இயக்குனர் வெற்றி மாறன் எடுத்த விடுதலை படத்தின் 2 ம் பாகம் பலரது பாராட்டை பெற்ற நிலையில் இந்த படம் உருவானதில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்திருக்கிறது. திட்டமிட்ட நாட்களை விட அதிகமான நாட்கள் படப்பிடிப்பு நடத்தியது உட்பட பல நூறு படக்குழுவினரை வைத்து வேலை வாங்கியது வரை பல சர்ச்சையான விஷயங்களை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில் படத்தில் நடித்த ராஜீவ் மேனன் மறைமுகமாக தான் வேலை பார்த்த படம் குறித்து பேசியிருப்பது கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி மணிரத்னம் இயக்கிய பாம்பே, குரு, கடல் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது மட்டுமின்றி இயக்குனராக மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் ராஜீவ் மேனன். அண்மையில் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த இவர், வெற்றிமாறனை சூசகமாக தாக்கி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் கூறியிருப்பதாவது,
மணிரத்னம் போன்ற இயக்குனர்களுடன் பணியாற்றும் போது எப்படி ஷூட்டிங் நடக்கப்போகிறது என்பது தெரியும். ஆனால் தற்போது சினிமா ஒரு திட்டமிடப்படாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. எடுத்துக்கொண்டே இருக்கலாம், எப்போ வேண்டுமானாலும் எடுக்கலாம், டிஜிட்டல் வந்ததினால் எது வேண்டுமானாலும் எடுக்கலாம். வேறு எந்த படமும் இல்லை, இதுதான் நமக்கு இருக்கிறது என்றால் அது ஓகே, ஆனால் வெஸ்டர்ன் சினிமா இங்கே சாத்தியமில்லை. ஒரு ஒன்றரை ஆண்டு முதல் இரண்டு ஆண்டு வரை ஷூட்டிங் எடுக்கும் இயக்குனர்கள், நம்ம கூடவே டிராவல் பண்ணனும் சார்னு சொல்றாங்க. என்ன டிராவல்.. இது ஷூட்டிங் பாஸ்; நான் உங்களுக்கு அடிமை இல்ல. எனக்கு ஐடியா வரும்போது ஷூட் பண்ணுவேன் அப்படிங்கிறதெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது. அது சினிமாவுக்கு ஏற்றதும் அல்ல.
சினிமா 100, 200 பேர் அடங்கியது. சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் படம் எடுக்க முடியாது. உதாரணத்திற்கு ஜுராசிக் பார்க் திரைப்படம் 78 நாட்களில் எடுத்து முடிக்க திட்டமிட்டு 72 நாட்களிலேயே ஷூட்டிங்கை முடித்துவிட்டார்கள். இங்கு நாம் திட்டமிடாமல் ஷூட்டிங்கை நடத்துவதால் பாதிக்கப்படும் ஒரே நபர் தயாரிப்பாளர் தான். போதுமான அளவு தயாரிப்பாளர்கள் இல்லாமல் தமிழ் சினிமா தத்தளித்து வருகிறது.