No menu items!

இபிஎஸ் பற்றி பேசினால் ரூ.1.10 கோடி; இபிஎஸ் பேசாமல் இருக்க ரூ. 1 கோடி!

இபிஎஸ் பற்றி பேசினால் ரூ.1.10 கோடி; இபிஎஸ் பேசாமல் இருக்க ரூ. 1 கோடி!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என தனபாலுக்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பழனிசாமிக்கு ரூ.1.10 கோடியை மானநஷ்ட ஈடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, திமுக கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள் நோக்கதுடன் பேசி வரும் எடப்பாடி பழனிசாமி ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என ஆர்.எஸ். பாரதி தொடர்ந்துள்ள வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது.

நீலகிரி,நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரரான தனபால், கோடநாடு சம்பவத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். விபத்தில் இறந்த கனகராஜ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும் ரூ.1.10 கோடியை மானநஷ்ட ஈடாக வழங்கக் கோரியும் தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “அதிமுக பொதுச் செயலாளராகவும் எதிர்கட்சித் தலைவராகவும் பதவி வகித்து வரும் தனது நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலின்பேரில் தனபால் தனக்கு எதிராக பொய்யான, அவதூறான கருத்துகளை தெரிவித்து வருகிறார்,” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியங்களை பதிவு செய்த வழக்கறிஞர் ஆணையர் எஸ். கார்த்திகை பாலன் அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன், முன்பு இன்று (நவ.7) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மனுதாரரான எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசிய தனபால் ரூ.1.10 கோடியை மான நஷ்டஈடாக பழனிசாமிக்கு வழங்க உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவத்தில் அவரை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என தனபாலுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய இன்னொரு வழக்கிலும் இன்று விசாரணைக்கு வந்தது.

திமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், சமீபத்திய போதைப் பொருள் பறிமுதல், கைது தொடர்பாக திமுகவை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். மேலும் இது தொடர்பான விமர்சனங்களையும் திமுகவை தொடர்பு படுத்தி எடப்பாடி பழனிசாமி சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு திமுக கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள் நோக்கதுடன் பேசி வரும் எடப்பாடி பழனிசாமி ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக-வை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வழக்கறிஞர் மனுராஜ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் விஜயநாரயாணன் ஆகியோர் ஆஜராகி வாதம் வைத்தனர். இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...