No menu items!

வயநாடு நிலச்சரிவு – தமிழ்நாடு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

வயநாடு நிலச்சரிவு – தமிழ்நாடு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவின் கோரமும் சேதமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் நிலச்சரிவுகள், பெருவெள்ளம் என பேரிடர்கள் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டில் மலை நகரங்கள் இதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?

வயநாடு நிலச்சரிவுக்கு என்ன காரணம்?

நிலச்சரிவு ஏற்படுவதுக்கு கனமழை, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை காரணங்கள் மட்டுமல்லாமல் ஆக்கிரமிப்புகள், காடுகள் அழிப்பு, பயிர் முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட காரணங்களும் முக்கியமானவை. தற்போது வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுக்கு முதல் காரணம் கனமழை, இரண்டாவது காரணம் காடுகள் அழிப்பு என்கின்றனர் நிபுணர்கள்.

குறிப்பாக, வருடம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை, ஒரே சில நாட்களில் தொடர்ந்து கொட்டி வெள்ளப் பெருக்கை உருவாக்குவது கடந்த சில வருடங்களாக அதிகரித்துள்ளது. இதற்கு புவி வெப்பமயமாதலையே காரணமாக சூழியல் விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

இது தொடர்பாக காந்திநகர் ஐஐடி மேற்கொண்ட ஆய்வில், “இந்த நூற்றாண்டில் பூமியின் வெப்பம் 2.6 முதல் 8.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். குறிப்பாக இந்தியாவில் தென்னிந்திய மாநிலங்களில் வெப்பம் அதிகரிக்கும். இதனால் தென்னிந்தியா கடுமையான சீதோஷண மாற்றத்திற்கு உள்ளாகும். அதிகளவில் மழை, வெப்பம் என்று சீதோஷண மாற்றங்கள் ஏற்படும். தென்னிந்திய மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டு, மாநில எல்லைகள் மாறும் சூழல்கூட ஏற்படலாம். இவற்றை தடுக்க வேண்டும் என்றால், முதலில் கார்பன்டை ஆக்சைடு வெளியாவதை குறைத்து, இயற்கையை பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புனேவைச் சேர்ந்த இந்திய நிறுவனத்தின் வெப்ப மண்டல அறிவியல் அறிஞர் ரோக்சி மாத்யூவும், “சீதோஷண மாற்றம் காரணமாக வெள்ளம் அதிகரிக்கவே செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

புவி வெப்ப மயமாதல் காரணமாக இப்போதெல்லாம் இயற்கை சீற்றங்கள் பெரும்பாலும் நம்மால் கணிக்க முடியாதவையாக இருக்கின்றன. வானிலை ஆராய்ச்சி ஆய்வு மையங்கள் கணித்துக் கூறினாலும் பல நேரங்களில் அந்த கணிப்பு மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீதோஷண நிலை மாற்றம் காரணமாக கேரளா, கர்நாடகா மாநிலங்களின் சில இடங்களில் மட்டும் அதிக மழை பெய்யும் அதே நேரத்தில் மற்ற இடங்களில் வறட்சி ஏற்படுகிறது. இங்கெல்லாம் கடந்த பல ஆண்டுகளில் குறைவான பருவ மழையே பெய்துள்ளது.

புவியியல், சுற்றுச்சூழல் மேலாண்மை மையத்தின் வானியல் ஆராய்ச்சியாளரும் கேரளாவைச் சேர்ந்தவருமான வேணுஜீ, “1960கள் தொட்டே பருவமழை மாற்றம் அடையத் தொடங்கிவிட்டன. அதன் உச்சத்தை நாங்கள் 2018இல் அடைந்தோம். இதற்கு பசிபிக் பெருங்கடலில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் முக்கியக் காரணம். இந்தியப் பெருங்கடலுக்கு வெப்பத்தைக் கடத்தும் போது, பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பின் வெப்பநிலை வெகுவாக குறைகிறது. இதன் விளைவாக இந்தியாவின் தென்மேற்கு பருவமழையின் முறையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் பழைய நிலைக்கு திரும்புமா என்று கேட்டால், அது நடக்காது என்பதுதான் என் கருத்து. 1970களில் இருந்தே உலகளவில் கடலில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. இதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. கடல் வெப்பமாவதை அடுத்து, வெப்பமண்டல நாடுகள் அனைத்தும் வெள்ளத்தால் தங்கள் பகுதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் என ‘காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையிலான குழு’அளித்துள்ள அறிக்கை கூறுகிறது. உலக வெப்ப மயமாதல் வெப்பமண்டல பகுதிகளையே மோசமாகப் பாதிக்கிறது. இதனால், பருவமழைக் காலங்களில் இனி அதிகமான மழையே பெய்யும். இப்போது நமக்கிருக்கும் ஒரே வழி, உலகளவில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதுதான்” என்கிறார்.

