தீபாவளி நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த வருடம் தீபாவளியை கோலாகலமாக கொண்டாட ஒட்டுமொத்த இந்தியாவும் தயாராகி வருகிறது. காரணம் கடந்த இரண்டு வருடங்களில் கோவிட் காரணமாக விதிக்கப்பட்ட ஏகப்பட்ட கெடுபிடிகள்.
இப்பொழுதுதான் கோவிட்டின் பிடியிலிருந்து மீண்டு வந்திருப்பது போன்ற உணர்வினால் மக்களிடையே உற்சாகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் மக்களின் நிம்மதிக்கு வேட்டு வைக்கும் வகையில் ஒமைக்ரானின் புதிய வகையான பிஎஃப்.7 கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சீனாவில் திடீரென்று கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து இருப்பதற்கு காரணம் இந்த பிஎஃப்.7 என்கிறார்கள். இந்த வைரஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம் பகுதிகளில் பரவத் தொடங்கி இப்போது இந்தியாவில் காலடி எடுத்து வைத்துள்ளதாக குஜராத் பையோடெக்னாலஜி ரிசர்ச் சென்டர் அறிவித்துள்ளது.
உருமாறிய புதிய கொரோனாவான பிஎ.5.2.1.7 அல்லது பிஎஃப்.7 என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு வாரத்திற்குள் சீனாவை கபளீகரம் செய்திருப்பதாக செய்திகள் அடிப்படுகின்றன. அக்டோபர் 4-ம் தேதி வடமேற்கு சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிராந்தியத்தின் உள்பகுதியில் இது முதன் முதலில் கண்டறியப்பட்டது. இது மிக வேகமாக பரவுவதோடு, பெரும் பாதிப்பையும் உருவாக்க கூடியது என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் சீனாவில் தற்போது புதிய பொதுமுடக்கமும், பயணங்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
“இந்த வைரஸ் மிகவேகமாக பரவும் தன்மையைக் கொண்டிருப்பதால் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது” என்று உலக சுகாதார அமைப்பு, எச்சரித்துள்ளது.
’ஒமைக்ரானும் அதன் துணை வேரியண்ட்களும் நோய் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றிவிட்டு பாதிப்பை ஏற்படுத்து சக்தி வாய்ந்தவை. இப்பொழுது கண்டறியப்பட்டிருப்பது பழைய வேரியண்ட்களை மிக வேகமாக பரவக்கூடியது. ஆனால் இதன் பாதிப்பு எப்படியிருக்கும் எப்படி இதுவரை தெரியவில்லை’ என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த புதிய கோவிட் வேரியண்ட் பிஎஃப்.7, மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை எளிதில் ஏமாற்றிவிட்டு, ஏற்கனவே கோவிட் பாதிப்பினாலோ அல்லது தடுப்பூசி போட்டு கொண்டதாலோ நம் உடலில் உருவான ஆன்டிபாடிகளை தாக்கும் என்று இரண்டு ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.