No menu items!

நான் உயிரோடுதான் இருக்கிறேன்! – வயநாடு வைரல் இளைஞர்

நான் உயிரோடுதான் இருக்கிறேன்! – வயநாடு வைரல் இளைஞர்

கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டத்தின் சூரல்மலை, முண்டகை பகுதிகளில் 30-07-2024 அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்த நிலச்சரிவின் துயரத்தை கூறும் விதமாக பல புகைப்படங்கள், வீடியோகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி வருகின்றன. அதில் ஒன்று, சூரல்மலையில் ஒரு சிதைந்த வீட்டில் எடுக்கப்பட்ட மேலேயுள்ள புகைப்படம். சிதைந்த வீட்டின் சகதியின் நடுவே ஃப்ரேம் செய்யப்பட்ட இந்த புகைப்படம் கிடக்கிறது. அதில் ஒரு சகோதரன் தன் இரு சகோதரிகளை கட்டியணைப்பது போன்ற காட்சி. புகைப்படத்தில் இருந்தவர்கள், இறந்துவிட்டதாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அந்த புகைப்படம் இருந்த நிலையைப் பார்த்து, அவர்கள் இறந்துவிட்டதாக கருதியே பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர்.

வயநாடு துயரம் நிகழ்ந்து நான்கு நாட்களான நிலையில்தான், மேப்படி பள்ளிக்கூடத்தில் உள்ள முகாமில் தங்கியிருந்த தீரஜ் என்ற இந்த புகைப்படத்தில் இருந்த இளைஞருக்கும் புகைப்படம் வந்து சேர்ந்தது. அதன்பின்னர்தான், தானும் தனது குடும்பத்தினரும் இறந்துவிட்டதாக பலரும் கருதுவது அவருக்கு தெரிந்தது.

இதனையடுத்து ஊடகங்களை தொடர்புகொண்ட தீரஜ் தனது நிலையை விளக்கினார். “திடீரென என் புகைப்படம் செய்தித் தாள்களில் வருகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்படுகிறது. எல்லோருமே நாங்கள் இறந்துவிட்டதாகக் கருதி பச்சாதாபம் தெரிவிக்கிறார்கள். சிறிது நேரத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

தந்தையை இழந்துவிட்ட எனக்கு 19 வயதாகிறது. என் தாய் சுமிஷாவுடன் சூரல்மலையில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றுக்கு அருகில் வசித்து வந்தேன். கடந்த வாரம் செவ்வாய்கிழமையன்று இரவில் பெரும் சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டதும், என் வீட்டிலிருந்து என் தாய் மற்றும் உறவினர்களுடன் வெளியேறினேன். அருகில் இருந்த மற்றொரு உறவினரின் வீட்டிற்குச் சென்று தங்கிக்கொண்டோம்.

அடுத்த நாள் காலையில், நிலச்சரிவில் எங்கள் வீடு முற்றிலும் அழிந்தவிட்டதைப் பார்த்தோம். என் தாயுடன் மேப்படி முகாமுக்கு வந்துவிட்டேன். இந்நிலையில்தான், எங்கள் புகைப்படம் வைரலானதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

அது என் சகோதரிகளின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். எங்கள் ஷெல்ஃபில் வைத்திருந்தோம். யார் போட்டோ எடுத்தது எனத் தெரியவில்லை. என்னால் அங்கே போகவும் முடியவில்லை. மற்றவர்கள் சொல்லித்தான் எனக்கு இது தெரியவந்தது.

என் ஃபோனில் டிஸ்ப்ளே போய்விட்டது. இதைப் பற்றியே எனக்குத் தெரியாது. நான் முகாமிற்கு வந்த பிறகு, என் நண்பர்கள் சொல்லித்தான் தெரியவந்தது. சர்வதேச ஊடகங்கள், இன்ஸ்டாகிராமில் எல்லாம் வெளியானது. நாங்கள் இறந்துவிட்டதாக அதில் சொல்லவில்லை என்றாலும் இப்படி புகைப்படம் வந்ததும் நாங்கள் காணாமல் போய்விட்டதாக எல்லோரும் பதறிவிட்டார்கள். எல்லோரும் அதை பரப்பவும் செய்தார்கள்.

அந்த புகைப்படத்தில் நானும் எனது சகோதரிகள் இருவரும் இருக்கிறோம். ஒருவர் பெயர் த்ரிஷ்யா, மற்றொருவர் பெயர் தீப்தி. மூத்த சகோதரியான த்ரிஷ்யாவின் திருமணம் இந்த ஆண்டு ஏப்ரலில் நடந்தபோதுதான் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. இப்போது த்ரிஷ்யாவும் அவரது கணவரும் கேரளாவின் புல்பல்லியில் வசித்து வருகின்றனர். புகைப்படத்தில் இருக்கும் மற்றொரு சகோதரியான தீப்தி, திருவனந்தபுரத்தில் கேரளா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

அவர்கள் இருவரும் நிலச்சரிவு நடந்த இடத்திலேயே இல்லை. இந்தப் புகைப்படம் வெளியானதை இருவருமே பார்த்திருக்கிறார்கள். அவர்களும் நானும் அம்மாவும் இறந்துவிட்டதாக கருதியிருப்பார்கள். நாங்கள் பாதுகாப்பாக இருப்பதைச் சொல்ல முயற்சி செய்தோம். உடனடியாக அது முடியவில்லை. இப்போது அவர்களுக்கு அது தெரியும். நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். அதில் ஒரு குழப்பமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது தீரஜ் தனது தாய சுமிஷாவுடன் மேப்படி பள்ளிக்கூடத்தில் உள்ள முகாமில் தங்கியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...