‘The Elephant Whisperers’ டாக்குமெண்டரிக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. பிரதமர் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலரும் இந்த வெற்றியைக் கொண்டாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒட்டு மொத்த இந்தியாவே இந்த டாக்குமெண்டரி படத்தை கொண்டாடிக்கொண்டு இருக்க, இந்த டாக்குமெண்டரியின் நாயகர்களான 2 யானைகளும் காணாமல் போயிருப்பதாக அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகி உள்ளது.
ஆவணப் பட தயாரிப்பாளர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய ‘The Elephant Whisperers’ ஆவண ஆவணப்படம் கடந்த ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. தமிழ்நாட்டின் முதுமலை தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், ஒரு வயதான தம்பதிக்கும் 2 காட்டு யானைகளுக்கும் இடையேயான பிணைப்பை காட்டுவதாக உருவாகியிருந்தது. பொம்மன், பெள்ளி ஆகிய வயதான தம்பதிகள் காட்டில் காயம்பட்டு கிடந்த ரகு என்ற ஆண் யானையையும் அம்மு என்ற பெண் யானையையும் எப்படி பராமரித்து வளர்த்து வருகிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்த நிலையில் இதில் காட்டப்பட்டுள்ள ரகுவையும் அம்முவையும் காணவில்லை என்ற அதிர்ச்சிகரமான செய்தி இப்போது வெளியாகி உள்ளது. அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்ற சிலர் அந்த யானைகளை காட்டுக்குள் விரட்டி விட்டதாகவும், தற்போது அந்த யானைகளைத் தேடி பொம்மன் காட்டுப் பகுதியில் அலைந்து வருவதாகவும் ‘டிஎன்ஏ’ என்ற ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசியுள்ள பொம்மன், ‘போதையில் எங்கள் காட்டுப்பகுதிக்குள் நுழைந்த சிலர் ரகுவையும் அம்முவையும் காட்டுக்குள் விரட்டிவிட்டனர். நான் இப்போது அந்த யானைகளைக் காட்டுக்குள் தேடி வருகிறேன். இப்போது கிருஷ்ணகிரி மலைப்பகுதியில் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அந்த யானைகள் கட்டுக்குள் தவித்து வருகின்றனவா அல்லது மற்ற யானைகளுடன் சேர்ந்துவிட்டதா என்று தெளிவாகத் தெரியவில்லை என்று கூறும் பொம்மன், அவற்றை கண்டுபிடித்தால் உடனடியாக வன இலாகா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாகவும் கூறி இருக்கிறார்.