No menu items!

காலம் கைகொடுக்கவில்லை – ஒலிம்பிக் சம்பவம் பற்றி வினேஷ் போகட் விளக்கம்

காலம் கைகொடுக்கவில்லை – ஒலிம்பிக் சம்பவம் பற்றி வினேஷ் போகட் விளக்கம்

ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைப் பற்றி வினேஷ் போகட் விளக்கம் அளித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ பிரிவு மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிவரை முன்னேறினார் வினேஷ் போகட். இதனால் இந்த ஒலிம்பிக்கில் அவர் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிப் போட்டிக்கு முன் எடை சோதனை செய்தபோது அவர் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையைவிட 100 கிராம் எடை அதிகமாக இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதுபற்றி ஏதும் பேசாமல் இருந்த வினேஷ் போகட், நேற்று முதல் முறையாக இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வினேஷ் போகட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தின்போது, இந்திய பெண்கள் மற்றும் நம் தேசிய கொடியின் புனிதத்தை பாதுகாக்க கடுமையாக போராடினேன். ஆனால் கடந்த ஆண்டு மே 28 அன்று முதல் தேசியக் கொடியுடன் நான் இருக்கும் புகைப்படங்களை பார்க்கும்போது அது என்னை பயமுறுத்துகிறது.
இந்த ஒலிம்பிக்கில் இந்தியக் கொடியை உயரே பறக்க வைக்க வேண்டும் என்பதும், அதன் மதிப்பை பிரதிபலிக்கும் வகையில் அதை என்னுடைய வைத்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதும் எனது விருப்பமாக இருந்தது. அப்படி செய்வது, மல்யுத்தத்துக்கு நடந்தவற்றையும், தேசிய கொடிக்கு நடந்தவற்றையும் கண்டிக்கும் விதமாக இருக்கும் என்று நினைத்தேன்.

சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் அவற்றை சொல்ல வார்த்தைகள் ஒருபோதும் போதுமானதாக இருக்காது. நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் பேசுவேன். ஆகஸ்ட் 6-ம் தேதி இரவும், ஆகஸ்ட் 7ம் தேதி காலையும் நடந்தது குறித்து நான் சொல்ல விரும்பவதெல்லாம் இதுதான். நாங்கள் பின்வாங்கவில்லை. எங்கள் முயற்சிகள் ஒருபோதும் நிற்கவில்லை. நாங்கள் சரணடையவில்லை. ஆனால் கடிகாரம் நின்றுவிட்டது, காலம் கைகொடுக்கவில்லை. என்னுடைய விதியும்தான்.

என்னுடைய அணிக்கும், என் சக இந்தியர்களுக்கும், என்னுடைய குடும்பத்துக்கும்… நாம் உழைத்துக் கொண்டிருந்த, சாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த ஒன்று, நிறைவடையாமல் போய்விட்டதாக உணர்கிறேன். அது இனி எப்போதும் இல்லாமல் போகலாம். விஷயங்கள் எதுவும் இனி முன்பு போல இல்லாமல் போகலாம். ஒருவேளை சூழல்கள் வேறாக இருந்திருந்தால் 2032 வரைக்கும் நான் விளையாடியிருக்கக் கூடும். ஏனென்றால் எனக்குள் இருக்கும் போராட்டமும், மல்யுத்தமும் எப்போதும் அப்படியேதான் இருக்கும்.
இவ்வாறு தனது அறிக்கையில் வினேஷ் போகட் கூறியுள்ளார்.

வினேஷ் போகட் உயிர் இழந்திருப்பார்

ஒலிம்பிக் போட்டியில் வினேஷ் போகட் தனது உடல் எடையை குறைக்க போராடிய விதம் பற்றி விளக்கம் அளித்துள்ள அவரது பயிற்சியாளர் வோலர் அகோஸ், “எடை குறைப்புக்காக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் விடிய விடிய மேற்கொண்ட பயிற்சிகளால் அவர், உயிரிழந்து விடுவாரோ என்று பயந்தேன். வினேஷ் என்னிடம் பேசியபோது, நீங்கள் வருத்தப்பட வேண்டாம். நான் உலகின் சிறந்த வீராங்கனையான ஜப்பானின் யுகி சுசாகியை தோற்கடித்துள்ளேன். நான் எனது இலக்கை அடைந்துவிட்டேன்.

உலகின் சிறந்த வீராங்கனைகளில் நானும் ஒருவர் என்பதை நிரூபித்துள்ளேன். பதக்கம், பதக்க மேடை எல்லாம் வெறும் பொருட்கள்தான். செயல் திறனை யாராலும் பறிக்க முடியாது என்றார்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...