கோல்டு காா்ட்குடியுரிமைத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.
இந்த திட்டத்தின் கீழ், நிரந்திர குடியுரிமை பெற தனிநபர் விண்ணப்பித்தால் ரூ. 8.80 கோடி கட்டணமாகவும், நிறுவனங்கள் சார்பில் பணியாளர்களுக்கு விண்ணப்பித்தால் ரூ. 17.6 கோடி கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நிதிப் பற்றாக்குறையை சரி செய்யவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.
அமெரிக்காவில் தற்போது நடைமுறையில் உள்ள ‘இபி-5’ என்ற வெளிநாட்டு (புலம்பெயா்) முதலீட்டாளா்களுக்கான நுழைவு இசைவு (விசா) திட்டத்துக்கு மாற்றாக, ‘தங்க அட்டை’ (கோல்டு காா்ட்) என்ற புதிய குடியுரிமை திட்டத்தை கொண்டு வரவுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தங்க அட்டை குடியுரிமைத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நிர்வாக உத்தரவின் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.
இந்த குடியுரிமைத் திட்டத்துக்கு தனிநபர் விண்ணப்பித்தால் ஒரு மில்லியன் டாலராகவும், நிறுவனங்கள் சார்பில் தங்களின் பணியாளர்களுக்கு விண்ணப்பித்தால் இரண்டு மில்லியன் டாலராகவும் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
“இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றி அடையும் என நாங்கள் நம்புகிறோம். இதன்மூலம் கோடிக்கணக்கான டாலர்களை திரட்டப் போகிறோம். இது, மக்களின் வரிகளை குறைக்க உதவும், பிற நல்ல விஷயங்களைச் செய்ய உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, எச்1பி விசாவுக்கான கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக (ரூ. 88 லட்சம்) உயர்த்துவதற்கான நிர்வாக உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.