கண்ணூர் ஸ்குவாட் ( Kannur Squad – மலையாளம்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
தமிழில் வெளியான ‘தீரன் அதிகாரம் 1’ படத்தின் பாணியில் மலையாளத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கண்ணூர் ஸ்குவாட்’. இப்படத்தில் நடித்த்துடன் அதை தயாரித்தும் இருக்கிறார்.
கேரளாவின் காசர்கோட் பகுதியில் நடக்கும் கொள்ளை சம்பவத்தின்போது ஒரு கொலை நடக்கிறது. 2 மலையாளிகளும், 2 வட இந்தியர்களும் சேர்ந்து அந்த கொலையைச் செய்கிறார்கள். கொலையானவர் அரசியல்வாதி என்பதால் மாநிலத்தில் போராட்டங்கள் நடக்கின்றன. கொலையாளியைப் பிடிக்கும் பொறுப்பை மம்முட்டி தலைமையிலான கண்ணூர் ஸ்குவாட் போலீஸிடம் ஒப்படைக்கிறார்கள். கேரளாவில் இருந்து வட மாநிலங்களுக்கு போய் அவர்கள் எப்படி கொலைகார்ர்களைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் கதை.
அரசியல்வாதிகளால் போலீஸார் சந்திக்கும் பிராசினைகள், போலீஸாரின் கஷ்டங்கள் ஆகியவற்றையும் போகிர போக்கில் சொல்லி இருக்கிறார்கள். பரபரப்பான த்ரில்லர் கதையை விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்ற படம் இது.
தி ரயில்வே மென் (The Railway Men – இந்தி வெப் சீரிஸ்) – நெட்பிளிக்ஸ்
சிவ் ராவைல் இயக்கத்தில் மாதவன், கே.கே.மேனன் உள்ளிட்டோர் நடித்த ‘தி ரயில்வே மேன்’ இந்தி வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்தியாவை உலுக்கிய மிக மோசமான விபத்துகளில் ஒன்று போபால் விஷவாயு விபத்து. போபாலில் இருந்த யூனியன் கார்பைட் ஆலையில் இருந்து கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு விஷவாயு வெளியானதில் ஏராளமானோர் பலியானார்கள். பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த விஷவாயு பாதிப்பின்போது பாதிக்கப்பட்டவர்களை தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் காப்பற்றிய ரயில்வே துறை ஊழியர்களின் துணிச்சல்மிக்க செயலை அடிப்படையாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது.
தி ரோட் (The Road – தமிழ்) – ஆஹா
அருண் வசீகரன் இயக்கத்தில் த்ரிஷா நடித்து சில வாரங்களுக்கு முன் திரையங்குகளில் வெளியான தி ரோட் திரைப்படம் இப்போது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஒரு சாலை விபத்தில் தன் குடும்பத்தாரை இழந்த த்ரிஷா, அது சாலை விபத்து அல்ல… திட்டமிட்ட கொலை என்பதை தெரிந்து கொள்கிறார். கான்ஸ்டபிள் எம்.எஸ். பாஸ்கர் மற்றும் தோழி மியா ஜார்ஜுடன் இணைந்து தன் குடும்பத்தாரை கொன்றவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். அவரால் அந்த முயற்சியில் வெற்றி பெற முடிந்ததா என்பதுதான் இப்படத்தின் கதை.
ஆர் யு ஓகே பேபி (Are you ok baby – தமிழ்) அமேசான் ப்ரைம்
ஒரு குழந்தையை யாருக்குச் சொந்தம் என்பதில் அக்குழந்தையை பெற்ற தாய்க்கும், அக்குழந்தையின் வளர்ப்பு பெற்றோருக்கும் இடையே நடக்கும் உரிமை போராட்டம்தான் ஆர் யு ஓகே பேபி. லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, முல்லை அரசி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
குழந்தையில்லாத தம்பதியர் சந்திக்கும் பிரச்சினைகளையும், குழந்தைகளை தத்து எடுப்பதில் உள்ள பிரச்சினைகளையும் சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணா.