கிரிக்கெட் வீர்ர்களை நம் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் ஆவர்களுக்கு என்ன பிடிக்கும்? குறிப்பாக எதைச் சாப்பிடப் பிடிக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்..
விராட் கோலி:
இந்திய கிரிக்கெட் வீர்ர்களிலேயே உணவு விஷயத்தில் அதிக கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பவர் விராட் கோலி. கடந்த சில ஆண்டுகளாக அசைவ உணவுகளைத் தவிர்க்கும் விராட் கோலி, அதில் முட்டையை மட்டும் சாப்பிடுகிறார். கீரை மற்றும் காய்கறிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விராட் கோலிக்கு சாட் ஐட்டம் என்றால் உயிர். உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால் நாளொன்றுக்கு 2 காபிக்கு மேல் குடிப்பதில்லை.
கோலி அதிகமாக விரும்பிச் சாப்பிடுவது சோளா படூரா. டெல்லியில் உள்ள சிவில் லைன் வாலா என்ற கடையில் அடிக்கடி தனக்கு பிடித்த சோளா படூராவை வாங்கிச் சாப்பிடுவது விராட் கோலியின் வழக்கம். “சோளா படுராவை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும். அதனால் எப்போதெல்லாம் சோளா படூராவைச் சாப்பிடுகிறோமோ, அப்போதெல்லாம் நானும் அனுஷ்காவும் உடற்பயிற்சிக்காக கூடுதல் நேரத்தை செலவிடுவோம்” என்கிறார் விராட் கோலி.
ரோஹித் சர்மா:
விராட் கோலிக்கு நேர் எதிரானவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. உணவு விஷயத்தில் அவர் எந்த கட்டுப்பாட்டையும் கடைப்பிடிப்பதில்லை. பிடித்த உணவுகளை இஷ்டத்துக்கு சாப்பிடுவார். பின்னர் உடல் எடையைக் குறைக்க ஜிம்மில் அதிக நேரத்தைச் செலவிடுவார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரோஹித் சர்மாவுக்கு, அம்மாநிலத்தைச் சேர்ந்த சாட் ஐட்டமான வடா பாவ் மிகவும் பிடிக்கும். தினமும் ஒரு முறையாவது தான் வடா பாவைச் சாப்பிடுவதாக பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார் ரோஹித் சர்மா.
ரவீந்திர ஜடேஜா:
சிஎஸ்கே சிங்கங்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜாவுக்கு ராஜ்காட் நகரில் ’ஜாதூஸ் ஃபுட் பீல்ட்’ என்ற ரெஸ்டாரண்ட் இருக்கிறது. இதில் சவுராஷ்டிரா வகை உணவுகளைப் பரிமாறுகிறார்கள். கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நாளில் ஜடேஜா இந்த ரெஸ்டாரெண்டை கவனித்துக்கொள்கிறார். ஜடேஜா ஊரில் இல்லாத நாட்களில் அவரது சகோதரி இந்த ரெஸ்டாரண்டைப் பார்த்துக் கொள்கிறார்.
தனது ரெஸ்டாரண்டில் சவுராஷ்டிர வகை உணவுகளை விற்றாலும், ஜடேஜாவுக்கு பஞ்சாபி வகை உணவுகள்தான் பிடிக்கும். குறிப்பாக டால் மக்கானியை அதிகம் விரும்பிச் சாப்பிடுவார்.
ஹர்த்திக் பாண்டியா:
பொதுவாக உப்புமாவைப் பிடிப்பவர்களின் என்ணிக்கை மிகவும் குறைவு. இடலி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, பட்டர் நான் போன்ற டிபன் வகைகளை விரும்பிச் சாப்பிடுபவர்கள் அதிகம். ஆனால் உப்புமாவை பலருக்கு பிடிக்காது.
அந்த உப்புமாவின் இன்னொரு வடிவமான கிச்சடிதான் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனும், இந்தியாவின் நம்பர் ஒன் ஆல்ரவுண்டருமான ஹர்த்திக் பாண்டியாவுக்கு பிடித்த உணவு. ”கிச்சடி சாப்பிடுவதும், அதன் பிறகு ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதும்தான் என் ஆரோக்கியத்தின் சீக்ரெட்’ என்று பேட்டி ஒன்றில் விளையாட்டாக கூறியுள்ளார் ஹர்த்திக் பாண்டியா.
ரிஷப் பந்த்:
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். பேட்டிங்கில் விராட் கோலியின் ஸ்டைலில் ஆடித்து ஆடுவது ரிஷப் பந்த்தின் ஸ்டைல். பேட்டிங்கைப் போலவே விராட் கோலியின் ஃபேவரைட் உணவான சோளா படூராதான் ரிஷப் பந்த்துக்கும் பிடித்த உணவு.
சாஹல்:
குறுகிய கால போட்டிகளில் இந்தியாவின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளரான சாஹலுக்கு சாட் ஐட்டம் என்றால் உயிர். அதிலும் சாட் ஐட்டங்களில் ஒன்றான பானி பூரி அவருக்கு மிகவும் பிடித்த உணவு. அதுபோல் டெல்லியின் சாட் ஐட்டமான சோளா குல்சாவையும் அதிகம் விரும்பிச் சாப்பிடுவார் சாஹல்.