டிடி ரிட்டர்ன்ஸ் (தமிழ்) – ஜீ 5
தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 வரிசையில் பேயுடன் கூட்டணி அமைத்து சந்தானம் மற்றும் அவரது குழுவினர் எடுத்துள்ள மற்றொரு பேய் பிளஸ் காமெடி படம்தான் டிடி ரிட்டர்ன்ஸ்.
புதுச்சேரியில் ஒதுக்குப்புறமாக இருக்கிறது ஒரு பிரெஞ்சு மாளிகை. இதற்குள் நுழையவே மக்கள் அஞ்சுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் அந்த மாளிகையில் வாழ்ந்த குடும்பத்தினர் அங்கு ‘வாழ்வா சாவா’ என்ற விளையாட்டுப் போட்டியை நடத்தி ஏராளமானவர்களை கொன்று அவர்களின் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். இது வெளியில் தெரிந்ததும் ஊர் மக்கள் அவர்களைக் கொல்கிறார்கள். அதன் பிறகு அந்த குடும்பத்தினர் பேயாக மாறி, அதற்குள் வாழ்ந்து வருகிறார்கள். யதேச்சையாக அந்த மாளிகைக்குள் நுழைந்து அவர்களிடம் சிக்கும் சந்தானமும் மற்றவர்களும் எப்படி தப்புகிறார்கள் என்பதை விலா நோக சிரிக்கவைத்து சொல்லியிருக்கிறார்கள்.
வழக்கமாக படத்தின் நாயகர்கள் தாங்கள்தான் அதிகம் ஸ்கோர் செய்யவேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் இப்படத்தில் சந்தானம் அப்படி நினைக்காமல் அனைவருக்கும் சம்மான வாய்ப்புகளை அள்ளி வழங்கியிருக்கிறார். அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன் உள்ளிட்டோரும் படம் முழுக்க நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.
லாஜிக்கையெல்லாம் பார்க்காமல் சிரிப்பதற்காக மட்டும் 2 மணிநேரத்தை ஒதுக்குவதாக இருந்தால் இப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.
கன்ஸ் அண்ட் குலாப் (Guns & Gulaabs – இந்தி வெப் சீரிஸ் – நெட்பிளிக்ஸ்)
தி பேமிலி மேன், ஃபர்சி ஆகிய வெப் சீரிஸ்களை எடுத்த இயக்குநர்களான ராஜ் & டிகே கூட்டணியின் புதிய வெப் சீரிஸ்தான் கன்ஸ் அண்ட் குலாப். துல்கர் சல்மான், ராஜ்குமார் ராவ், சதீஷ் கவுசிக் உள்ளிட்ட பலர் இந்த வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை கடத்துவதற்கான டீலிங்கை தாங்கள்தான் முடிக்க வேண்டும் என்பதில் 2 குழுக்கள் தீவிரமாக களம் இறங்குகின்றன. இதற்காக 2 குழுக்களையும் சேர்ந்த பலர் உயிரை இழக்கிறார்கள். இவர்களுக்கு நடுவில் போதைப் பொருள் தடுப்புத் துறை அதிகாரியான துல்கர் சல்மான், இரு குழுக்களையும் ஓரம்கட்டி சட்டத்துக்கு புறம்பான வழியில் தான் இந்த டீலிங்கை முடிக்க நினைக்கிறார். இந்த 3 தரப்புக்கும் இடையிலான போட்டியை கொஞ்சம் க்ரைம், கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் காதல் என்று கலந்து சொல்லியிருக்கிறது ராஜ் & டிகே கூட்டணி. இந்த தொடரை நெட்பிளிக்ஸில் தமிழிலும் பார்க்கலாம்.
அருவருப்பான காட்சிகளைக் கொண்ட வெப் சீரிஸ்கள் நிறைந்த சூழலில், இதில் அத்தகைய காட்சிகள் இதில் குறைவாக இருப்பது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. அதனால் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம்.
ராக்கெட் பாய்ஸ் (Rocket Boys – இந்தி வெப் சீரிஸ்) – சோனி லைவ்
சந்திராயன் 3 வெற்றியால் ஒட்டுமொத்த இந்தியாவும் காலரை துக்கி விட்டுக்கொண்டிருக்கும் காலம் இது. இந்த காலகட்ட்த்தில் நம் வீட்டு குழந்தைகளுக்கு நாம் அவசியம் காட்டவேண்டிய வெப் சீரிஸ் ‘ராக்கெட் பாய்ஸ்’.
இஸ்ரோ அமைப்பு தொடங்கியது எப்படி?, இதற்காக ஹோமி ஜஹாங்கிர் பாபா, விக்ரம் சாராபாய் உள்ளிட்ட விஞ்ஞானிகள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்கள் என்பதை துளிகூட போர் அடிக்காமல் சுவாரஸ்யமான கதையாக சொல்லி இருக்கிறார்கள்.
ஆபாச காட்சிகள் நிறைந்த வெப் சீரிஸ்களின் நடுவில் அறிவுபூர்வமான ஒரு தொடராக ராக்கெட் பாய்ஸ் ஜெயிக்கிறது.
டியர் வாப்பி ( Dear Vaappi – மலையாளம்) – மனோரமா மேக்ஸ்
ஆடைகளை வடிவமைப்பதில் வல்லவரான லால், குடும்ப சூழலால் ஒரு சாதாரண தையல்காரராக வேலை பார்க்கவேண்டி இருக்கிறது. வயதான பிறகு ஊருக்கு வரும் லால், மகள் அனகா நாராயணன் உதவியுடன் தன் கனவை நிறைவேற்ற விரும்புகிறார். மகள் பெயரில் ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை தொடங்குகிறார். ஆனால் அந்த நிறுவனம் வளர்வதற்குள் இறந்துவிடுகிறார்.
தந்தை இறந்த பிறகு, அவரது கனவுகளை நனவாக்க அந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்துகிறார் மகள் அனகா. அவரால் அந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நட்த்த முடிந்ததா? அதற்கு குறுக்கே வந்த சவால்களை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதை ஒரு ஃபீல் குட் மூவியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஷான் துளசி.
மனதுக்கு நம்பிக்கையளிக்கும் கதையைக் கொண்ட படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.