மறைந்த இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்குகள் இன்னும் முடியாத நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேரில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் பக்கிங்காம் அரண்மனையின் வாயிலில் பூங்கொத்துகளையும், மலர் வளையங்களையும் வைத்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 70 ஆண்டுகள் இங்கிலாந்தை ஆண்டவர் என்பதால் வரும் 19-ம் தேதி மிகப்பெரிய அளவில் அவரது இறுதிச் சடங்கை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ராணியின் மறைவை அடுத்து, மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட இங்கிலாந்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதில் சிலவற்றைப் பார்ப்போம்…
இங்கிலாந்தின் பணமாக பவுண்ட் ஸ்டெர்லிங் இருக்கிறது. அங்கு அச்சடிக்கப்படும் ஒவ்வொரு பவுண்டிலும் ராணி எலிசபெத்தின் புகைப்படம் இடம்பெற்று வந்தது. இந்நிலையில் இனி அவற்றில் மூன்றாம் சார்லஸின் உருவம் அச்சடிக்கப்பட உள்ளது.
இங்கிலாந்து பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில் ஹெர் மஜெஸ்டி (Her Majesty) என்ற சொற்கள் இடம் பெற்றிருக்கும். அது இனி ஹிஸ் மெஜஸ்டி (His Majesty) என்று மன்னர் சார்லஸ்-ஐ குறிக்கும்படி மாற்றப்பட உள்ளது.
பிரிட்டிஷ் தேசிய கீதத்தின் வரிகளில் இதுவரை கடவுள் எங்கள் கருணையுள்ள ராணியை காக்கட்டும் (God save our gracious queen) என்ற வரி இடம் பெற்றிருந்தது. அந்த வரி, இனி கடவுள் எங்கள் உன்னத மன்னரைக் காக்கட்டும் (God save our noble king) என்று மாற்றப்படும்.
இங்கிலாந்தில் உள்ள காவலர்களின் தொப்பிகளில் இப்போது இ.ஆர் II என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ராணி எலிசபெத் ரெஜினா II என்பதை இந்த எழுத்துகள் குறிக்கின்றன. இனி மன்னர் சார்லஸ் ரெக்ஸ் III என்பதை குறிக்கும் வகையில் அந்த எழுத்துகள் சி.ஆர் III என மாற்றப்படும்.
ராணி எலிசபெத் ஆஸ்திரேலியா, பஹாமாஸ், பெலிஸ், கனடா, கிரெனடா, ஜமைக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட 15 நாடுகளுக்கு ராணியாக இருந்தார். ராணியின் மறைவுக்கு பிறகு மன்னர் அந்த நாடுகளுக்கும் இனி மூன்றாம் சார்லஸ்தான் மன்னர்.
இந்த நாடுகளில் பஹாமஸ், பிலைஸ் ஜமைக்கா, கிரனடா, அன்டிகுவா, பர்புடா, செயின்ட்.கிட்ஸ் அண்டு நெவிஸ் ஆகிய ஆறுக்கும் மேற்பட்ட நாடுகள் ஆங்கில முடியாட்சியை விட்டு தங்களை விலகிக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. அதற்கு மன்னர் சார்லஸ் ஒப்புதல் அளித்தால் இது சார்லஸ் ஆட்சியில் மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்.