சமீபத்திய அரசியல் நிலவரம் மற்றும் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், டெல்லியில் உள்ள அக்கட்சியின் புதிய அலுவலகமான இந்திரா பவனில் இன்று சந்தித்து விவாதித்தனர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கொண்டனர். மேலும், பல்வேறு மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
கட்சி நிர்வாகிகளிடம் பேசிய கார்கே, கட்சியில் சித்தாந்த ரீதியிலான தலைவர்களை ஊக்குவிப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், வரும் நாட்களில் நடக்கும் தேர்தல் முடிவுகளுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார். அதேபோல், குறைவான வசதிகளே இருந்தபோதிலும் டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடுமையாக போராடியது என்று தெரிவித்த கார்கே, கட்சி நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியை நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக உருவாக்க உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதன்பின், இன்றைய காங்கிரஸ் கட்சிக் கூட்டம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்த கருத்தையும் கார்கே பதிவு செய்துள்ளார். “பிரதமர் மோடி அமெரிக்க சென்று வந்தபோதிலும், அமெரிக்கா நாடு கடத்தும் இந்தியர்கள் முன்பு போலவே கைகளில் விலங்கிடப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். சைவம் உண்ணும் பயணிகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான இந்த அவமானத்தை தடுக்க இந்திய அரசு தவறி விட்டது.
பொருளாதார விவகாரத்திலும் அமெரிக்கா நம்மை மிகவும் காயப்படுத்திவிட்டது. அந்நாடு நம் மீது அதிக வரிகளை விதித்துள்ளது. ஆனால், அதற்கு எதிராக பிரதமர் மோடி எதுவும் கூறவில்லை. அவர்களுக்கு சாதகமான ஒப்பந்தங்களை அவர்கள் நம் மீது திணிக்கிறார்கள். நமது அரசும் அதை மவுனமாக ஏற்றுக்கொள்கிறது. இது இந்தியா மற்றும் இந்தியர்களுக்கான அவமானமாகும்” என்று கார்கே தெரிவித்துள்ளார்.