நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நேற்று நடந்துள்ளது. இந்த ஷூட்டில் சில ஆயுதங்களை ரஜினிகாந்த் வைத்துள்ளதைப் போல் படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் முதல் ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அங்கு பிரம்மாண்டமான செட்டை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ஐஸ்வர்யா ராய், சிவ்ராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படம் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க நெல்சனுக்கு ரஜினிகாந்த் முழு சுதந்திரம் கொடுத்துள்ளாராம்.
கருப்பு வெள்ளையில் நடிக்கும் மோகன்லால்
மலையாள சினிமாவின் சக்சஸ் கூட்டணிகளில் ஒன்றாக மோகன்லால் – பிரியதர்ஷன் ஜோடி இருக்கிறது. பிரியதர்ஷனில் இயக்கத்தில் மோகன்லால் நடித்து இதுவரை 29 படங்கள் வெளிவந்துள்ளன. இதைத்தொடர்ந்து 30-வதாக ‘ஓளவும் தீரவும்’ என்ற படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது.
மதுவின் நடிப்பில் 1970-ல் ஏற்கெனவே வெளியான ‘ஓளமும் தீரவும்’ படத்தின் மறு ஆக்கம்தான் இந்த படம். நெட்பிளிக்ஸில் ஒளிபரப்புவதற்காக 50 நிமிடங்கள் கொண்ட குறும்படமாக இதை எடுக்கிறார்கள். இப்படத்தை கலர் படமாக எடுக்காமல் கறுப்பு வெள்ளை படமாக எடுத்து வருகிறார் பிரியதர்ஷன். இப்படத்தில் மோகன்லாலின் ஜோடியாக துர்கா கிருஷ்ணா நடிக்கிறார்.
ஜெயபிரகாஷ் நாராயணாக நடிக்கும் அனுபம் கெர்
இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் 1975-ல் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியை அடிப்படையாகக் கொண்டு இந்தியில் ஒரு படம் தயாராகி வருகிறது. ‘எமர்ஜென்சி’ என்ற பெயரில் தயாராகும் இப்படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா ரனவத் நடிப்பது ஏற்கெனவே எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இப்படத்தைப் பற்றி இபோது மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் எமர்ஜென்சியை எதிர்த்து போராட்டம் நடத்திய முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜெய்பிரகாஷ் நாராயண் வேடத்தில் அனுபம் கெர் நடிக்கிறார். இப்படத்தின் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தைவிட ஜெயப்பிரகாஷ் நாராயண் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் அனுபம் கெர்.