No menu items!

தாயையும் தம்பியையும் கொன்ற மாணவன்!– மன அழுத்தத்தால் விபரீதம்!

தாயையும் தம்பியையும் கொன்ற மாணவன்!– மன அழுத்தத்தால் விபரீதம்!

சென்னையின் திருவொற்றியூரில், தனது தாயையும் சகோதரனையும் கொலை செய்ததற்காக 20 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மன அழுத்தம் மற்றும் வேறு சில குடும்ப பிரச்னைகள் காரணமாக அவர் இந்தக் கொலைகளில் ஈடுபட்டுள்ளார் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மன அழுத்தம், தாயையும் தம்பியையும் கொலை செய்யும் அளவுக்கு விபரீதமாகுமா? ஏன் மன அழுத்தம்?

அம்மாவையும் தம்பியையும் கொன்றுவிட்டு வாய்ஸ் நோட்

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை திருவொற்றியூர் திருநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஓமன் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பத்மா (வயது 48). இந்தத் தம்பதியினருக்கு நித்தேஷ் (வயது 20), ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது, வயது 15) என இரண்டு மகன்கள். நித்தேஷ் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நித்தேஷ் கடந்த 21-ஆம் தேதி இரவு, தன்னுடைய செல்போனிலிருந்து உறவினர் ஒருவருக்கு, “நான் எனது அம்மாவையும் தம்பியையும் கொலை செய்துவிட்டேன்,” என்ற ‘வாய்ஸ் நோட்’ அனுப்பியுள்ளார்.

உடனே அவர் பத்மாவின் வீட்டருகே வசிக்கும் மற்றொரு பெண்ணுக்கு தகவல் சொல்ல, அவர் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டுக்குள் பத்மாவும் அவரின் இளைய மகனும் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இரு உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக திருவொற்றியூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நித்தேஷ் கைது செய்யப்பட்டார். முதல் கட்ட விசாரணையில், கடந்த கடந்த ஜூன் 20-ஆம் தேதி, அதிகாலையில் தனது தாய் மற்றும் தம்பியைக் கொலை செய்துவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு, நித்தேஷ் தலைமறைவானது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நித்தேஷிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நித்தேஷ் ஏன் அம்மாவையும் தம்பியையும் கொன்றார்?

நித்தேஷிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் அவர் தெரிவித்துள்ளபடி, “நித்தேஷுக்கு 14 அரியர்கள் இருந்துள்ளது. இதற்காக தாய் அவரை பலமுறை கண்டித்துள்ளார். “தந்தையின் சம்பாத்தியம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லை; இந்நிலையில் நீ இப்படி சரியாக படிக்காமல் இருக்கிறாயே” என்று தாய் அடிக்கடி கூறி வந்ததால் ஏற்பட்ட மனஅழுத்தத்தில் நித்தேஷால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. குடும்பத்தில் வேறு சிக்கல்களும் இருந்ததாகவும் அவர் காவல்துறை விசாரணையில் கூறியுள்ளார்.

இந்நிலையில், தாயையும் தம்பியையும் கொலை செய்த நித்தேஷ், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால், பின்னர் பயந்து மனம் மாறியதாகவும் விசாரணையில் கூறியுள்ளார்.

மன அழுத்தம் காரணமாகவே நித்தேஷ் தாயையும் தம்பியையும் கொலை செய்துவிட்டு, தற்கொலை முயன்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

மன அழுத்தத்துக்கு தீர்வு என்ன?

இது தொடர்பாக ஊடகர்களுக்கு பேட்டியளித்துள்ள, சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் பூர்ண சந்திரிகா, “இந்த வழக்கில் குற்றத்தில் ஈடுபட்ட இளைஞர் நாள்பட்ட மனச்சோர்வில் இருந்துள்ளார். அவர் கல்வியில் சந்தித்தப் பின்னடைவுகள், வீட்டின் பொருளாதாரச் சூழ்நிலைகள் என அனைத்தும் அவருக்கு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்படும்போது, அவரது மனச்சோர்வு இறுதிக் கட்டத்திற்குச் சென்று, தன் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளும். இது கண்டிப்பாக ஒரு தீவிரமான மனநலப் பிரச்னை தான்.

அத்தகைய நிலையில் இருப்பவர்களுக்கு மனித உயிரின் மதிப்பு தெரியாது. அது பிறரது உயிராக இருந்தாலும் சரி. அதனால் தான் தற்கொலை எண்ணம் கொண்ட பலரும், தனது குடும்பத்தினரை அல்லது நெருக்கமானவர்களையும் கொலை செய்துவிட்டு இறக்கிறார்கள். இவ்வாறு பலவித காரணிகளால் மோசமான மனச்சோர்வில் இருப்பவர்கள் கண்டிப்பாக மருத்துவ உதவியை நாட வேண்டும். ஏனெனில், யாருக்கு வேண்டுமானாலும் இது நடக்கலாம்.

ஒரு வீட்டில் வளரிளம் பருவத்தைச் சேர்ந்த மகனோ மகளோ எப்போதும் தனியாக, அமைதியாக இருந்தால், கண்டிப்பாக அவர்களிடம் பேச வேண்டும். பிள்ளை வளர்ப்பில், ஒன்று பெற்றோர்கள் மிகக் கடுமையாக நடந்துகொள்கிறார்கள் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். அப்படியில்லாமல் இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு அணுக வேண்டும். 

இதற்குத் தேவையான ஆலோசனைகளை, உதவிகளை தமிழக அரசு இலவசமாக வழங்குகிறது. அது மட்டுமில்லாது 14466 என்ற எண்ணில் மத்திய அரசும் தேவையான உதவிகளை வழங்குகிறது. இது தவிர அனைத்து தமிழக அரசு மருத்துவமனைகளிலும் மனநலப் பிரிவு என ஒன்று உள்ளது. அங்குள்ள மருத்துவர்களிடமும் இலவசமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். எந்தச் சூழ்நிலையிலும் தற்கொலை அல்லது வன்முறை என்பது தீர்வல்ல.

மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தற்கொலை எண்ணங்களுடன் போராடுபவர்கள், குடும்பத்தினரிடம் அதைப் பற்றி பேச முடியவில்லை என்றால், அரசின் உதவி எண்ணான 104-ஐ தொடர்பு கொள்ளலாம்” என்கிறார் பூர்ண சந்திரிகா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...