இந்தியாவைச் சேர்ந்த அசுதோஷ் என்பவர் ஸ்வீடனில் ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் ஸ்வீடிஷ் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை விரிவாக விளக்கி உள்ளார்.
இந்தியாவிற்கு மேற்கே உள்ள ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் வாழ்க்கை தரமும், வசதி வாய்ப்புகளும் மிக அதிகம். அங்கு தொழிற்சங்க விதிகளும் வலுவாக உள்ளன. மிகவும் முன்னேறிய நாடுகளான இங்கு பணியாளர்களுக்கு ஏராளமான சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இந்தியா உடன் ஒப்பிடும் போது சம்பளம் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஐடி நிறுவன பணியாளர்களுக்கு அளிக்கப்படும் சலுகை மற்றும் வசதிகள் கேட்போரை மலைத்து போக வைத்துள்ளது. நிறைய பேர் இதுபற்றி பதிவுகளை வெளியிட்டுள்ளார்கள்.
ஸ்வீடனில் ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது என்றும், பெரும்பாலான அலுவலகங்கள் பொதுவிடுமுறைக்கு முதல் நாள் அரை நாட்கள் விடுமுறை வழங்குவதாகவும், இலவசமாக ஐபோன்கள் வழங்குவதாகவும் 10000 மாதாந்திர உதவி தொகை, மதிய உணவு, மசாஜ், ஜிம் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகிறது என்றும் இந்திய ஐடி ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட பட்டியலை பார்த்து பலர் திகைத்து போயிருக்கிறார்கள்.
அந்த வீடியோவில் அசுதோஷ் கூறிய ஒவ்வொரு தகவலும் இந்தியாவில் வேலை செய்வோரை ஆச்சரியப்பட வைத்தள்ளது. அசுதோஷ் இதுபற்றி கூறுகையில். ஸ்வீடனில் முழுநேர ஊழியர்கள் வருடத்திற்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நேரத்தைப் பெற உரிமை உள்ளது. பெரும்பாலான அலுவலகங்கள் பொது விடுமுறைக்கு முன் அரை நாள் விடுமுறை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளன.
புதிதாக வேலையில் சேருவோருக்கு ஆரம்பமே அமர்க்களப்படுத்தும் விதமாக, ஆப்பிள் உள்ளிட்ட பெரிய பிராண்ட் மடிக்கணினி மற்றும் லேட்டஸ்ட் வெர்சனில் ஐபோன் வழங்கப்படுகிறது.. மேலும் மசாஜ் செய்து கொள்ள வசதிகள், ஜிம்மில் உறுப்பினராக சேரும் வசதி, பிற ஆரோக்கிய சேவைகளுக்காக அலவன்ஸ் மட்டும் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை ஸ்வீடிஸ் நிறுவனங்கள் தருகின்றன. இது அங்கு வேலை செய்வோரின் சிறப்பான வாழ்க்கை தரத்திற்கு நிறுவனம் தரும் முக்கியத்துவத்திற்கு உதாரணம் ஆகும். நீண்ட தூரத்தில் இருந்து வந்து வேலை செய்வோருக்காக, சில நிறுவனங்கள் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை இருப்பிட அலவன்ஸ் வழங்குகின்றன.
மேலும் 10,000 ரூபாய் மாதாந்திர உதவித்தொகையுடன், மதிய உணவும் வழங்கப்படுகிறது. ஊழியர்களுக்கான சலுகைகள் இத்துடன் முடிவடையவில்லை. குழந்தையை பார்த்துக் கொள்ளும் பெற்றோர்கள் தங்கள் சம்பளத்தில் 80 சதவீதத்துடன் 480 நாட்கள் விடுப்பு பெற தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் ஊழியர்கள் கார்ப்பரேட் சேமிப்புடன் கார்களை குத்தகைக்கு எடுத்துக் கொள்ள முடியும்.