியது. பயணிகள் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியும் மின்னல் தாக்கியும் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு சராசரி மழையளவைவிட 11% அதிகமாக மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக வட மாநிலங்கள் முழுவதும் ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் 12 ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உள்ளூர் நிர்வாகத்தினருடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

திடீர் கனமழைக்கு என்ன காரணம்?

“இரண்டு வானிலை நிகழ்வுகளின் தொடர்பு காரணமாக ஏற்பட்ட ஒரு அரிய நிகழ்வு என்று இதனை சொல்லலாம்” என்கிறார் வானிலையாளரும் பேராசிரியருமான கு.வை. பாலசுப்பிரமணியன்.

எப்படி?

இந்தியாவில் கோடை காலத்தில் தார் பாலைவனம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வட, நடுப்பகுதிகள் சூடாவதால் அங்கு குறைந்த காற்றழுத்தம் உண்டாகிறது. அதை ஈடு செய்ய ஈரப்பதம் மிக்க காற்று இந்தியப் பெருங்கடலின் தென் மேற்கு பக்கத்திலிருந்து அப்பகுதியை நோக்கி வீசும். இது ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் நீடிக்கும். இப்படி தென்மேற்கில் இருந்து வடகிழக்கு நோக்கி வீசும் காற்று இமயமலைகளில் முட்டி மேலெழுந்து மழை மேகங்களை குவிக்கும். இம்மேகங்கள் இமயமலையைத் தாண்டமுடியாத நிலையில் மேலே எழும். இதனால் வெப்பம் குறைந்து மழையாகப் பெய்யும். இதுதான் தென்மேற்கு பருவ மழை.

ஜூன் 1ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் தென் மேற்கு பருவ மழை படிப்படியாக முன்னேறி கடலோரக் கர்நாடகாவிலும் கல்கத்தா மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் ஜூன் முதல் வாரத்தில் மழை பெய்யும். மும்பை மற்றும் கொங்கண் கடற்கரைப் பகுதிகளில் ஜூன் இரண்டாம் வாரத்திலும் டில்லியில் ஜூலை மாதமும் தொடங்கும். இந்த மழைக்காலத்தில் இந்தியாவில் சில பகுதிகள் 10,000 மிமீ வரை மழை நீர் பெறும்.

“இந்த தென்மேற்குப் பருவமழை காரணமாக இமாச்சலப் பிரதேசத்திற்கு மேலே ஒரு காற்றுச் சுழற்சி உருவாகியிருந்தது.

அதேநேரம் வடகிழக்கு ராஜஸ்தான் மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்றும் உருவாகியிருந்தது. இதனால், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கு ‘வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மேற்கத்திய இடையூறு காரணம்.

மேற்கத்திய இடையூறு என்பது மத்திய தரைக் கடல் பகுதியில் உருவாகும் புயல் அல்லது குறைந்த காற்றாழுத்தப் பகுதியாகும். மேலும் அவை மத்தியதரைக் கடல் பகுதி. ஈரான, மத்தியகிழக்கு நாடுகள் வழியே பயணித்து, இந்திய துணைக்கண்டத்திற்கு வானிலை மாற்றங்களை கொண்டு வருகின்றன.

மேற்கத்திய தொந்தரவு வட இந்தியாவில் வானிலையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த இடையூறுகள் நெருங்கும்போது, அவை நாட்டின் வடமேற்குப் பகுதிகளில் மேக மூட்டம், மழைப்பொழிவு, சில சமயங்களில் இமயமலையின் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவையும் ஏற்படுத்தும்.

பெரும்பாலும் மேற்கத்திய இடையூறு டிசம்பர் முதல் மே முதல் வாரம் வரையே ஏற்படும். தென் மேற்குப் பருவமழைக் காலத்தில் பொதுவாக ஏற்படுவதில்லை. அப்படி நிகழ்வது அபூர்வம். அப்படியொரு அபூர்வ நிகழ்வாக, மேற்கத்திய இடையூறு மற்றும் பருவக்காற்று இடையேயான இடைவினை இம்முறை ஏற்பட்டு 24 முதல் 36 மணி நேரம் வரை நீடித்தது. இதுதான் வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழைக்கு வழிவகுத்தது.

“மேற்கத்திய இடையூறுகளுடன் பருவக் காற்றுகளின் தொடர்பு காரணமாக, மழையின் தீவிரம் ஏற்பட்டுள்ளது” என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் சிம்லா அலுவலக இயக்குனர் சுரேந்தர் பாலும் இதனை கூறியிருக்கிறார்.

கடந்த சில நாட்களின் செயற்கைக்கோள் படங்கள், கேதார்நாத்தில் திடீர் வெள்ளத்தைத் தூண்டிய 2013 ‘இமயமலை சுனாமி’யின் போது காணப்பட்ட சூழ்நிலைக்கு ஒப்பான படங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது நிகழ்ந்துள்ளது போல், இரண்டு வானிலை நிகழ்வுகளின் தொடர்பு காரணமான ஒரு அரிய நிகழ்வு, அப்போதும் வட இந்தியாவின் பல பகுதிகளில் இடைவிடாத கனமழைக்கு வழிவகுத்திருந்தது. இதனால் நூற்றுக்கணக்கான பேர் இறந்தனர். மேலும் அப்பகுதியில் பெரும் சொத்து இழப்பு ஏற்பட்டது.

வட இந்திய மாநிலங்களில் நாளை முதல் மழை குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும் தற்போது இரான் பகுதிகள் மேலே மற்றொரு மேற்கத்திய தொந்தரவு நிலவி வருகிறது. இது இந்தியாவை நோக்கி இன்னும் இரு நாட்களில் நகர்க் கூடும். அப்போது மீண்டும் ஒரு முறை கன மழைக்கான வாய்ப்பிருக்கிறது” என்கிறார் பேரா. கு.வை. பாலசுப்பிரமணியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...