No menu items!

தமிழகத்தில் வலதுசாரி அரசியலின் எதிர்காலம் – மாலன்

தமிழகத்தில் வலதுசாரி அரசியலின் எதிர்காலம் – மாலன்

தமிழகத்தில் தேசிய அரசியல் வலுப்பெற்று வருகிறது. இப்படிக் கருதுவதற்கான அடிப்படை என்ன? சில அறிகுறிகளை பார்ப்போம்.

அண்மைக்காலமாகத் தமிழ்த் தொலைக்காட்சிகள், அரசியல் கட்சிகள், அறிவுலகம் இவற்றை ஒரு போக்கு தொற்றியுள்ளது. அது இடக்கரடக்கல் (Euphemism). ஒன்றை நேரடியாகச் சொல்லத் திராணியற்று அல்லது கூசி மறைமுகமாக வேறு சொற்களில் குறிப்பிடுவதுதான் இடக்கரடக்கல். அதன் பின் ஒரு விமர்சனத் தொனியும் உண்டு. ‘இந்து மதம்’ என்று சொல்லமாட்டார்கள். மாறாக ‘சனாதனம்’ என்பார்கள். ‘பாஜக ஆதரவாளர்’ என்று குறிப்பிடமாட்டார்கள், மாறாக சிலருக்கு ‘வலதுசாரி’ என்று முத்திரை குத்துவது உண்டு.

வலதுசாரி என்பவர் யார்? இடதுசாரி என்பவர் யார்? அந்தச் சொற்கள் எதைக் குறிக்கின்றன?

1789ஆம் ஆண்டு பிரஞ்சுப் புரட்சியின்போது பிரான்சில் தேசிய மன்றம் (National Assembly) கூடிய போது ஒரே கூச்சல், குழப்பம். வன்முறை வெடிக்கும் சூழல். பாரன் டி காவில் என்ற அவைத் துணைத் தலைவர், ‘அரசரை ஆதரிப்பவர்கள் எல்லாம் வலப்புறம் வந்து நில்லுங்கள், புரட்சியை ஆதரிப்பவர்கள் இடப் புறம் வாருங்கள் என்று அறிவித்தார். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் 1791-ல் அங்கு தேசிய மன்றத்திற்குப் பதில் சட்டமன்றம் உருவாக்கப்பட்ட போதும் அரசமைப்புச் சட்டத்தை ஆதரிப்பவர்கள் வலப்புறமும் எதிர்ப்பவர்கள் இடப்புறமும் அமரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

தமிழக சட்டப்பேரவை

அன்றிலிருந்து உலகமெங்கும் சட்டமன்றங்களில் ஆளும் கட்சியினர் அவைத் தலைவரின் வலப்புறமும் எதிர்க்கட்சியினர் இடப்புறமும் அமர வைக்கப்படுகின்றனர். பிரிட்டிஷ், பிரான்ஸ், ஜெர்மன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடாளுமன்றங்களிலும் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் மக்களவை, மாநிலங்களவை, மாநிலச் சட்டமன்றங்களிலும் இதுபோல்தான் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. (ஆங்கிலேயர்கள் எதைச் செய்தாலும் அதற்கு நேர்மாறாகச் செய்கிற அமெரிக்காவில் ‘முற்போக்கு’ எனக் கருதப்படும் ஜனநாயகக் கட்சியினர் அவையின் வலப்புறமும், ‘மரபார்ந்தவர்கள்’ எனப்படும் குடியரசுக் கட்சியினர் இடப்புறமும் அமர்கின்றனர்)

இந்த அடிப்படையில் பார்த்தால் அரசை ஆதரிப்பவர்கள் வலதுசாரிகள், எதிர்ப்பவர்கள் இடதுசாரிகள் என்றாகிறது. அப்படியானால் சீனத்தில் கம்யூனிஸ்ட்கள் வலதுசாரிகள்! தமிழ்நாட்டில் திமுக மற்றும் திமுகவை ஆதரிக்கும் கட்சிகள் வலதுசாரிகள்! அவர்கள் தில்லிக்குப் போனால் இடதுசாரிகள்!

