தோனி, சச்சின் வரிசையில் அடுத்ததாக யுவராஜ் சிங்கின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது. இதற்கான நடவடிக்கைகளில் டி-சீரிஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் முக்கிய நாயகர்களில் ஒருவர் யுவராஜ் சிங். 2007-ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்து மிரட்டிய யுவராஜ் சிங், அந்த உலகக் கோப்பை தொடரின் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையை வென்றதிலும் யுவராஜ் சிங்கின் பங்கு முக்கியமானதாக இருந்தது.
எல்லாம் சரியாக சென்றுகொண்டிருந்த நேரத்தில் யுவராஜ் சிங்குக்கு நுரையீரலில் புற்று நோய் ஏற்பட்டது. அது அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. மிக கடுமையாகப் போராடி புற்று நோயில் இருந்து மீண்ட யுவராஜ் சிங், பின்னர் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார். யுவராஜ் சிங்கின் இந்த போராட்ட வாழ்க்கை பாலிவுட்டில் திரைப்படம் ஆகிறது. டி-சீரிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ’சிக்ஸ் சிக்சர்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
டி சீரிஸ் நிறுவனம் ஏற்கெனவே அனிமல், கபீர் சிங் உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்துள்ளது. யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை படம் எடுப்பது பற்றி கருத்து தெரிவித்துள்ள டி-சீரிஸ் நிறுவனத்தின் தலைவர் பூஷன் குமார், “தயாரிப்பாளர் ரவி பாக்சந்த்காவுடன் இணைந்து யுவராஜ் சிங்கின் வாழ்க்கை கதையை படமாக எடுக்கிறோம். ரவி பாக்சந்த்கா 2017-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாற்றை கூறும் ஆவணப்படமான, ‘சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்’ படத்தை உருவாக்கியிருந்தார்” என்றார்
இந்த படத்தில் யுவராஜ் சிங்காக நடிக்கப் போவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் இதில் யுவராஜ் சிங்கின் வேடத்தில் ரண்பீர் கபூர் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. டி – சீரிஸ் ஏற்கெனவே தயாரித்துள்ள அனிமல் படத்தில் ரண்பீர் கபூர் நாயகனாக நடித்ததால் அவர் யுவராஜ் சிங்காக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது.