கமல் ஹாஸனும், மணிரத்னமும் இணையும் ’தக் லைஃப்’ படத்தின் ஷுட்டிங்கின் முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது.
படப்பிடிப்பில் எடுத்த காட்சிகளைப் போட்டு பார்த்திருக்கிறார்கள். கமலுக்கு ரொம்ப உற்சாகமாம். காரணம் நீண்ட நாட்களுக்குப் பிறகு கமலின் திரைத்தோற்றம் நன்றாக வந்திருப்பதுதான் என்கிறார்கள்.
கமலுக்கு ‘தக் லைஃப்’பில் இரண்டு வேடங்கள் என்று சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது இன்னொரு செய்தியும் அடிப்படுகிறது. அது கமலுக்கு மூன்று வேடங்களாம். ஆனால் இதுபற்றி இன்னும் மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
மணிரத்னமுடன் கமல் இணைந்து நடித்த படத்தில் இதுபோன்று மூன்று கதாபாத்திரங்களில் நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கமலும் ஒரு தயாரிப்பாளராக களமிறங்கி இருப்பதால், இந்த முறை ‘விக்ரம்’ படம் மூலம் சம்பாதித்ததை இப்பட த்தில்தான் முதலீடாக செய்ய இருக்கிறாராம். மேலும் கமலின் ராஜ் கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படங்களுக்கான பட்ஜெட்டை வேறு நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கவே விரும்புகிறாராம்.
இதனால்தான் சிம்பு நடிக்கவிருக்கும் படம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என்பது கூடுதல் தகவல்.
இரண்டாவது ஷெட்யூலுக்கு தயாராகி இருக்கிறது ‘தக் லைஃப்’ குழு.
இரண்டாவது ஷெட்யூலை செர்பியாவில் வைத்து எடுக்க இருக்கிறார்கள்.
இதற்காக மணி ரத்னம் முன்பே செர்பியா சென்றுவிட்டார். கமல் இங்கு தேர்தல் உடன்படிக்கையை முடித்துவிட்டு, இதர வேலைகளையும் முடித்துவிட்டு இன்னும் நாலைந்து நாட்களில் அங்கு செல்லவிருக்கிறார்.
செர்பியாவில் படப்பிடிப்பிற்கு முந்தைய ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் மணிரத்னம் மேற்பார்வையில் நடந்து வருகிறது.
பனி நிறைந்த பகுதிகளிலும், பாறைகள் நிறைந்த பகுதிகளிலும் இரண்டாவது ஷெட்யூலில் ஷூட் செய்ய இருக்கிறார்கள்.
இந்த லொகேஷன்கள் இதுவரை பார்த்திராத லொகேஷன்களாக இருக்குமென ‘தக் லைஃப்’ தரப்பில் கூறுகிறார்கள்.
அட்லீ சம்பளம் 60 கோடியா?
தமிழில் இயக்கியது நான்குப் படங்கள்தான். ஆனால் ஹிந்தியில் இயக்கிய முதல் படத்திலேயே இந்தியாவின் பாக்ஸ் ஆபீஸில் கலவரத்தை உண்டுபண்ணிவிட்டார் அட்லீ.
ஷாரூக்கானுடன் இணைந்த ‘ஜவான்’ மூலம் 1000 கோடிக்கும் மேல் வசூல் என்ற பரபரப்பை உருவாக்கியது அட்லீயின் சாதனை. இவரது குருநாதர் ஷங்கர் கூட இந்த 1000 கோடி வசூல் என்ற இலக்கை இன்னும் தொடவில்லை.
இந்நிலையில் அட்லீ அடுத்து யாருடன் இணையப் போகிறார் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. அவருக்கு முன் இரண்டி வாய்ப்புகள் இருக்கின்றன.
ஒன்று விஜயுடன் இணைந்து படம் பண்ணுவது. இதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன
இரண்டாவது, ’புஷ்பா’ படம் மூலம் பான் – இந்தியா நட்சத்திரமாக ஒரு புதிய மார்க்கெட்டை பெற்றிருக்கும் அல்லு அர்ஜூனின் அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு.
இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றைதான் அட்லீ தேர்ந்தெடுக்க முடியும். காரணம் அட்லீ கேட்கும் சம்பளத்தை இந்த இரண்டு பட வாய்ப்புகளின் மூலம்தான் சாதிக்க முடியும்.
இதற்கு காரணம் இருக்கிறது. விஜய் படமென்றால், விஜய் கைக்காட்டும் இயக்குநர் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்தால்தான் அந்த படம் உறுதியாகும். இதனால் அட்லீ எதிர்பார்க்கும் சம்பளம் கிடைத்துவிடும்.
அடுத்து, சமீபகாலமாக தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் தமிழிலும் படமெடுக்க ஆர்வம் காட்டி வருகின்றன. உதாரணத்திற்கு விஜயின் ’வாரிசு’ படத்தை தயாரித்தவர் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ. அடுத்து அஜித்தின் 63- வது படமான ‘குட் பேட் அக்லி’ படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருக்கிறது.
இதே போல் தமிழில் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் சன் பிக்சர்ஸ் தெலுங்கில் நேரடியாக கால்பதிக்க விரும்புகிறதாம். இதற்கான படம் எடுப்பது குறித்து சில மாதங்களாக பேச்சு அடிப்படுகிறதாம்.
இதன் தொடர்ச்சியாக சன் பிக்சர்ஸ், அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணியை வைத்து படமெடுக்கவும் யோசித்து வருகிறதாம்.
இதற்கிடையில் அல்லு அர்ஜூன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் தனது படம் வெளியாக வேண்டுமென விரும்புகிறாராம். எனவே அல்லு அர்ஜூன் – அட்லீ என்றால் இந்திய அளவில் பட வியாபாரத்தை விரிவுப்படுத்தி விடலாம் என சன் பிக்சர்ஸ் தரப்பில் நம்பப்படுகிறது என்கிறார்கள்.
அல்லு அர்ஜூன் ‘புஷ்பா’ படவெற்றிக்குப் பிறகு 120 கோடி சம்பளம் கேட்கிறாராம். அதேபோல் அட்லீ ‘ஜவான்’ வெற்றியைத் தொடர்ந்து 60 கோடி எதிர்பார்க்கிறாராம்.
இவர்கள் இருவரும் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க இப்போதைக்கு தமிழில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் மட்டுமே முடியுமென்பதால், இருவரும் சன் பிக்சர்ஸூக்கு ஓகே சொல்லியிருப்பதாகவும் தகவல் கசிந்திருக்கிறது.