அராத்து
நான் பங்குச் சந்தையை தொடர்ந்து கவனிப்பவன் அல்ல. மக்களின் லைஃப் ஸ்டைல், பொது மக்கள் வாழ்வில் புழங்கும் பணம், கடைகளில் கூட்டம் , செலவு செய்யும் முறை ஆகிய நேரடி அனுபவங்களை வைத்து ஓரளவு கணித்துப் பார்ப்பேன்.
இப்போது டிரம்ப் எஃபக்டால் சந்தைகள் சரிந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள். எனக்கு என்னமோ அது சரிவதற்கு ஒரு சாக்கு வேண்டும், அப்பாடா ஒரு சாக்கு கெடச்சிதுடா என சரிவது போல உள்ளது.
நிஃப்டி 20,000 மேல் போனபோதே , இது தப்பாச்சே எனத் தோன்றியது. ஏனெனில் 25,000 வரை போனதற்கு இந்தியாவில் ஒரு காரணமும் எனக்குத் தென்படவில்லை. மாதச் சம்பளம் வாங்குபவர்களைத் தவிர எவரிடமும் பெரிய , பெரிய என்ன பெரிய , சிறிய பொருளாதார முன்னேற்றம் கூட இல்லை.
கொரோனாவிற்க்ப் பிறகான இந்தியாவில், அரசியல்வாதிகள், அரசியல்வாதிகளை அண்டிப் பிழைக்கும் ஊளை சதை தொழிலதிபர்கள் , கார்ப்பரேட்டுகள் இவர்களைத் தாண்டி யாருக்கும் பொருளாதார முன்னேற்றம் இல்லை. ஒரு நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் பொருளாதார ஏற்றம் இல்லாதபோது சந்தை மட்டும் எப்படி வளரும்?
பல்வேறு காரணிகளால் ஊதிப்பெருதாக்கப்பட்ட சந்தை மட்டும் எப்படி ஊதிக்கொண்டே இருக்கும்?
ஒரே நம்பிக்கை என்னவென்றால், நீண்ட கால நோக்கில் பங்குச் சந்தை இதுவரை லாபமே கொடுத்துள்ளது. இனியும் கொடுக்கும். அது எவ்வளவு நீண்ட காலம் என்பதே நாம் கணிக்க வேண்டியது.
உலகமயமாக்கல் காலம் முடிந்து விட்டது என இங்கிலாந்து பிரதமர் சொல்லியிருந்ததையும், வேறு பல கட்டுரைகளையும் வைத்துப் பார்த்தால், உலகம் இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு மாறுதல்களைச் சந்திக்கப் போகிறது எனத் தோன்றுகிறது.
யார் கையிலோ மாட்டிய பொருளாதாரத்தை இஷ்டத்துக்கு தப்புத் தப்பாக கட்டி ஏற்றியிருக்கிறார்கள் என்பது மட்டும் என் சிற்றறிவுக்கு எட்டுகிறது. பொருளாதாரம் அறிவியல் கிடையாது. அதற்காக அதை கலை போலவும் இஷ்டத்துக்கு புருடா விட்டுக்கொண்டிருக்க முடியாது என்பதைத்தான் அவ்வப்போது நடக்கும் சரிவுகள் சுட்டிக் காட்டிக்கொண்டு இருக்கின்றன.
இது ஒரு பயச்சரிவு. உண்மையான சரிவு படிப்படியாக இன்னும் இருக்கின்றன என்றே தனிப்பட்ட முறையில் நான் நினைக்கிறேன்.
ஏஐ தொழில்நுட்பம் மெச்சூர்ட் ஆகி , அதனால் சாஃப்ட்வேர் துறையில் ஏற்படப்போகும் வேலை இழப்புகள், அதைத் தொடர்ந்து எத்தனை பேர் வேலை இழந்து , ஈ எம் ஐ கட்ட முடியாமல் திணறப்போகிறார்கள் என்பது போன்ற பல்வேறு காரணிகள் வரிசை கட்டி நிற்கின்றன.
இந்த சிரமமான சூழலில் வரி விதிப்பு மட்டுமே அரசின் பணி என நினைக்கும் மோசமான பல்வேறு அரசியல் தலைவர்களிடம் உலகம் சிக்கியிருக்கிறது.