சரி, வரலாற்றின் அடிப்படையில் வேண்டாம், சித்தாந்தங்களின் அடிப்படையில் பார்க்கலாமா? அரசியல் அறிஞர்கள் சித்தாந்தங்களின் அடிப்படையில் அரசியல் கருத்துத் தளத்தை நான்காக வகைப்படுத்துகிறார்கள். இடதுசாரிகள் (Left) மையத்திலிருந்து இடப்புறமாக சாய்ந்தவர்கள் (Centre-Left), மையத்திலிருந்து வலப்புறம் நோக்கிச் சாய்ந்தவர்கள் (Centre-Right), வலதுசாரிகள் (Right). இந்த நான்கும் வெவ்வேறு வகையான அரசியல் அமைப்பையும் வெவ்வேறு வகையான பொருளாதாரத்தையும் கொண்டவை. இடதுசாரிகளின் அரசியல் அமைப்பு ‘சர்வாதிகாரம்’ (Autocracy), மையத்திலிருந்து இடப்புறமாகச் சாய்ந்தவர்களின் அரசியல் அமைப்பு ‘ஒற்றை ஆட்சி’ (Unitary), மற்ற இரண்டும் ‘ஜனநாயகம்’ (Democracy). இடதுசாரிகளின் பொருளாதார அமைப்பு ‘சோஷலிசம்’. இடப்புறம் சாய்ந்த மையத்தினரின் பொருளாதார அமைப்பு ‘நெறிப்படுத்தப்பட்ட சந்தை’, வலப்புறம் சாய்ந்தவர்களின் பொருளாதார அமைப்பு ‘கலப்புப் பொருளாதாரம்’,  வலதுசாரியினரின் பொருளாதார அமைப்பு ‘மூலதனத்தத்துவம்’.

ருத்துத் தளம் (Ideological spectrum)

இடது
LEFT  
மையம் – இடது
CENTRE LEFT  
மையம் – வலது
CENTRE RIGHT  
வலது
RIGHT

அரசியல் அமைப்பு (Political System)

சர்வாதிகாரம்
Autocracy  
ஒற்றையாட்சி
Unitary  
ஜனநாயகம்
Democracy 
ஜனநாயகம்
Democracy

பொருளாதாரம் (Economy)

சோஷலிசம் Socialism கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரம் Regulated கலப்புப் பொருளாதாரம் Mixed மூலதனத்துவம் Capitalism

இதன்படி பார்த்தால் சர்வாதிகார அரசியல் அமைப்பையும் சோஷலிசத்தைக் கைவிட்ட பொருளாதாரத்தையும் கொண்ட சீனம் இடதுசாரியா வலதுசாரியா? ‘நெறிப்படுத்தப்பட்ட’ ஜனநாயகத்தையும் மூலதனத்தத்துவ பொருளாதாரத்தையும் கொண்ட சிங்கப்பூர் வலதுசாரியா இடதுசாரியா?

என்னைக் கேட்டால் இடதுசாரி – வலதுசாரி என்று ஏதுமில்லை. அவை பாடப்புத்தக வார்த்தைகள். ஒருவர் ஒரு இடத்தில், ஒரு விஷயத்தில், ‘இடதுசாரி’யாகவும் அவரே இன்னொரு விஷயத்தில் வலதுசாரியாகவும் இருக்க முடியும் என்பதுதான் யதார்த்தம் .

காலாவதியாகிவிட்ட, செயற்கையான, ஐரோப்பியர் வகுத்த, வகைப்பாடுகளை விட்டுவிட்டு இயற்கையான, இந்தியாவிற்கு உரிய வகைமைகளைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதே சிறந்தது. அத்தகைய வகைமை எது?

தேசியவாதம் – எதிர் பிராந்தியவாதம் (Nationalism Vs Regionalism) என்பதே… தேசம் என்ற கருத்தியலை ஏற்று அதன் நலன் குறித்துச் சிந்தனை கொண்டவர் ‘தேசியவாதி’. பிராந்திய (மாநில, வட்டார) நலனை மாத்திரம் கருத்தில்கொண்டு சிந்திப்பவர் ‘பிராந்தியவாதி’.

தேசம் என்பது என்ன?

பொதுவான ஒரு நிலப்பரப்பை, தொன்மங்களை, வரலாற்றை, கலாச்சாரத்தை, இன அடையாளத்தை, தங்களுக்குள் பகிர்ந்துகொண்ட சமூகம் என்பதுதான் தேசம் என்று வல்லுநர்கள் வரையறை செய்திருக்கிறார்கள். (Community of people who share a common territory, history, culture, ethnicity)

அப்படி இந்தியா என்றொரு தேசம் இருந்ததா? இந்தியா என்பதே வெள்ளைக்காரர்கள் உருவாக்கியது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலேயர் உருவாக்கியது அவர்கள் வசதிக்கான இந்தியா என்ற நிர்வாக அமைப்பு. ஆனால், அதற்கும் முன்னரே பாரதம் இருந்தது. கலாச்சாரத்தால் இணைக்கப்பட்ட, தொன்மங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்ட, பொது வரலாற்றைக் கொண்ட ஒரு நிலப்பரப்பு, மக்கள் தொகுப்பு இருந்தது.

இந்தியா இத்தனை அந்நியர் படையெடுப்புக்களுக்கும் பிளவுபடுத்தும் முயற்சிகளுக்கும் பின்னரும் ஒரு தேசமாக இருக்கிறதென்றால் அந்தப் பிணைப்பு. அரசியல் கட்சிகளால் அல்ல, நிர்வாக அமைப்புக்களால் அல்ல, வர்க்க ஒற்றுமையால் அல்ல, கலாச்சாரத்தால் ஏற்பட்டது.  

கலாச்சாரத்தைப் பகிர்ந்துகொண்ட அந்த தேசத்தின் ஒரு பகுதியாக, தமிழகம் இருந்ததா என்றால் ஆம் இருந்தது. என்ன ஆதாரம்?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நூல் புறநானூறு. இதன் காலம் கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை எனக் கருதப்படுகிறது (தமிழ் இணைய பல்கலைக்கழக இணைய தளம்) இதன் இரண்டாவது பாடல், முரிஞ்சியூர் முடிநாகராயர் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனைப் பாடிய பாடல். அவர் அந்த அரசனை, ‘பொற்கோட்டு இமயமும் பொதியமும்’ போல வாழ்க என வாழ்த்துகிறார். பொதிகை இங்கே தென் தமிழ் நாட்டில், இமயம் வடக்கே. பாரதம் என்ற தேசத்தின் பெரும் நிலப்பரப்பின் தொடர்ச்சிக்கான சாட்சியம் இது. இந்தப் பாடலில் மகாபாரதப் போர் பேசப்படுகிறது. மகாபாரதம் என்ற தொன்மத்தை ஏற்ற கலாச்சாரத்தின் சான்று இது. புறநானூற்றின் 378-வது பாடல் சீதையை இராவணன்  சிறையெடுத்த செய்தியைப் பேசுகிறது. பரிபாடல் கிருஷ்ணன், பலராமன் ஆகிய பாரதப் பாத்திரங்களைப் பேசுகிறது. நெருப்பிலிருந்து தோன்றியவள் திரெளபதி என்ற நம்பிக்கையில் அம்மன் கோயில்களில் தீமிதி நடக்கிறது; அதே மாதத்தில் ஹோலியை ஒட்டி வட இந்தியாவிலும் கொழுந்து விட்டு எரியும் தீயைத் தாண்டிக் கடக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன. திரெளபதி அம்மன் வழிபாடு இந்தியாவெங்கும் பல இடங்களில் உள்ளது.

பாஜகவின் வேல் யாத்திரை

நிலப்பரப்பு, கலாச்சாரம் என்பதெல்லாம் சரி. ஆனால், இனம்?

மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் படையெடுத்து வந்து இங்கிருந்த பழங்குடிகளான ‘தஸ்யூ’க்களை வெற்றி கொண்டார்கள் என்று சொல்கிறார்களே?