புவி வெப்பமயமாதல் காரணமாக வெள்ளம் உருவாவதால் ஏற்படும் பாதிப்பு ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் மலைப் பிரதேசங்களில் வாழ்பவர்கள் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கேரளாவில் 2019ஆம் ஆண்டு 83 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆகஸ்ட் 7 மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் வயநாடு மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்கள் வசிக்கும் மேப்படி என்ற ஒரு கிராமமே புதையுண்டு போய்விட்டது. அந்த நிலச்சரிவுகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நிகழ்ந்த சுற்றுச்சூழல் சீர்கேடுகளாலேயே உருவாகியிருக்கிறது என்று, நிலச்சரிவை தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கேரளாவின் வனவியல் ஆராய்ச்சி மையத்தின் தலைமை விஞ்ஞானி டி.வி.சஞ்சீவ், 2019 மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சேதங்களைப் பற்றி ஆராய்ந்து, எங்கெல்லாம் நிலச்சரிவுகள் நிகழ்ந்ததோ அங்கெல்லாம் அம்மலையின் மறுபக்கம் கிரானைட் குவாரிகள் அமைந்துள்ளது என்று தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் ஏற்படும் பேரிடர்களைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கண்டறிய சூழலியல் ஆய்வாளர் மாதவ் காட்கில் தலைமையில் 13 பேர் கொண்ட ஆய்வுக்குழுவை 2010ஆம் ஆண்டு அமைத்தது இந்திய அரசு. அந்த ஆய்வுக்குழு, 2011ஆம் ஆண்டு இந்திய அரசிடம் 522 பக்கங்களுக்கு ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது.  அந்த அறிக்கையில், கடந்த 2011ஆம் ஆண்டு தன் அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில் மேற்குத் தொடர்ச்சி மலை தொடர்களில் இயங்கி வரும் 91 குவாரிகள் சட்டரீதியாக இயங்கினாலும், அவை சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியமான இடங்களில் இயங்குபவை என்றும், அதனால் நிலச்சரிவுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அவை அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டும் என்று கூறியிருந்தது.

மாதவ் கட்கில் அறிக்கையில் நிலச்சரிவுகள் நிகழக்கூடிய பகுதி என்று குறிப்பிடப்பட்டிருந்த 11 இடங்களில் 2019இல் 10 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.


சஞ்சீவ் ஆராய்ச்சி படி கேரளத்தில் ஒரு பஞ்சாயத்திற்கு ஆறு குவாரிகள் வீதம் மொத்தம் 5,924 குவாரிகள் மாநிலம் முழுவதும் படர்ந்துள்ளன. இதில் 3,332 குவாரிகள் சுற்றுச்சூழல் ரீதியாக மிக முக்கியமான இடங்களில் அமைந்துள்ளதாக கட்கில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஏறத்தாழ 56 சதவிகித குவாரிகள் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் அமைந்துள்ளன.

மலப்புரம் மாவட்டத்தில் காவளப்புரா என்னும் பகுதியில், ஒரு குவாரி இருக்க வேண்டிய இடத்தில் ஐந்து குவாரிகள் இருந்தன. மொத்தம் ஐந்து கி.மீ. பரப்பளவில் 27 குவாரிகள் என மிகவும் குறுகிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. 2019இல் அங்குதான் கேரளத்தின் மிகப்பெரிய நிலச்சரிவு நிகழ்ந்தது.

வயநாட்டின் மெப்பாடியில் 2019இல் 100 ஏக்கர் பரப்பளவு தேநீர் தோட்டம் நிலச்சரிவால் மொத்தமாக அழிந்தது. இம்மலைக்குப் பின்புறம் ஒரு குவாரி பயன்பாட்டிலிருந்தது குறிப்பிடத்தக்கது. குவாரிகளில் வெடி வெடிக்கும்போது ஏற்படும் அதிர்வுகளால் மலைக் குன்றுகள் பலவீனம் அடைகின்றன. மலைப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட கட்டுமானப் பணிகளால் நீர் வழித்தடங்கள் தடுக்கப்பட்டு ஆறுகள் பாதை மாறியுள்ளதும் நிலச்சரிவுகளுக்குக் காரணமாகியுள்ளது.

இவையெல்லாம் நமக்கு தெரிவிப்பது, நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்பது ஒன்றுதான். அது, இயற்கையை அழிப்பதை நாம் உடனடியாக நிறுத்திக்கொள்ள என்பதுதான். இல்லையென்றால், இயற்கை நம்மை அழிப்பதை தடுக்க முடியாது!

“கடந்த கால தவறுகளில் இருந்து கேரளா பாடம் கற்றுக்கொள்ளாததன் விளைவை இன்று வயநாட்டில் அப்பாவி மக்கள் அனுபவிக்கின்றனர்.  காடுகள் அழிப்பால், கடந்த 40 வருடங்களில், 9000 சதுர கிலோமீட்டர் காடுகளை கேரளா இழந்துள்ளது” என்று கூறுகிறார் வயநாட்டில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் விஞ்ஞானி தன்யா.

“மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் எங்கெல்லாம் என்னென்ன சூழலியல் பிரச்னைகள் இருக்கின்றன, அவை அதன் சுற்றுச்சூழல் சமநிலையை, மக்களின் வாழ்வியலை எப்படிப் பாதிக்கின்றன என்று முழுமையாக ஆராய்ந்து, அதைச் சரிசெய்ய எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை  மாதவ் கட்கில் குழு அறிவுறுத்தியது. ஆனால், அந்த அறிக்கையை இந்திய அரசாங்கமும் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாநிலங்களின் அரசுகளும் நிராகரித்தன.

பின்னர், ஆய்வாளர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மற்றுமொரு குழுவை நியமித்தது இந்திய அரசு. அவர்கள் 2013ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால், கர்நாடகா, கேரளா போன்ற பெரும்பாலான மாநில அரசுகள் அந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

2021-ல் இந்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், மேற்குத்தொடர்ச்சி மலையின் சூழலியல் பாதுகாப்பிற்காக, கஸ்தூரி ரங்கன் குழு சமர்ப்பித்த அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து இணையவழிக் கூட்டம் ஒன்றை நடத்தியது. ”மேற்குத்தொடர்ச்சி மலையை உணர்திறன் மிக்க சூழலியல் மண்டலமாக அறிவிப்பது அப்பகுதி வாழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். அதனால் கர்நாடக அரசும் அப்பகுதியில் வாழும் மக்களும் இந்த அறிக்கையை அமல்படுத்துவதை எதிர்க்கிறோம்” என கூட்டத்தில் கலந்துகொண்ட அப்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.

மாதவ் காட்கில் குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கை, மேற்கு மலைத்தொடர் முழுவதையுமே மூன்று சூழலியல் மண்டலங்களாகப் பிரிக்கவேண்டும் எனப் பரிந்துரைக்கிறது. சூழலியல் மண்டலம் 1-ல் மேலதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், சூழலியல் மண்டலம் 2-ல் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மற்றும் சூழலியல் மண்டலம் 3-ல் முக்கியமான சூழலியல் பகுதிகள். இதில், முதல் இரண்டு சூழலியல் மண்டலங்களில் மொத்த மலைத்தொடரின் 75 விழுக்காடு பகுதி வருகிறது.

மண் அரிப்பிற்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் ஒற்றைப் பயிர் சாகுபடியைக் கைவிடவேண்டும். காலாவதியான அணைகள், அனல்மின் நிலையங்கள் தொடர்ந்து செயல்படுவதைத் தடுக்கவேண்டும். காட்டு நிலங்களை வேறு பயன்பாடுகளுக்குத் திருப்புதல், நதிகளின் போக்கை திசைதிருப்புதல் போன்றவற்றைச் செய்யக்கூடாது. அகழ்விடங்கள், சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களை மேற்குத்தொடர்ச்சி மலைக்குள் அனுமதிக்கவே கூடாது. கேரளாவில் பாயும் சாலக்குடி நதியில் மாநில மின் வாரியம் திட்டமிட்டுள்ள அதிரப்பள்ளி நீர்மின் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்கிறது.

ஆனால், மாதவ் கட்கில் குழு மட்டுமல்லாமல் இதுபோல் கடந்த காலத்தில் முறையான ஆய்வுகள் செய்யப்பட்டு எவ்வளவோ பரிந்துரைகள் நிபுணர் குழுக்களால் அளிக்கப்பட்டும் அதற்கு அரசுகள் செவிசாய்க்கவில்லை” என்கிறார் தன்யா.

தமிழ்நாடு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

வயநாடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஓசை காளிதாஸ், வயநாடு நிலச்சரிவு தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திற்கு ஒரு எச்சரிக்கை மணி என்று கூறியுள்ளார்.

“வயநாட்டிற்கு அடுத்தபடியாக நீலகிரி இத்தகைய நிலச்சரிவு ஆபத்தில் இருக்கிறது. எல்லா இடங்களிலும் மனிதர்கள் சென்று வாழ வேண்டும் என நினைப்பதே தவறு. குறிப்பாக நீலகிரியில் கணக்கற்ற கட்டிடங்கள், சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் கட்டப்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பசுமையாகத் தெரியும் தேயிலைத் தோட்டங்கள் என்பது காடுகள் அல்ல, அவை வெறும் பசும் பாலைவனங்களே. இதை முதலில் நாம் உணர வேண்டும்.

இயற்கை பேரிடர்களை நம்மால் தடுக்க முடியாதுதான். ஆனால், அதன் தீவிரத்தைக் குறைக்கவும், மேற்கு தொடர்ச்சி மலையைக் காப்பற்றவும் நம்மால் முடியும். ஆங்கிலேயர்கள் காடுகளை அழித்து, தோட்டங்களாக மாற்றினார்கள். இப்போது நாம் அதை கட்டிடங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். அதன் கோர விளைவுதான் வயநாடு நிலச்சரிவு போன்ற சம்பவங்கள்.

அதிகமான மனித உயிர்களையும் காடுகளையும் இழந்துவிட்டோம், இப்போதாவது மாதவ் காட்கில் குழுவின் பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும்” என்கிறார் ‘ஓசை’ காளிதாஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...