No menu items!

லொள்ளூ சபா மனோகருக்கு பதில்தான் விஜய் சேதுபதி!

லொள்ளூ சபா மனோகருக்கு பதில்தான் விஜய் சேதுபதி!

தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில், ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படம் டிசம்பர் 13 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சண்முகம் சினிமாஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார். இந்தப்படத்தின் பாடல் வெளீயீட்டு விழாவில்

படத்தின் தயாரிப்பாளர் சி. வி. குமார் பேசுகையில், ”சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தை எடுக்கும் போதே சூது கவ்வும் 2 ஐடியா இருந்தது. படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் நலனிடம் கேள்வி ஒன்றைக் கேட்டேன். இந்த திரைப்படம் மரபுக்கு மீறியதாக இருக்கிறது. இது தொடர்பாக விமர்சனங்கள் வருமே எனக் கேட்டேன். அவரும் இந்த திரைப்படத்தை நிச்சயமாக விமர்சனம் செய்வார்கள் என்றார். அவர் சொன்னது போல் இந்த படம் வெளியான பிறகு மக்கள் கொண்டாடினார்கள். ஆனால் ஊடக நண்பர்களும், திரைத்துறையை சேர்ந்தவர்களும் தவறான முன்னுதாரண படம் என நிறைய விமர்சித்தார்கள். அப்போது அவர்களிடம் இதை நான் ஒரு படமாக உருவாக்கவில்லை. மூன்று படமாக மூன்று பாகமாக உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம். இந்தப் படத்திற்குப் பிறகு ‘சூது கவ்வும் 2’ என்று எடுக்க வேண்டும் அதற்கு பிறகு மூன்றாவது பாகமாக ‘சூது கவ்வும் -தர்மம் வெல்லும்’ என்ற பெயரில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று சொன்னேன். அப்போதுதான் இது நிறைவு பெறும் என விளக்கமும் கொடுத்தேன்.

நலன் குமாரசுவாமியிடம் இது தொடர்பாக பேசும் போது ஒரு கட்டத்தில் சூது கவ்வும் 2 ‘ படத்திற்கான கதையை எழுத முடியவில்லை என்றும், சில ஆண்டுகள் கழித்து இதை மீண்டும் உருவாக்கலாம் என்றும் சொன்னார். ‘காதலும் கடந்து போகும்’ படத்தை தொடங்குவதற்கு முன் ‘சூது கவ்வும் 2’ என்று தான் அந்த படத்தை தொடங்கினேன். காதலும் கடந்து போகும் படத்தை நிறைவு செய்த பின் நலன் குமாரசாமியிடம் மீண்டும் ‘சூது கவ்வும் 2 ‘ எப்போது தொடங்கப் போகிறோம் என கேட்டேன். அப்போது அவர் மற்றொரு தயாரிப்பு நிறுவனத்திற்காக ‘வா வாத்தியார்’ என்ற பெயரில் ஒரு திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன் என சொன்னார். அத்துடன் நம் குழுவுடன் ‘சூது கவ்வும் 2’ படத்தின் கதையை எழுதத் தொடங்குங்கள் என்றார். அந்தத் தருணத்திலேயே அவர் சூது கவ்வும் 2 படத்தின் கதை எப்படி இருக்க வேண்டும் என்பதை சுருக்கமாக சொன்னார்.

சூது கவ்வும் 2 படத்தின் திரைக்கதையை யாரால் சரியாக எழுத முடியும் என்று நினைத்தபோது அர்ஜுன் வந்தார். அப்போது அவர் ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’, மற்றும் ‘ராட்சசன்’ படத்தின் திரைக்கதையில் பங்களிப்பு செய்திருந்தார். அவரிடம் நல்ல காமெடி சென்ஸ் உண்டு. அதன் பிறகு ஒரு குழுவை உருவாக்கி 2019ம் ஆண்டில் இப்படத்தின் திரைக்கதையை எழுதத் தொடங்கினோம்.

தமிழ் சினிமாவில் தற்போது பார்ட் 1 பார்ட் 2 பார்ட் 3 என பல படங்கள் வந்திருக்கிறது. சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் அதே கதாபாத்திரங்கள் 25 வருடங்களுக்குப் பிறகு என்று இருந்தது. இதுவும் அதே போன்றதொரு படம்தான். டைட்டில் மட்டும் வைத்துக்கொண்டு வேறு கதை வேறு ஹீரோ என்பது போல் இல்லை. சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் தான் இந்த இரண்டாம் பாகத்திலும் இருக்கிறார்கள்.