ஆரியப் படையெடுப்பு என்ற தியரியை முதலில் பேச ஆரம்பித்தவர் பிலிப்போ செஸஸ்டி (Philippo Sessetti) என்ற இத்தாலிய வியாபாரி. 16ஆம் நூற்றாண்டில் (1584) கோவாவிற்கு வந்த அவர் சில சமஸ்கிருதச் சொற்களை அறிந்துகொண்டார். லத்தீன், கிரேக்கச் சொற்களுக்கும் அந்தச் சொற்களுக்குமிடையே சில ஒற்றுமைகள் இருப்பதைக் கண்ட அவர் (வேறு எந்தவித ஆதாரமோ ஆய்வோ இல்லாமல்), அந்த அடிப்படையில் ஆரியர்கள், இந்தியா மீது படையெடுத்து வந்தார்கள் என்ற கருத்தை முன்மொழிந்தார். பின்னர் மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் அதை எதிரொலித்தார்கள். இதை பிரிட்டீஷ்காரர்கள் இரண்டு விதங்களில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொண்டார்கள். ஒன்று ‘காட்டுமிராண்டிகளாக’ இருந்த பழங்குடிகளுக்கு ‘கலாச்சாரத்தை’ கொடுத்த ஆரியர்கள் வழி வந்தவர்கள் நாங்கள் என்று கட்டமைத்து தங்கள் மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்வது. மற்றொன்று இங்கிருந்த மக்களை பிளவுபடுத்தி, அவர்களிடையே மோதலை ஏற்படுத்தித் தங்கள் அதிகாரத்தைப் பலப்படுத்தி கொள்வது.

பின்னால் மாக்ஸ்முல்லரே தனது கருத்துப் பிழையானது என்று ஒப்புக்கொண்டார். ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் (Strasburg University) 1872ஆம் ஆண்டு ஆற்றிய உரையில் ‘ஆரியர் படையெடுப்பு தியரி’ (Aryan Invasion theory-AIT) தவறானது என்றும் ஆரியர்கள் ஓர் இனம் அல்ல என்றும் சொன்னார். அதற்குப் பின் வந்த மொழியியல், மானுடவியல் ஆய்வாளர்கள் பலரும் ஆரியர் படையெடுப்பு தியரியை நிராகரித்திருக்கிறார்கள். (‘The AIT (Aryan Invasion Theory) is based purely on linguistic conjectures which are unsubstantiated’ —Klostermaier, A Survey of Hinduism, 2007, p. 21).

அண்மையில் (2019) வெளியான டி.என்.ஏ. சோதனை முடிவுகளும் இந்த ஆரியப் படையெடுப்பு தியரியை நிராகரிக்கின்றன.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடைப்பட்ட மத்திய ஆசியப் பகுதியில், வெண்கலக் காலத்தைச் சேர்ந்த மக்களது மரபணுவான, ‘ஆரிய மரபணு’ என்று குறிப்பிடப்படும் R1a1 gene, ஹரப்பன் நாகரீகத்தை (சிந்து சமவெளியில் வாழ்ந்த) சேர்ந்த மக்களிடம் காணப்படவில்லை என்று மரபணு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள் (https://www.newindianexpress.com/magazine/2019/sep/15/its-all-in-the-genes-does-dna-call-bluff-on-aryan-invasion-theory-2032707.html)

ஆரியர்கள் ஓர் இனம் என்ற கருத்தை நிராகரித்த இந்திய அறிஞர் டாக்டர் அம்பேத்கர். ஆம். பாபா சாகேப் அம்பேத்கர். இதைக் குறித்து விரிவாகவும் தர்க்க ரீதியாகவும் ‘Who Were The Shudras?’ என்ற நூலில் விவாதிக்கும் அம்பேத்கர் பல சான்றுகளை அடுக்குகிறார். ‘ஆரிய இனம் என்று ஒன்று ரத்தத்தில் இல்லை. அறிவியல் மொழியில் ஆரியன் என்ற சொல் ஒரு இனத்திற்குப் பொருத்தமற்றது. அது ஒரு மொழியைக் குறிக்கிறது. மொழியை அன்றி வேறு எதனையும் அல்ல (There is no Aryan race in blood; Aryan, in scientific language, is utterly inapplicable to race. It means language and nothing but language – மேற்குறிப்பிட்டுள்ள நூல் பக்கம் 61.) பல சான்றுகளை ஆய்ந்த பின் அம்பேத்கர், ‘ ஆரிய இனக் கொள்கை என்பது மிக அபத்தமானது; பல காலம் முன்பே இறந்திருக்க வேண்டியது.’ (The Aryan race theory is so absurd that it ought to have been dead long ago – மேற்குறிப்பிட்ட நூல் பக்கம் 75) என்ற முடிவுக்கு வருகிறார்.

