No menu items!

தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் – மீண்டும் விசாரியுங்கள் – உயர் நீதிமன்றம் உத்தரவு

தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் – மீண்டும் விசாரியுங்கள் – உயர் நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு இருவரையும் சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் அடுத்த மாதம் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

என்ன வழக்கு?

தமிழ்நாட்டின் தற்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76 லட்சத்து 40 ஆயிரத்து 433 அளவுக்கு சொத்துகுவிப்பி்ல் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி மணிமேகலை மீதும் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்ற அந்த நீதிமன்றம், தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதேபோல, 2006 – 2011 திமுக ஆட்சியில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்த, தற்போதைய வருவாய் துறை அமைச்சரான சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோர் ரூ. 44 லட்சத்து 56 ஆயிரத்து 67 அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுவையும் ஏற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி

இந்த இரு அமைச்சர்களையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார். இருதரப்பிலும் வாதங்கள் முடிந்த நிலையில் வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

அதன்படி இந்த வழக்குகளில் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் இன்று (ஆகஸ்ட்.7) பிறப்பித்துள்ள உத்தரவில், பொதுவாக பெரிய மீன்கள் வலையில் சிக்குவது இல்லை என்கிற ஜேம்ஸ் ஜெப்ரி ரோச் என்கிற மேலை நாட்டு கவிஞரின் கவிதை வரியுடன் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பி்த்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இருவர் மீதான வழக்குகளையும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு மாற்றிய நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேல் விசாரணை நடத்தி, வழக்கை முடித்து வைத்து தாக்கல் செய்த அறிக்கையை கூடுதல் இறுதி அறிக்கையாக கருதி, இந்த வழக்குகளை மீண்டும் மறுவிசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த இரு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்ய ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதால் இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவி்க்கக்கோரி இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களையும தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இந்த வழக்கின் விசாரணைக்காக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வரும் செப்.9 அன்றும், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரும் செப்.11 அன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ள நீதிபதி, இந்த இரு வழக்குகளையும் தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்தி முடிக்க வேண்டும். வழக்குக்காக ஆஜராகும் இரு அமைச்சர்களுக்கும் உத்தரவாதத்துடன் கூடிய அல்லது உத்தரவாதம் அல்லாத ஜாமீன் வழங்க வேண்டும். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தெரிவி்த்துள்ள கருத்துக்களை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளத் தேவையில்லை, என அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...