No menu items!

‘எலக்‌ஷன்’ கதை என்னுடையது – வழக்கு தொடர்ந்த எழுத்தாளர்

‘எலக்‌ஷன்’ கதை என்னுடையது – வழக்கு தொடர்ந்த எழுத்தாளர்

‘உறியடி’ விஜயகுமார் நடிப்பில் வெளியான ‘எலக்‌ஷன்’ படத்தின் திரைக்கதை தன்னுடையது என எழுத்தாளர் கவிப்பித்தன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

‘உறியடி’ விஜயகுமார் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, பாவெல், ஜார்ஜ் மரியான், திலீபன், பிரீத்தி அஷ்ரானி உள்ளிட்டோர் உடன் நடித்துள்ள படம் ‘எலக்‌ஷன்’. மே 17ஆம் தேதி வெளியானது. ‘சேத்துமான்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இப்படத்தை இயக்கியிருந்தார். இயக்குநர் தமிழின் முந்தைய படமான சேத்துமான், எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

‘எலக்‌ஷன்’ படத்தின் கதை உள்ளூர் தேர்தலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களின் வாழ்க்கையில் உள்ளூர் தேர்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை இத்திரைப்படம் காண்பிக்கிறது.

இந்த கதை தன்னுடைய ‘மடவளி’ நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. திரைக்கதைக்கான அடித்தளம் தன்னுடையது எனவும் எழுத்தாளர் கவிப்பித்தன் குற்றம் சாட்டியுள்ளார். ‘சேத்துமான்’ திரைப்படத்துக்கு முன்பே, இத்திரைப்படத்துக்கு வசனம் எழுத இயக்குநர் தமிழ் தன்னை அழைத்ததாகவும், திரைக்கதையை அவர் எழுத எழுத பல திருத்தங்களை செய்துதந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

”சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குநர் தமிழ்’ என்னைத் தேடி வந்தார். அப்போது அவருடைய எந்தப் படமும் வெளியாகி இருக்கவில்லை. ‘‘மடவளி’ நாவலை திரைப்படமாக இயக்க விரும்புகிறேன் சார்’ என்று சொன்னார். சரி என ஒப்புதல் அளித்தேன். ‘நாவலில் உள்ளதைப் போலவே வட ஆற்காடு மாவட்ட வட்டார வழக்கில் தான் படத்திற்கான வசனம் அமைய வேண்டும், அதையும் நீங்கள் தான் எழுத வேண்டும்’ என்றார்.  தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் என்னுடன் தொடர்பில் இருந்தார். அடிக்கடி பேசிக்கொண்டே இருந்தார். இறுதியில் வசனம் எழுதவும் ஒப்புக்கொண்டேன். அவருடைய ‘சேத்துமான்’ படம் வெளியான பிறகு, எங்களின் படத்திற்கான பாதி திரைக்கதையை எழுதி அனுப்பினார். கிடைத்த நேரத்தில் நானும் வசனம் எழுதத் தொடங்கினேன். பிறகு மீதி திரைக்கதையையும் அனுப்பி வைத்தார்.

‘நாவலுக்கும் திரைக்கதைக்கும் நிறைய்ய வேறுபாடுகள் இருந்தன. திரைப்படமாக எடுக்கும் போது நாவலை நூறு சதவீதம் அப்படியே எடுக்க முடியாது. படத்தில் உள்ளாட்சித் தேர்தலை மட்டும் சீரியசாக சொல்லலாம் சார்… கதை அல்லது மூலக்கதை என உங்கள் பெயரைப் போட்டு விடலாம்’ என்றார். 

மடவளி நாவலின் களமான இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எங்களுடைய வசூர் கிராமம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தான் ‘படப்பிடிப்பை நடத்த வேண்டும்’ என்றார்.  இரண்டு நாட்கள் அனுமதி விடுப்பு எடுத்துக் கொண்டு அவரை ஊருக்கு அழைத்துப் போனேன். அங்கேயே தங்கி லோகேஷன் பார்த்தோம்.   அதன் பிறகுதான் மடவளி நாவலை இயக்குநர் தமிழ் திரைப்படமாக இயக்கவும், அதற்கு நானே வசனம் எழுதவும் முறைப்படி ஒரு  ஒப்பந்தம் போட்டோம். லொகேஷன் பார்த்துவிட்டு வந்ததும் எனக்கு கரோனா தொற்று வந்துவிட்டது. உயிருக்குப் போராடி பிழைத்துக் கொண்டேன். உடல் நலப் பிரச்சினையும், நேரச் சிக்கலும் சேர்ந்து கொள்ள… மன உளைச்சல் கூடியது. இறுதியில் மடவளி நாவலை படமாக்க வேண்டாம் என அந்த ஒப்பந்தந்தையே ரத்து செய்துவிட்டோம்.