இந்த படு அபத்தமான, என்றோ இறந்திருக்க வேண்டிய கருத்தைத்தான் தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகள் கட்டிக்கொண்டு அழுகின்றன. திராவிட அரசியலின் அடித்தளமே இந்த அபத்தமான கருத்துதான்.

*

இந்த பின்னணியில்தான் தமிழகத்தில் ‘வலதுசாரி’ அரசியலின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியை ஆராய வேண்டும். அதாவது தேசிய அரசியலின் எதிர்காலம் என்ன என்று ஆராய வேண்டும்.

தமிழகத்தில் தேசிய அரசியல் வலுப்பெற்று வருகிறது. இப்படிக் கருதுவதற்கான அடிப்படை என்ன? சில அறிகுறிகளை (symptoms) பார்ப்போம்

அண்மைக்கால அரசியல் சலனங்களில் ஒன்று கம்யூனிஸ்ட்களிடையே ஏற்பட்டிருக்கும் மாறுதல். ‘மதம் என்பது அபின்’ என்று மேடைகளில் முழங்கி வந்த தோழர்கள் மார்க்ஸையும் ஏங்கல்ஸையும் சற்று மறந்துவிட்டு கோவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் போகிறார்கள்.

‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று ஒலித்த அவர்களது குரல்கள் இனி ‘நமச்சிவாயம் வாழ்க, நாதன் தாள் வாழ்க’ என மாணிக்கவாசகரின் திருவாசகத்தைப் பாடப்போகிறது. காரணம் அவை கலாச்சார நிகழ்வுகள் எனக் காரணம் சொல்கிறார்கள் கம்யூனிஸ்ட்கள்.

இதைத்தானே பாஜக சொல்லிவருகிறது. ஆலயங்கள் நம் கலாச்சார சின்னங்கள், கோயில் திருவிழாக்கள் கலாச்சார கொண்டாட்டங்கள், இந்தியாவைப் பிணைத்து நிற்பது அரசியல் அல்ல, கலாச்சார ஒற்றுமை. இந்துத்துவா என்பது மதம் சார்ந்த தத்துவம் அல்ல, கலாச்சாரம் சார்ந்த கோட்பாடு. இவைதானே பாஜகவின் பார்வை. ‘கறுப்பர் கூட்டம்’ கந்த சஷ்டி கவசம் மீது நடத்திய தாக்குதலைக் கலாச்சார தாக்குதல் என்று கூறித்தானே தமிழ்க் கடவுள் முருகனின் வேலை ஏந்தி யாத்திரை போனார் பாஜக முருகன். அன்று அதை ஏளனமும் ஏகடியமும் செய்த கம்யூனிஸ்ட்கள் இன்று மார்க்ஸைக் கைவிட்டு மாணிக்கவாசகரைக் கையில் எடுத்துக்கொள்வதன் காரணம் என்ன? தொழிற்சங்கம் கட்டப் புறப்பட்டவர்கள் பஜனை மடத்தில் சரண் புகுந்திருப்பது ஏன்?

இதற்கான காரணங்களைக் கண்டுகொள்வது கடினமல்ல. மதத்தை பாஜக அரசியலுக்குப் பயன்படுத்துகிறது என்று சொல்லி வந்தவர்கள் இன்று மதத்தை நாடி வருவதற்குக் காரணம் அண்மையில் வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகள். அது காட்டும் நாட்டில் ஏற்பட்டுள்ள தேசிய உணர்வின் எழுச்சியைக் கண்டு கம்யூனிஸ்ட்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்குள்ளாகியிருக்கிறார்கள்

ஆனால், இத்தனை நாள் நாத்திகம் பேசியவர்கள் பக்தர்களாக மாறும் போது அதன் பலன் ‘வலதுசாரி’ சக்திகளுக்குத்தான் கிடைக்கும், அதற்கான சான்று காங்கிரஸ்.

