தாஹாட் (Dahaad -இந்தி வெப் சீரிஸ்) – அமேசான் ப்ரைம்
ராஜஸ்தானின் சிறு நகரங்களைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்துப் பெண்கள் ஒவ்வொருவராக கழிவறையில் சயனைட் சாப்பிட்டு செத்துப் போகிறார்கள். ஆரம்பத்தில் இதைப் போலீஸார் தற்கொலையாகப் பார்க்கிறார்கள். ஆனால் சோனாக்ஷி சின்ஹா இது தொடர்பான விசாரணையை ஏற்ற பிறகு இவை கொலை என்று கண்டுபிடிக்கிறார்.
சைக்கோ கொலைகாரன் ஒருவன் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை கொலை செய்வதை கண்டறிகிறார். ஆனால் கொலைகாரனை நெருங்கும் ஒவ்வொரு முறையும் அவன் சாதுர்யமாக தப்பிக்கிறான். கடைசியில் அந்த கொலைகாரனை அவர் எப்படி பிடிக்கிறார் என்பதுதான் இந்த வெப் சீரிஸின் கதை. கொலைகாரன் யார் என்ற சஸ்பென்ஸ் முதல் அத்தியாயத்திலேயே உடைந்தாலும், அவரைப் பிடிக்க நடக்கும் போராட்டங்கள் நம்மை சீட் நுனிக்கு கொண்டுசெல்லும்.
ஃபேமிலி மேன் வெப் சீரிஸைப் போலவே துப்பறிவது மட்டுமின்றி, போலீஸாரின் குடும்ப வாழ்க்கை மற்றும் பிரச்சினைகளைப் பற்றியும் இந்த சீரிஸ் பேசுகிறது.
ஆங்காங்கே வரும் ஆபாச காட்சிகளை மட்டும் நீக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
தி மதர் (The Mother – ஆங்கிலம்) – நெட்பிளிக்ஸ்
மகளுக்காக ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் ஒரு தாயின் கதைதான் தி மதர். ஜெனிபர் லோபஸ் நடித்துள்ள இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
அமெரிக்க ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றிய ஜெனிபர் லோபஸ், ஒரு கட்டத்தில் அதையெல்லாம் விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார். இந்த சூழலில் தனது மகளுக்கு எதிரிகளால் ஆபத்து வர ஆக்ஷன் அவதாரம் எடுத்து மகளைக் காப்பாற்றுகிறார்.
ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த மாசாலா படங்களை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.
பகலும் பாதிராவும் (Pakalum Pathiravum -மலையாளம்) – ஜீ5
நக்சலைட் தீவிரவாதிகள் ஊடுருவியதாக போலீஸார் சந்தேகிக்கும் கிராமத்தில் ஒரு வீட்டுக்கு ஒரு வழிபோக்கன் வருகிறான். சந்த்தர்ப்ப வசத்தால் அவன் அங்கு இரவில் தங்க நேரிடுகிறது. அந்த வீட்டில் அப்பா, அம்மா, மகள் ஆகிய மூவர் மட்டுமே இருக்கிறார்கள்.
அந்த வழிபோக்கனின் பை நிறைய பணமும் நகைகளும் இருப்பதைப் பார்த்த மகள், அப்பா மற்றும் அம்மாவின் உதவியுடன் அவரைக் கொன்று அவற்றை கொள்ளையடிக்க திட்டமிடுகிறாள். அவர்களால் அவனைக் கொல்ல முடிந்ததா? அந்த வழிபோக்கன் யார்? என்பதுதான் படத்தின் கதை.
குஞ்சாக்கோ கோபன், ரஜிஷா விஜயன் நடித்துள்ள இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.
சொப்பன சுந்தரி (தமிழ்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
நகைக்கடையில் நடத்தப்பட்ட குலுக்கலில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு கார் பரிசாக கிடைக்கிறது. அதனால் ஏற்பட்ட சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் அவரது அண்ணன் கருணாகரன், காருக்கு உண்மையான சொந்தக்காரன் நான்தான் என்று சொந்தம் கொண்டாடுகிறான். இதைத்தொடர்ந்து பல குழப்பங்கள் நடக்கின்றன. அந்த கார் கடைசியில் யாருக்கு கிடைத்தது என்பதை நகைச்சுவையுடன் சொல்கிறது படம்.
சீரியஸ் படங்களாக தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு மாறுதலுக்காக இந்த நகைச்சுவை படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு துணையாக கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, தீபா உள்ளிட்டோரும் ரசிகர்களை சிரிக்கவைக்க முயன்றிருக்கிறார்கல்.