நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை இன்று அறிமுகம் செய்தார். இதன் விழா பனையூரில் இருக்கும் கல்யாண மண்படபத்தில் நடந்தது. காலை 6 மணி முதலே அங்கு ரசிகர்கள் கூட்டம் அவர் வீட்டின் முன் கூட ஆரம்பித்தது. செய்தியாளர்கள் நேரடி ஒளிபரப்பு வாகனங்களுடன் வந்திருந்தனர்.
விஜய்யின் அம்மா ஷோபா, அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் நிகழ்ச்சி நடக்கும் கல்யாண மண்டபத்திற்கு வந்திருந்தனர். வீட்டிலிருந்து காரில் நிகழ்ச்சி அரங்கிற்கு வந்தார் விஜய். அவரது காரை தொடர்ந்து ரசிகர்களும் மீடியாக்களும் தொடர்ந்து வந்தனர். இதனைப் பார்த்த விஜய் ஒரு கட்டத்தில் காரின் கண்ணாடியை பாதியாக இறக்கிவிட்டு கையை வெளியே நீட்டி அவர்களை ஓரமாக வருமாறு எச்சரிக்கை செய்தார்.
சரியாக 9 மணிக்கு அரங்கில் விஜய்யின் கார் நுழைந்தது. அதற்கு முன்பே அனைத்து மாவட்டச் செயலாளர்களும் வரவழைக்கப்பட்டு அரங்கில் அமரவைக்கப்படிருந்தனர். முன் வரிசையில் எஸ்.ஏ.சி. ஷோபா ஆகியோர் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்னால் நாற்காலி போடப்பட்டு விஜய் அமர்ந்தா. புஸ்ஸி ஆனந்த் ஒரு பக்கமும் கொள்கைபரப்பு செயலாளர் பெண் ஒரு பக்கமும் அமர்ந்திருந்தனர்.
மேடையேறிய விஜய் ஆனந்த் கொடுத்த ஒரு பையை வாங்கி அதிலிருந்து கொடியை எடுத்து அனைவருக்கும் அறிமுகம் செய்தார். சிகப்பு நிறங்களுக்கு இடையே மஞ்சள் அதில் இரண்டு யானைகள் காலை தூக்கி பிளிறியபடி இருக்க நடுவே வாகைபூ ஒரு வட்டத்திற்குள் இருந்தது. அந்த வட்டத்தில் 28 நட்சத்திரங்கள் இருக்க, 5 நடசத்திரங்கள் மட்டும் நீல நிறத்தில் இருந்தன. யாரும் எதிர்பார்க்காத வகையில் வித்தியாசமான கொடி அமைப்பை வெளியிட்டதை பலரும் வியந்து பார்ந்து கொண்டிருக்க, இதன் முழு விளக்கத்தை அடுத்த சில நாட்களில் நடக்க இருக்கும் மாநாட்டில் தெரிவிப்பதாக சொன்னார் விஜய்.
இந்த நிலையில் சம்பிரதாயமாக சில வார்த்திகளை பேசினார். அப்போது, நம் அனைவருக்குமே இன்னைக்கு சந்தோஷமான ஒரு நாள். நான் என்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி அதற்கு தொடக்கப் புள்ளியாக நமது கட்சியின் பெயரை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தேன்.
அன்றையிலிருந்து ஒரு குறிப்பிட்ட நாளுக்காக நீங்கள் அனைவரும் காத்திருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். நமது கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. அது எப்போது என்பதை கூடிய சீக்கிரம் அறிவிக்கிறேன். அதற்கு முன்னதாக நீங்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்வதற்காக நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை இன்று அறிமுகம் செய்திருக்கிறேன். என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களான உங்க முன்னாடியும், தமிழ்நாட்டு மக்கள் முன்னாடியும் கொடியை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன். இதுவரை நமக்காக உழைத்தோம், இனி தமிழ்நாட்டிற்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைப்போம். நம்முடைய கொடிக்கும் பின்னணியிலும் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது. அது என்ன என்பதை நமது மாநாட்டின் போது அறிவிப்போம். அதுவரைக்கு சந்தோஷமா, கெத்தா இந்த கொடியை ஏற்றி கொண்டாடுவோம். இது வெறும் கட்சிக்கான கொடியாக நான் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் வருங்கால வெற்றிக்கான கொடியாக பார்க்கிறேன்.
இதை உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் நான் சொல்லாமலே ஏற்றுவோம் எனக்கு தெரியும். அதுவரையும் தைரியமாக இருங்கள். வெற்றி நிச்சயம். நல்லதே நடக்கும் என கூறி சென்ற விஜய், பின்னர் மீண்டும் மேடையேறி வந்து, ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன். என்னுடைய அப்பா, அம்மா இங்க வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என கூறி, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இங்கு நடந்த உறுதியேற்பு நிகழ்வில் எல்லோரையும் வலது கையை நெஞ்சின் மேல் வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு வாசித்தார். அவரை பின் பற்றி அனைவரும் வாசித்தனர்.
அதோடு அனைவருக்கும் நன்றி தெரிவித்து வெளியே சென்ற விஜய் ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.
இனி அடுத்த பரபரப்பு மாநாடுதான் என்று ரசிக தொண்டர்கள் கலைந்து சென்றனர்.