கங்கையில் பிரியங்கா காந்தி

இதே போன்ற ஓர் அணுகுமுறையை ராகுல் காந்தி முந்தைய தேர்தல்களில் கைக்கொண்டார். தன்னை சிவபக்தன் என்று சொல்லிக்கொண்டார். ஏதோ ஒரு கோத்திரம் சொல்லித் தன்னை பிராமணன் என்று சொன்னார். காங்கிரஸ் ‘ இந்துக்களின் கட்சி என்று சொன்னார். இத்தனை நாளாகக் கங்கை பக்கம் எட்டிப் பார்க்காத பிரியங்கா காந்தி அண்மையில் உ.பி. தேர்தலின் போது கங்கையில் ஆரத்தி எடுத்தார். ஊடகங்கள் இதனையெல்லாம் மென் இந்துத்துவா என்று எழுதின. இந்த முயற்சிகளுக்குக் கிடைத்த பலன் என்ன? காங்கிரஸ் மேலும் தோற்றது, பலவீனமானது.

எது பக்தி, எது நாடகம் என்று தெரிந்து கொள்ள இயலாத அளவிற்கா மக்கள் மக்குகளாக இருக்கிறார்கள்?

பாஜக அரசை எதிர்த்து நடத்தப்படும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு அரசின் ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது, பங்கேற்றால் சம்பளம் கிடையாது என்று ‘இடதுசாரி’ திமுக அரசு மிரட்டுகிறது. பாஜகவிற்கும் காவல் கம்யூனிஸ்ட்களுக்கும் தோழன்!

மத்திய அரசை – மன்னிக்கவும் ‘ஒன்றிய’ அரசை – எதிர்த்து சட்டமன்றத்தில் பேசும் திமுக, மக்கள் மன்றத்தில் நடத்தப்படும் போராட்டத்தில் பின் வாங்குவது ஏன்? மக்களிடம் போராட்டங்கள் அதிலும் அரசு ஊழியர்களின் போராட்டங்கள் குறித்து ஆதரவோ அனுதாபமோ இல்லாத ‘வலதுசாரி’ மனநிலை நிலவுவதுதான் காரணம்.

நோட்டாவிற்கும் கீழ் வாக்கு வாங்கிய கட்சி என்று கேலி பேசப்பட்ட ‘வலதுசாரி’ பாஜக அண்மையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது எதை நிரூபிக்கிறதோ இல்லையோ, அதன் அடிமட்ட அமைப்பு விரிவும் வலிமையும் பெற்று வருவதைக் காட்டுகிறது. இதனால் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் அணுகுமுறையை மாற்றி வருகின்றன.

மக்களை பிளவுபடுத்தி, மாநில கட்சிகள் அதிகாரம் பெற முயல்வதன் நோக்கம் பொது மக்களின் வளர்ச்சி அல்ல, தங்கள் சொந்தப் பெண்டு பிள்ளைகளின் வளர்ச்சி என்பதை இந்திய மாநில கட்சிகள் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன.

திமுகவில் உதயநிதி, திருணாமூலில் மம்தாவின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரேயின் மகன் ஆதித்யா, சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸ் போன்றவர்கள் எப்படி வாரிசுகளாக வளர்த்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே வளர்ந்து நிற்கும் வாரிசுகளான ராகுல் – பிரியங்கா, அகிலேஷ் யாதவ், பிரகாஷ் சிங் பாதலின் வாரிசுகள் ஆட்சி அதிகாரம் பெறுவதை மக்கள் அண்மையில் நிராகரித்திருக்கிறார்கள். மனோகர் பாரிக்கரின் மகனுக்கு டிக்கெட் கொடுக்க மறுத்த பாஜகவையும் அவர்கள் கவனிக்கிறார்கள்.

தேசிய அளவில் ஏற்படும் எழுச்சி தமிழகத்திலும் சிற்றலைகள் ஏற்படுத்தும்  

இவையெல்லாம் எதிர்காலத்தில் தமிழகத்தில் ‘வலதுசாரி’ அரசியல் வலுப்பெற வழிகோலும். மாநில வாதம் எப்படி ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் என்பதையும், இனவாத அரசியல் எவ்வளவு அபத்தமான காலாவதியான (அம்பேத்கரின் வார்த்தைகள்) ஒன்று என்பதை மக்கள் விளங்கிக் கொள்ளும் போது ‘வலதுசாரி’ அரசியல் வலுப்பெறும். தமிழகம் தாமதமாகக் கண்விழிக்கும். ஆனால், அதற்கு அதிக நாள்கள் இல்லை.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...