ஆதிரை வேணுகோபால்
இல்லற வாழ்க்கை.. குடும்பம்… குழந்தைகள் பிறப்பு .. அவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு.. பிள்ளைகள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நிலைக்கு வந்து விட்டனர்.
ஆக நாம் ஐம்பதைக் கடந்து கொஞ்சம் கொஞ்சமாக முதுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் .
முதுமையை எப்படி மகிழ்ச்சியுடன் அணுகுவது…?
இதோ இப்படித்தான்.
வயதுக்கேற்ற சின்ன சின்ன அசௌகரியங்கள் இருந்து கொண்டு தான் இருக்கும் ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு நாம் வாழ்ந்த வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் திரும்பி கொஞ்சம் பார்த்து…இனி எப்படி இருந்தால் வாழ்வில் மகிழ்ச்சி வரும்!?
யோசியுங்கள். யோசித்து முடிவு எடுங்கள்.
எத்தனை எத்தனை மகிழ்வான தருணங்கள், சில துக்க நிகழ்வுகள் கோபங்கள், ஏமாற்றங்கள் கண்ணீர்த் துளிகள் இப்படி… எல்லாவற்றையும் கடந்து வந்து விடுங்கள்.
ஒருவரை ஒருவர் அடிக்கடி பாராட்டிக் கொள்ளுங்கள் .மனைவியின் சிக்கனம் சமையல் , விருந்தோம்பல் செயல்களில் நேர்த்தி பரிமாறுதல் இப்படி எத்தனையோ.. அதேபோல் கணவனின் பொறுப்புணர்வு ,உழைப்பு செய்யும் சின்னச்சின்ன உதவிகள்.. மனைவியும் பாராட்டி மகிழ்விப்பது முக்கியம்.
தேவையற்ற வாக்கு வாதங்கள், விட்டுக் கொடுக்காத பிடிவாதங்கள் தேவையில்லை .அன்பான வார்த்தைகள் மட்டுமே இல்லத்தை மகிழ்ச்சியாக்கும்.
நாம் ஆசையாய் நினைத்த சில விஷயங்கள் கைகூடியிருக்காது.ஆனால் கொஞ்சமும் நினைத்து பார்த்திராத சில விஷயங்கள் நடந்திருக்கும் அவற்றைக் கொண்டாடி மகிழுங்கள்.
நம் மனதுக்கு பிடித்த பெரியவர்களின் பல வாழ்த்துக்கள்.. நெருங்கிய உறவின் காயப்படுத்திய சில சொற்கள் இரண்டையும் சமமாக ஏற்றுக் கொண்டு வாழபழகிக்கொள்ளுங்கள்.
யாரெல்லாம் உண்மையாய் நேசிக்கிறார்கள், யாரெல்லாம் பாசமாய் இருப்பது போல் நடிக்கிறார்கள் யாரெல்லாம் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுகிறார்கள்.. கண்டுகொண்டு அவர்களிடம் இடைவெளிவிட்டு பழகுங்கள்.
சில உறவுகள், சில நட்புகள் பிரிந்து போனது சில உறவுகள் மறந்து போனது அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
புதுப்புது இடங்களை பார்த்தது, அங்கு விதவிதமான உணவுகளை ருசித்தது எல்லாம் அடிக்கடி நினைத்து(அழகிய நினைவலைகளில்).மனதில். அசைபோடுங்கள்.
பணம் மட்டும் வாழ்க்கை இல்லை .
பணம், பதவி, புகழ் ,வீடு ,தோட்டம் ,நகை இன்ன பிற சுகம் ,உறவுகள் எதுவுமே நம்முடன் கடைசி வரை வரப்போவதில்லை என்பதை அறிந்து கொண்டு… இந்த நொடி மட்டுமே நிச்சயமானது என அறிந்து மன மகிழ்வுடன் வாழ முயற்சி செய்யுங்கள்.
நிம்மதியை வெளியில் தேடி பயனில்லை அது நமக்குள்ளே தான் இருக்கிறது தெளிவு பெறுங்கள்.
எல்லாவற்றையும் மன்னித்து விடவும், சிலவற்றை மறந்து விடவும் கற்றுக் கொள்ளுங்கள்.
எவ்வளவு முக்கியமான விஷயமாக இருந்தாலும் மனதிற்கு நெருக்கமாக எடுத்துச் செல்லாதீர்கள் .
சில பாரங்களை இறக்கி வைக்க ஒரு தோளும் ,சில காயங்களுக்கு மருந்தாக ஒரு அரவணைப்பும் நிச்சயம் தேவை.. அப்படி நேசம் தருபவர்களிடம் நேரத்தை செலவிடுங்கள்.
கொலுவில் கூட ஒவ்வொரு பொம்மையையும் எங்கே வைக்க வேண்டும் என்ற படிநிலை உள்ளது அதுபோல உறவுகளையும் அப்படி வைத்து விட்டால் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பே இல்லை மனதில் கொள்ளுங்கள்.
ஒருவரின் மகிழ்ச்சியிலோ, வருத்தத்திலோ அவர் கூறும் வார்த்தைகளை காது கொடுத்து கேளுங்கள் ..அது கை(த்) தீண்டாமல் அவரை கட்டி அணைப்பதற்கு நிகரானது . கருத்தில் கொள்ளுங்கள்.
மனதிற்கு பிடித்த புத்தகங்களை வாசிக்க, இயற்கையை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் யாரையும் நீங்கள் திருப்தி படுத்த தேவையில்லை
யாரும் உங்களை திருப்தி படுத்தப் போவதுமில்லை.
வாழுங்கள் உங்களுக்காக வாழுங்கள்.
எங்கே போய் விடப்போகிறது? எங்கே போய் விடப் போகிறாள்?எங்கே போய் விடப் போகிறான்?
என எதிலும் அலட்சியம் காட்டாதீர்கள் அதிகபட்ச அலட்சியம் தான் பல விஷயங்களை தொலைப்பதற்கும் காரணமாக இருக்கிறது அதனால் அலட்சியத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்.
உங்களுடன் அன்பாக அக்கறையாக பாசமாக யாரும்இருந்தால் ,அவர்களின் பொன்னான நேரத்தை உங்களுக்காக தந்தால், தரமுன் வந்தால் தயவு செய்து அவர்களை மதியுங்கள்.சக மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
மனதிற்கு பிடித்தவர்களுடன் அப்போது நேரம் ஒதுக்கி உரையாடுங்கள்
இனிய இசையைக் கேளுங்கள்.
இறைவனை மனமுருக பிரார்த்தியுங்கள் .
மணலும் செங்கல்லும் சிமெண்டும் கொண்டு கட்டிய வீடும் ,நட்டும் போல்டும் கார்களும் நிரந்தரமில்லை. அன்பே எல்லாவற்றிற்கும் அடிப்படை பற்றிக்கொள்ள படைக்கப்பட்டவை தானே விரல்கள். பற்றிக்கொள்வோம் வாழ்வின் இறுதிவரை.