தேர்தல் பிரச்சாரத்தில் கச்சத்தீவு விவகாரம் மீண்டும் சர்ச்சையாகியுள்ள நிலையில், கன்னியாகுமரி கடல் பகுதியில் உள்ள ‘வாட்ஜ்வங்கி’ எனும் பெரும் பரப்பை வாங்கவே கச்சத்தீவை இந்தியா விட்டுக் கொடுத்து என புதிய தகவல் வெளியாகியுள்ளது. பழைய ஆவணங்கள் அடிப்படையில் ‘The Print’, ‘The Hindu’ ஆங்கில ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
உண்மை என்ன?
இது தொடர்பாக எழுத்தாளரும் வழக்கறிஞருமான இரா. முருகவேள், “இந்திய ஆளும் வர்க்கம் அதுவும் இந்திரா காந்தி ஆட்சி ஒரு தீவை சும்மா இலங்கைக்கு விட்டுத் தந்து விடுமா? இதற்கு பின்னால் ஏதோ இருக்கிறது என்று தோன்றிக்கொண்டே இருந்தது. இந்தியாவாவது ஒரு தீவை சும்மா விட்டுக் கொடுப்பதாவது…
இந்தியா 1974ஆம் ஆண்டு கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்த பின்பு 1976ஆம் ஆண்டு இலங்கையின் வாட்ஜ் பேங்க் (wadge bank) என்ற கன்யாகுமரிக்கு அருகே உள்ள தீவை இந்தியாவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. 282 ஏக்கர் கச்சத் தீவை கொடுத்து இரண்டு லட்சம் ஏக்கர் (3000 சதுர மைல்) பரப்பு கொண்ட வாட்ஜ் பேங்க் பகுதியை இந்தியா அடைந்துள்ளது.
வாட்ஜ் பேங்க், கன்னியாகுமரி அருகே கடலுக்குள் உள்ள பிடபூமி. பவழ பாறைகள், மிக அரிய மீன்கள் போன்ற சிறந்த இயற்கை வளங்கள் கொண்ட பிரதேசம். இந்திய கடல் எல்லைக்கு வெளியே உள்ளது. அதை இந்திய பகுதியாக இலங்கை அங்கீகரித்தது. அதற்கு முன்பு அது இலங்கை பகுதியாக கருதப்பட்டது.
இந்தத் தீவு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏற்றது. இயற்கை வளங்கள் கொண்டது. மக்கள் வாழாத கச்சத்தீவை விட அதிக பயனுள்ளது.
ராஜீவ் காந்தி ஆட்சி வரை இந்தியா விரிவாதிக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்த துணை வல்லரசு தான். சிக்கிம், இந்தியாவுடன் இணைக்கப்பட்டது; பூடான், நேபாளம், இலங்கை என சுற்றிலும் உள்ள சிறிய நாடுகளில் தலையீடுகள் என்று அன்றைய இந்தியா ஒரு முரட்டு அரசாகவே இருந்தது. இன்றைய ஆட்சியாளர்களைவிட பல மடங்கு திறமையாகவும் இந்த விவகாரத்தில் இருந்தது” என்கிறார் முருகவேள்.
இதனை தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கச்சத்தீவை ஏன் தாரை வார்த்தீர்கள்? என்று திமுக, காங்கிரஸ் கட்சியினரை கேட்டால், கன்னியாகுமரி கடல் பகுதியில் உள்ள ‘வாட்ஜ்வங்கி’ எனும் பெரும் பரப்பை கச்சத்தீவுக்கு பதிலாக பெற்றுக்கொண்டதாக சொல்லி மோசடி, பித்தலாட்டம் செய்கின்றனர்.
‘வாட்ஜ் வங்கி’ என்பது இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாகவே இருந்து வந்தது. இயற்கை வளம் மிகுந்த அந்த பகுதியில் 3ஆண்டுக்கு மட்டுமே இலங்கை நாட்டினர் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்படும் என்றும், அதன் பிறகு அங்கு மீன் பிடிக்கும் அனுமதி இந்தியர்கள் தவிர யாருக்கும் இல்லை என்றும் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இலங்கையிடம் இருந்து ‘வாட்ஜ்வங்கி’ பகுதியை இந்தியா பெற்றதாக அந்த ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
அதேபோல, ‘‘கச்சத்தீவுக்கு பதிலாக 6 லட்சம் இந்திய பூர்வீக மக்களுக்கு (மலையக தமிழர்கள்) குடியுரிமை வழங்கப்பட்டது’’ என்ற மற்றொரு உண்மைக்கு புறம்பான தகவலை ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் கூறியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது” என்கிறார் நாராயணன் திருப்பதி.