அதன் பிறகு எழுத்தாளர் அழகியபெரியவன் படத்திற்கான வசனம் எழுதி, ஆம்பூர் பகுதியில் அதற்கான படப்பிடிப்பு நடப்பதை அறிந்து இயக்குநர் தமிழை கைப்பேசியில் தொடர்புகொண்டேன். ‘கதையை மாற்றிவிட்டேன். மடவளி நாவலுக்கும் படத்திற்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. படம் பார்த்தால் உங்களுக்கே தெரியும் சார்…’. ‘கதையை மாற்றி விட்டார். ஆனால் திரைக்கதைக்கான அடிப்படை மடவளி நாவல்தான்…’ என அந்தப் படத்தில் பணியாற்றும் ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். வழக்கு தொடரலாம், உடனே தடை உத்தரவு வாங்கலாம் என என்னுடைய நெருங்கிய நண்பர்கள் சொன்னார்கள். இயக்குநர் தமிழ் சொன்னதை நான் நம்பினேன். அதனால் எந்த வழக்கும் தொடரவில்லை.

‘எலக்சன்’ வெளியான பின்னர் திரைப்படத்தைத் திரையரங்கிற்குப் போய்ப் பார்த்தேன். எனக்கு எந்தத் திரைக்கதையை அவர் அனுப்பி வைத்து…. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தேனோ… அதே திரைக்கதைதான். அதில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. மடவளி நாவலுக்கும் இந்தப் படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என இப்போதும் இயக்குநரால் சொல்ல முடியுமா? ஒப்பந்தத்தை ரத்து செய்த பிறகும் அதை அப்படியே இயக்குவது தான்  ஒரு திரைப்பட இயக்குநருக்கான அறமா?” எனக் கெள்வி எழுப்பியுள்ளார் கவிப்பித்தன்.

மேலும், “எலக்சன் திரைப்படத்தைப் பார்த்த பல நண்பர்கள் வழக்கு தொடரும்படி என்னிடம் கூறினார்கள்.  உடனே நீதிமன்றத்தை நாடுங்கள் என பல எழுத்தாளர்கள் ஆதரவுக் கரம் நீட்டினார்கள். ‘த.மு.எ.க.ச. உங்கள் பக்கம் நிற்கும்’ என அமைப்பின் மதிப்புறு தலைவர் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் கூறினார்.

வழக்குத் தொடுப்பதை விட இரு தரப்பும் பேசி சுமூகமான ஒரு உடன்பாட்டுக்கு வரலாம் என இயக்குநரோடு தொடர்பில் உள்ள சில நண்பர்கள் சொன்னார்கள். அதுவும் சரியாக இருக்கும் என சில வாரங்கள் வரை பொறுத்திருந்தேன். ஆனால், இயக்குநரோ அவர் சார்பிலோ அதிகார பூர்வமாக இதுவரை யாரும் வந்து பேசவில்லை. எனவே த.மு.எ.க.ச. முன்னாள் மாநிலத் தலைவரும் சென்னை உயர்நீதி மன்றத்தின் முதுபெரும் வழக்கறிஞருமான சிகரம் செந்தில்நாதன் அவர்கள் மூலம் வழக்குத் தொடுக்க தயாராகி விட்டேன்.

‘மடவளி’ நாவலை முழுமையாக வாசித்துவிட்டு திரைப்படத்தையும் பார்த்த பிறகுதான் ‘வழக்கு போடலாம்’ என ஒப்புக்கொண்டார் செந்தில்நாதன். எழுத்தாளர் திரு. பெருமாள்முருகன் வழக்கில் வெற்றியைத் தேடித் தந்தவர் அவர்தான். வழக்கின் பூர்வாங்கமாக 15 நாட்கள் அவகாசம் அளித்து இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  ஆனால் இப்போதும் கூட எங்கள் வாசல்கள் திறந்தே இருக்கின்றன’ எனக் கூறியுள்ளார் கவிப்பித்தன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...