டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அதிகரித்த பிறகு நாட்டில் பிக் பாக்கெட் அடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. பெருவாரியான மக்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற அட்டைகளையும், ஃபோன் பே, கூகிள் பே போன்ற தொலைபேசி செயலிகளையும் பயன்படுத்துவதால் யாரும் பணத்தை பர்ஸில் வைத்துச் செல்வதில்லை. அதனால் பிக் பாக்கெட் அடிப்பவர்கள் வேறு தொழிலுக்கு போய்விட்டார்கள்.
அதே நேரத்தில் பிக் பாக்கெட் இல்லாததால் நம் பணம் பாதுகாப்பாக இருக்குமா என்று கேட்டால்… இருக்கும் என்ற பதிலையும் தெளிவாக சொல்ல முடியாத நிலை இருக்கிறது. பணத்தை கையாள்வதில் மனிதர்கள் நவீன வழிகளை கண்டுபிடிக்கும் அதே நேரத்தில், மோசடி பேர்வழிகளும் அதை அவர்களிடம் இருந்து கவர்ந்து செல்ல புதிய வழிகளை கையாண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் கூகுள் பே செயலியை பயன்படுத்தி புதிய வகை மோசடி அரங்கேறி வருவதால், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்:
கூகுள் பே செயலியில் தற்போது புதிய வகை மோசடி அரங்கேறி வருகிறது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் வங்கிக் கணக்குக்கு கூகுள் பே (ஜிபே) மூலம் பணம் அனுப்புகிறார். பின்னர், “அவசரத்தில் வேறு ஒருவருக்கு அனுப்புவதற்கு பதிலாக உங்கள் எண்ணுக்கு அனுப்பிவிட்டேன். எனவே, தவறுதலாக நான் அனுப்பிய பணத்தை, மீண்டும் எனக்கு அதே எண்ணில் அனுப்பி வையுங்கள்” என கெஞ்சி கேட்பார். நீங்கள் இரக்கப்பட்டு பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, யாராவது உங்களுக்கு தவறாகப் பணம் அனுப்பியிருந்தால் அழைப்பாளரிடம் அடையாளச் சான்றுடன் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு வந்து பணமாக எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள். இந்த மோசடி ஆங்காங்கே நடைபெற்று வருகின்றது. எனவே இதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ளவும்.