பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த சுபஸ்ரீயை பாராட்டி பேசியதை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
மதுரை மாவட்டம், பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த தமிழாசிரியை சுபஸ்ரீ. வரிச்சூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியையாக பணி புரியும் இவருக்கு மூலிகைகள் மீது ஆர்வம் அதிகம். அதனால் சுமார் 40 சென்ட் கொண்ட இடத்தில் மூலிகை தோட்டத்தை அமைத்து 500-க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகைகளை வளர்த்து வருகிறார். தன் தோட்டத்தில் உள்ள மூலிகை செடிகளை மற்றவர்கள் தெரிந்துகொள்ள வசதியாக அவற்றின் பெயர்களையும் ஆவணப்படுத்தி இருக்கிறார். கரோனா காலத்தில் தொற்று பாதித்தவர்களுக்கு மூலிகை மருந்து கொடுத்து குணப்படுத்தியுள்ளார்.
சுபஸ்ரீயின் இந்த சேவையைத் தெரிந்துகொண்டு, பிரதமர் மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் அவரை பாராட்டி பேசியுள்ளார். இந்நிகழ்ச்சியில் சுபஸ்ரீயை பாராட்டி பேசிய மோடி, “நமதருகே இருப்போர் சிலர், பேரிடர் காலங்களில் தங்கள் பொறுமையை இழப்பதில்லை, மாறாக அதிலிருந்து கற்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் பெயர் சுபஸ்ரீ. இவர் தனது முயற்சியின் துணையால், கடினமான மற்றும் மிகவும் பயனுள்ள மூலிகைகளால் ஒரு அற்புதமான பூங்காவை உருவாக்கி இருக்கிறார். இவர் தமிழ்நாட்டின் மதுரையில் வசிப்பவர். இவர் தொழில்ரீதியாக ஆசிரியையாக இருந்தாலும், மருத்துவத் தாவரங்களின்பால் இவருக்கு அலாதியான பிரியம் இருக்கிறது.
சுபஸ்ரீயின் இந்த ஈடுபாடு, 1980-களில் தொடங்கியது; இன்று மதுரையின் வரிச்சியூர் கிராமத்தில் இருக்கும் இவருடைய வித்தியாசமான மூலிகைப் பூங்காவிலே 500-க்கும் மேற்பட்ட அரியவகை மூலிகைச் செடிகள் இருக்கின்றன” என்று பேசியுள்ளார்.
பிரதமர் மோடியின் பாராட்டால், ஒரே நாளில் அவர் இந்தியா முழுக்க பிரபலமாகி உள்ளார். அவரை பல்வேறு தரபினரும் தொடர்புகொண்டு வாழ்த்தி வருகிறார்கள்.
மூலிகை செடிகள் மீது தனக்கு ஆர்வம் ஏற்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுபஸ்ரீ, “1980-ல் ஒரு விஷப் பாம்பு என் அப்பாவைக் கடித்தது. அப்போது மூலிகை மருந்து கொடுத்து என் அப்பாவின் உயிரைக் காப்பாற்றினோம். அப்போது முதல் எனக்கு மூலிகைகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனால் வேலைக்கு சென்ற பிறகு பள்ளி வளாகத்திலும், வீட்டிலும் பாரம்பரிய மூலிகைச் செடிகளை நட்டு வளர்க்கத் தொடங்கினேன். கரோனா காலத்தில் குறிப்பாக நோய் எதிர்ப்புச் சக்திக்கான சித்த மருந்தான கபசுர குடிநீர் உதவியது போன்று, எனது வீட்டில் இருந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை மக்களுக்கு கொடுத்து உதவினேன்.
இதைத்தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டில் வரிச்சூர் அருகிலுள்ள நாட்டார் மங்கலத்தில் சுமார் 40 சென்ட நிலத்தில் மூலிகை தோட்டத்தை அமைத்தேன். எனக்கு உதவியாக என் கணவர் இந்த தோட்டத்தை பராமரித்து வருகிறார். இந்த தோட்டத்தில் உள்ள மூலிகைச் செடிகளின் பாசனத்துக்காக தனி போர்வெல், செடிகளைப் பாதுகாக்க இரும்பு வேலி, பார்வையாளர்களுக்கு வசதியுடன் கூடிய சிறிய குடிசை என பல்வேறு விஷயங்களை செய்திருக்கிறோம்.
கருமஞ்சள், பேய்கரும்பு, கருடகல் சஞ்சீவி, கருநெச்சி போன்ற அரிய வகை இனங்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட மூலிகைகள் எங்கள் தோட்டத்தில் உள்ளன. கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தோட்ட ஆர்வலர்களுக்கான ஆதார மையமாக இப்போது என் தோட்டம் மாறியுள்ளது. எல்லா இடங்களிலிருந்தும் மாணவர்கள் ஆய்வுக்காக வருகின்றனர்.
ஒவ்வொரு மூலிகையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் மாணவர்களுக்கு கற்பிக்கிறேன். மருத்துவ தாவரங்களின் மதிப்பு மற்றும் பாதுகாப்பின் அவசியம் பற்றி மக்களுக்கு கற்பிக்க பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அமர்வுகளும் நடக்கின்றன” என்றார்.