2013ம் ஆண்டில் சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தை எடுத்தோம். ‘சூது கவ்வும் 2’ திரைப்படம் 1990களில் தொடங்கி 2013 கடந்து 2024 ஆண்டில் எப்படி இந்த கதை தொடர்கிறது என்பதுதான் நலன் குமாரசாமி கொடுத்த ஐடியா. அத்துடன் நலன் குமாரசாமி ‘சூதுகவ்வும்- தர்மம் வெல்லும்’ என்ற பெயரில் சூது கவ்வும் படத்தின் மூன்றாம் பாகத்தை எடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தால் தான் சூது கவ்வும் 2 படத்திற்கான அனுமதியை வழங்குவேன் என்றார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இந்தத் திரைப்படம் தான் முதல் ‘ட்ரையாலஜி’ யாக இருக்கும். நலன் குமாரசாமி – ‘சூதுகவ்வும் -தர்மம் வெல்லும்’ என்பது வரை இப்படத்தின் கதையை எழுதி இருக்கிறார்.

இந்தப் படத்திற்கு யார் கதாநாயகன் என்று கேள்வி எழுந்த போது, அவர் லொள்ளு சபாவில் நடித்த மனோகரை தான் கேட்டார். அவரை சொன்னவுடன் நான் முதலில் தயங்கினேன். விஜய் சேதுபதியிடம் இந்த கதையை சொன்னவுடன் அவர் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்தார். இதை நலன் குமாரசாமியிடம் சொன்னபோது அவர் உடனடியாக மறுத்தார். அதன் பிறகு அவரை சமாதானம் செய்வதற்கு எங்களுக்கு ஒரு வாரம் ஆனது. ஆனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு அந்த கதாபாத்திரத்தை தன்னுடைய நடிப்புத் திறமையால் தனித்துவமாக தெரிய செய்தார். அது மிகச்சிறந்த கல்ட் திரைப்படமாக உருவானது.

அந்தப் படத்தில் எப்படி விஜய் சேதுபதி பொருத்தமாக இருந்து வெற்றி பெறச் செய்தாரோ… அதேபோல் இந்த படத்தில் குருநாத் என்ற கதாபாத்திரத்திற்கு மிர்ச்சி சிவா தான் பொருத்தமாக இருப்பார். இந்த கதாபாத்திரம் அசாதாரணமான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தை அவரால் மட்டுமே ஏற்று நடிக்க முடியும் என தீர்மானித்தோம்.

சூது கவ்வும் படத்தை பொருத்தவரை அருமை பிரகாசம் தான் கதையின் நாயகன். மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் அவரை சுற்றி பின்னப்பட்டிருக்கும். இதுதான் நலன் குமாரசாமி சொன்னது. படத்தின் திரைக்கதையை எழுதும்போது கருணாகரனிடம் அந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டேன்.

2017ம் ஆண்டுக்குப் பிறகு எனக்கு ஏழு ஆண்டுகள் கடுமையான நிதி சிக்கல் இருந்தது. இந்த திரைப்படத்தின் கதை நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. இதை அதற்குரிய தரத்துடன் உருவாக்கினால் தான் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று எண்ணிய போது இதற்காக தங்கம் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான தங்கராஜை அணுகி உதவி செய்யுங்கள் எனக் கேட்டேன். அவரிடம் என்னைப் பற்றி பலர் தவறாக சொன்னாலும்.. என் மீது முழு நம்பிக்கை வைத்து, ஆறு கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்து, படத்தினை உருவாக்கி இருக்கிறார். மேலும் 2 கோடி ரூபாய் செலவு செய்து படத்தினை விளம்பரப்படுத்தி வருகிறார். தற்போது இந்த திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட முயற்சி செய்து வருகிறோம்.
வாகை சந்திரசேகர் ஏற்று நடித்திருக்கும் கேரக்டர் விசேஷமானது .அதை பற்றி தற்போது நிறைய விவரங்களை கூற முடியாது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆளுமை மிக்க நட்சத்திரம் முகம் தேவைப்பட்டது. அதற்காக அவரை தேர்வு செய்தோம். அவரும் அதை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்.

இயக்குநர் அர்ஜுன் இந்த படத்தின் திரைக்கதைக்காக மூன்றாண்டுகளை எடுத்துக் கொண்டார். 2019ம் ஆண்டில் கொரோனா தொற்று ஏற்பட்டது. 2022ம் ஆண்டில் திரைக்கதையை நிறைவு செய்தார். 2023ம் ஆண்டில் படப்பிடிப்பு நடைபெற்றது.

நீண்ட நாட்கள் கழித்து என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் உருவான இந்த திரைப்படத்தை பார்க்கும் போது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. இதைப் பற்றி பேசலாம் என்ற நம்பிக்கையும் கொடுத்திருக்கிறது. இந்த திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...