கதை 2028இல் நடக்கிறது.
லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடும் இந்தியாவில் கமிஷன் கிடைக்காததால் அவசர நிலையைப் பிரகடனம் செய்கிறார்கள். தமிழகம் ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. முதல்வரான நாசர், ஆலோசகர் நட்டி, மகள் அனகா ஆகியோரை வீட்டுச் சிறையில் வைக்கிறார்கள். ஆனால், உலக அளவில் அரசியல் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஐநா சபையிலிருந்து விலகி சீனா தலைமையில் சில நாடுகள் ரிபப்ளிக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் இந்தியா சேரவில்லை. இதனால் இலங்கை வழியாகச் சீனா, தமிழகத்தில் புகுந்து முதல்வராக இருக்கும் நாசரைத் தனி நாட்டின் பிரதமராக அறிவிக்கிறது. ஏற்கனவே நாசரின் மருமகன் நட்டி அவரைப் பொம்மையாக ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறார். அதிகாரம் தன் கைக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவருக்குச் சீன ஊடுருவல் ஏதுவாகக் கிடைக்க, அவர்கள் மூலம் மக்களைக் கொன்று குவிக்கிறார். அவர்களைக் காப்பாற்றத் தமிழ் ஆதி என்ன செய்கிறார் என்பதே கதை. .
தமிழ் கதாபாத்திரத்தில் ஆதி வருகிறார். முதல்வர் மகள் அனகா மூலம் கல்வி துறையில் மாற்றம் கொண்டுவரப் போராடுவதும் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படுவதும் என்று பொறுப்பாகவே நடித்திருக்கிறார். ஆனால், அவரது பாத்திர வடிவமைப்பு முழுமை பெற வில்லை. க்ளைமேக்ஸ் வரை அவர் பின் தங்கியே இருக்கிறார்.
அனகா அரசியலில் புகுந்து ஏதோ செய்யப்போகிறார் என்று நினைத்தால் அவரும் வந்து சிறைப்படுகிறார். நட்டி நாட்டி, மனிதராக வருகிறார். அவரது வில்லத்தனம் எடுபடுகிறது. அழகம் பெருமாள் சீமானின் ஜெராக்ஸ் காப்பியாக நடித்திருக்கிறார். அவர் பெயர் புலி. இதில் ஆதி இயக்குநராக அரசியல் பேசியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இலங்கை படையின் பிரியங்கா பெரைரா வித்தியாச மிரட்டல்.
சீன துருப்புகளும் அதன் செயல்பாடுகளும் விளையாட்டுத்தனமாகக் கையாளப்பட்டிருக்கிறது. கதையில் இருந்த தெளிவு திரைக்கதையில் இல்லை. இதனால் படமே சீரியஸ் கதையைக் காமெடியாக எடுத்தது போல் இருக்கிறது.
படத்தில் பிரமிக்க வைக்கிறது கிராபிக்ஸ் காட்சிகள். உலகப்போர் வந்து சென்னையில் குண்டு போட்டால் அண்ணாசாலை, சேப்பாக்க ஸ்டேடியம் எப்படியிருக்கும் என்று காட்டியிருப்பது பிரமிப்பு.
ஹரீஷ் உத்தமன் பாத்திரத்தைக் கம்பீரமாகக் காட்டி கை விட்டிருக்கிறார் ஆதி. இந்திய ராணுவத்தை எளிதாக நினைத்துக் கொண்டதும், அவர்கள் அடுத்து என்ன செய்தார்கள் என்பதிலும் திரைக்கதை சென்றிருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.
தயாரிப்பாளர், இசை, இயக்குநர், ஹீரோவாகவும் ஆதி இருக்கிறார். இதனால் திரைக்கதையில் கவனம் செலுத்த முடியவில்லை. கதாபாத்திரங்கள் எதுவுமே மனதில் ஒட்டவில்லை. காட்சிகளில் எந்த உணர்வும் இல்லாமல் கடந்து போகிறது. முனிஷ்காந்த், சிங்கம்புலி பலரும் இருந்தும் எதுவும் நடக்கவில்லை.
அர்ஜுன் ராஜா கேமரா காட்சிகளைச் சிறப்பாகக் காட்டியிருக்கிறார். இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை பரவாயில்லை.