‘விடுதலை – பாகம் 2’ படத்தில் பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். 1980-களில் பரபரப்பாக இருந்த புலவர் கு.கலியபெருமாள் தான் பெருமாள் வாத்தியர் கதாபாத்திரத்தின் உண்மையான முகம் என்று சொல்லப்படுகிறது. யார் இந்த புலவர் கலியபெருமாள். விரிவாக பார்ப்போம்…
புலவர் கு.கலியபெருமாள், கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ள சௌந்திர சோழபுரத்தில் பிறந்தவர். தமிழில் பட்டம் பெற்றவர். கலியபெருமாள், 1960-களில், அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியிலுள்ள பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றியிருக்கிறார். அதனால், புலவர் என்ற பட்டம் அவரது பெயருடன் சேர்ந்துகொண்டது. ஆரம்பக் காலத்தில் பெரியாரிஸ்டாக இருந்து, பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டுவந்தார். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி, நக்சல்பாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
கலியபெருமாள், சாதி ஒழிப்பில் தீவிரம் காட்டினார். ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, பெரும் நிலப்பிரபுக்களின் நிலங்களுக்குத் தனது தோழர்களுடனும் பொது மக்களுடனும் திரண்டு சென்று அதிரடியாக அறுவடை நடத்தி நெல் மூட்டைகளைக் கடத்தி வந்து கிராமத்தினருக்குப் பகிர்ந்து கொடுத்தார். பெண்ணாடம் பகுதி சர்க்கரை ஆலைகளுக்கு எதிரான போராட்டங்களையும் தலைமையேற்று நடத்தினார்.
சாதி ஒழிப்பு, வர்க்க விடுதலை என்று செயல்படத் தொடங்கிய கலியபெருமாள், ஆசிரியர் பணியை விட்டுவிட்டு முழுநேரமும் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டார். சாருமஜும்தாரால் தொடங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற கட்சியில் இணைந்து புலவர் கலியபெருமாள் செயல்பட்டார். ‘ஏழை, எளிய மக்களிடம் அதிகமாக வட்டி வாங்குபவர்கள், பொதுச்சொத்துக்களை அபகரிப்பவர்கள் போன்றோரை அழித்தொழிப்பு செய்ய வேண்டும்’ என்று சாரு மஜும்தார் கூறியதை தமிழ்நாட்டில் செயல்படுத்தத் தொடங்கினார் கலியபெருமாள்.
பெண்ணாடம் பகுதியிலுள்ள தனியார் சர்க்கரை ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களின் உரிமைகளுக்காக கலியபெருமாள் பெரும் போராட்டங்களை நடத்தினார். வேலைநிறுத்த போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அதனால் ஆத்திரமடைந்த ஆலை நிர்வாகம், கலியபெருமாளைக் கொலை செய்ய பல முறை முயன்றிருக்கிறது.
இரவு நேரத்தில், கூலி விவசாயிகளைத் திரட்டிக்கொண்டு, பண்ணையார்களுக்குச் சொந்தமான நிலங்களில் இறங்கி, நெல்லை அறுவடை செய்து, ஏழை எளிய மக்களுக்கு விநியோகித்திருக்கிறார் புலவர் கலியபெருமாள். அந்த ‘அறுவடை இயக்கம்’ கிராமப்புறங்களில் பிரபலமாகப் பேசப்பட்டது. ஆயுதம் தாங்கிய போராட்டத்தை கலியபெருமாள் முன்னெடுத்தார்.
பொன்பரப்பியைச் சேர்ந்த தமிழரசன் உட்பட பல இளைஞர்கள் கலியபெருமாள் தலைமையில் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டனர். தங்கள் இயக்கத்துக்குத் தேவையான ஆயுதங்களை கலியபெருமாளுக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் வைத்து தயாரித்திருக்கிறார்கள். 1970ஆம் ஆண்டு, வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது, குண்டு வெடித்து மூன்று பேர் உயிரிழந்தனர். கலியபெருமாள் படுகாயம் அடைந்தார். உயிரிழந்த மூன்று பேரையும் தோப்பிலேயே கலியபெருமாள் அடக்கம் செய்திருக்கிறார்கள்.
‘விடுதலை’ படத்தின் முதல் காட்சியில் குண்டு வைத்து ரயில் தகர்க்கப்படும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. இது,1987ஆம் ஆண்டு அரியலூருக்கு அருகிலுள்ள மருதையாற்றுப் பாலம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட சம்பவத்தின் காட்சிப்படுத்தல்தான். குண்டுவைத்து அரியலூர் பாலம் தகர்க்கப்பட்டதால், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகி, 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ‘பாலத்தைத் தகர்த்து, கூட்ஸ் ரயிலை கவிழ்த்து அரசின் கவனத்தை ஈர்ப்பதுதான் தமிழர் விடுதலைப் படையின் நோக்கம். மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலைக் கவிழ்ப்பது அவர்களின் நோக்கம் அல்ல’ என்று விடுதலைப் படை அமைப்பின் தரப்பில் அப்போது விளக்கம் கூறப்பட்டது. அந்த வழக்கில் தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த தமிழரசன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அதன் பிறகு, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் பொன்பரப்பியில் ஒரு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட தமிழரசன் உள்ளிட்ட ஐந்து பேர் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், கொலை வழக்கு ஒன்றில் புலவர் கலியபெருமாளுக்கும் அவருடைய மூத்த மகன் வள்ளுவனுக்கும் தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இரண்டாவது மகன் சோழ நம்பியார் உள்ளிட்ட ஐந்து பேருக்கு கடலூர் நீதிமன்றம் 1972ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில், வள்ளுவனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
கலியபெருமாளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையும் மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையும் உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. பின்னர், கலியபெருமாளுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத்தண்டனையை, ஆயுள்தண்டனையாகக் குறைத்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.
கலியபெருமாளும் அவருடைய குடும்பத்தினரும் சிறையில் வாடுவதை அறிந்த டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் கன்ஷியாம் பர்தேசி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கலியபெருமாள் உள்ளிட்டோருக்கு 1983ஆம் ஆண்டு நிபந்தனையற்ற பரோல் வழங்கியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தண்டனையிலிருந்து அவர்கள் முழுமையாக விடுதலை செய்யப்பட்டனர். 2007ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி கலியபெருமாள் காலமானார்.