இன்று உலக வானொலி தினம். ஆண்டுதோறும் பிப்ரவரி 13-ம் தேதி உலக வானொலி தினமாக கொண்டாடப்படும் என்று யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2011-ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி 13-ம் தேதி உலக வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது.
உலக வானொலி தினம் கொண்டாடப்படும் சூழலில், வானொலியைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்…
உலகின் முதல் ரேடியோ ஒலிபரப்பு 1895-ம் ஆண்டு மே 13-ம் தேதி மார்க்கோனியால் செய்யப்பட்டது.
இந்தியாவின் முதல் ரேடியோ ஒலிபரப்பு 1923-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் செய்யப்பட்டது. பாம்பே ரேடியோ கிளப் இந்த ஒலிபரப்பை செய்தது. பாம்பே ரேடியோ கிளப்தான் இந்தியாவில் வானொலி சேவையை தொடங்கிய முதல் நிறுவனம்.
கடந்த 2023-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 479 வானொலி நிலையங்கள் உள்ளன. இந்திய மக்கள் தொகையில் 99.19 சதவீத மக்களை சென்று சேரும் வகையில் வானொலியின் சேவை உள்ளது.
ரேடியோ அலைகள் வினாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்தது. இது ஒளியின் வேகத்துக்கு நிகரானதாகும்.
உலகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
உலகின் முதல் எஃப்.எம். ரேடியோ ஒலிபரப்பு 1940-ம் ஆண்டில் தொடங்கியது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபில் டவர், ரேடியோ சிக்னல்களை அனுப்பும் டவராகவும் பயன்படுத்தப்படுகிறது.
நம் நாட்டில் ஆல் இந்தியா ரேடியோ 1936-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி தனது முதல் ஒலிபரப்பை தொடங்கியது.
இப்போது ஆல் இந்தியா ரேடியோ நிறுவனத்துக்கு சொந்தமாக 415 வானொலி நிலையங்கள் உள்ளன. 23 மொழிகளில் அது ஒலிபரப்புகளை செய்து வருகிறது.
ஆல் இந்தியா ரேடியோவின் முக்கிய ஒலிபரப்பான விவித் பாரதி 1957-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
ஆல் இந்தியா ரேடியோவுக்கு லோகோவாக இருக்கும் ட்யூனுக்கு இசையமைத்தவர் வால்டர் கஃப்மேன்.
இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் அமிதாப் பச்சன், ஒரு காலகட்டத்தில் வானொலி அறிவிப்பாளராக விரும்பியுள்ளார். அப்போது அவரது குரல் சரியாக இல்லை என்று கூறி வானொலி நிறுவனம் அவரை நிராகரித்தது.
1936-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி ஆல் இந்தியா ரேடியோவில் முதல் முறையாக செய்தி ஒலிபரப்பப்பட்டது.