No menu items!

மாநிலங்கள் அரிசிக்கு மத்தியில் பிச்சை எடுத்தன: ஜெ. ஜெயரஞ்சன் பேச்சு – 2

மாநிலங்கள் அரிசிக்கு மத்தியில் பிச்சை எடுத்தன: ஜெ. ஜெயரஞ்சன் பேச்சு – 2

தூத்துக்குடியில் நடைபெற்ற 4-வது புத்தகத் திருவிழா மற்றும் 2-வது நெய்தல் கலை விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், பொருளியல் அறிஞரும் தமிழ்நாடு அரசின் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு துணைத் தலைவருமான ஜெ. ஜெயரஞ்சன் பேசியது இது.

முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

“பசியும் பட்டினியும் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் அவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தது என்று இன்றைய தலைமுறையிடம் சொன்னால் நம்பமாட்டார்கள். ஏனெனில், அதனை அவர்கள் பார்த்ததில்லை; அனுபவித்ததில்லை. ஆனால், முந்தைய தலைமுறைக்கு தெரியும். இரண்டு தலைமுறைகளுக்கு இடையே இந்த சமூக மாற்றம் எப்படி நிகழ்ந்தது?

அதைப் பார்ப்போம்…

1967 சட்டப்பேரவை தேர்தலின் போது உணவு என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எனவே அண்ணா, “ரூபாய்க்கு 3 படி அரிசி போடுவோம்” என அறிவித்தார்.

புதுமைப்பித்தன் போல், விந்தன் போல், தி. ஜானகிராமன் போல் பசியைப் பற்றி ராஜாஜியும் கதை எழுதியுள்ளார். ஆனால், ஆட்சியதிகாரம் அவர் கைக்குக்கு வந்தபோது இந்த யோசனை அவருக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் அண்ணா அறிவித்துவிட்டாலும் அப்போது அதை செயல்படுத்த முடியவில்லை. அதன்பின்னர் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தபின்னர் இதை செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க தொடங்குகிறார். கருணாநிதியும் அக்கால பட்டினி பற்றி ‘குப்பைத் தொட்டி’ என்ற கதையை எழுதியுள்ளார்.

கலைஞர் ஆட்சியில் 1972இல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடங்கப்படுகிறது. அதன்பின்னர் எல்லாருக்கும் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை கலைஞர் தொடங்கியதற்கு பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. ஏற்கெனவே பசுமைப் புரட்சியின் ஒரு பகுதியாக ‘இந்திய உணவுக் கழகம்’ தொடங்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் போல் இந்தியா முழுவதும் தீவிர சாகுபடி பகுதிகளில் விளையும் நெல்லையும் கோதுமையையும் அவர்கள் வாங்கினார்கள். எனவே, மாநிலங்கள் தங்கள் தேவைக்கான நெல், கோதுமையை வாங்க டில்லிக்கு காவடி தூக்க வேண்டிய நிலைதான் இருந்தது. எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது கூட மதிய உணவுத் திட்டத்துக்கு அரிசி கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் என்று அவர் உண்ணாவிரதம் இருந்து, பின்னர் இந்திரா காந்தி வந்து சமாதானம் செய்தார்.

இந்நிலையை மாற்றுவதற்குதான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கினார் கலைஞர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்த நெல்லை அரசியாக மாற்றி விநியோகம் செய்ய ரேசன் கடைகள் உருவாக்கப்பட்டன. கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் அதன்பின்னர் வந்த எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இதனை தொடர்ந்தார்கள். இதன் விளைவாக இன்று தமிழ்நாடு முழுவதும் 33 ஆயிரம் ரேசன் கடைகள் உள்ளன. இந்த 33,000 கடைகள் மூலமாக இன்று உணவுப் பொருள் மக்களுக்கு இலவசமாகவே சென்று சேர்கிறது. இதனால் பசியும் பட்டினியும் தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டுள்ளது.

மக்கள் எல்லோருக்கும் உணவை கொண்டு சேர்த்து பட்டினியை ஒழித்தது போலவே, படி படி என்று நூறாண்டுகளாக சொல்லி சொல்லி, இன்று கல்வியும் பெரும்பான்மை மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உயர் கல்வி படிப்பவர்கள் 24 சதவிகிதம் என்னும் நிலையில் இருக்கும்போது தமிழ்நாட்டில் உயர் கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 58 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனைக்கு காரணம், பட்டினி என்ற தடையை அகற்றியதுதான்.

சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தால் எப்படி படிப்பார்கள்? நுறாண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சியில் பள்ளிகளை திறந்து படிக்க வாருங்கள் என்று கூப்பிட்டபோது, சோற்றுக்கே வழியில்லை நாங்கள் எப்படி படிக்க வருவது என்றுதான் பிள்ளைகள் கேட்டார்கள். அதன்விளைவாகத்தான் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை உணவு கொடுக்க தொடங்கிவிட்டோம்.

பட்டினி போல் கல்வி பெற தடையாக ஒவ்வொன்றும் அடையாளம் காணப்பட்டு சரி செய்யப்பட்டது. அப்படித்தான் மேல் சாதி – கீழ் சாதி என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் கல்வியை பரவலாக்க இட ஒதுக்கீடு வந்தது. கல்வி எல்லோருக்கும் போய் சேர்ந்ததால் அதன் தொடர்ச்சியாக தொழில் வளர்ந்தது. அதைப் பார்த்துதான் வட இந்திய மாநிலங்களில் வேலை தேடி இங்கே வருகிறார்கள். குறைவான கூலியாக இருந்தாலும் செய்கிறோம் என்று இவ்வளவு தூரம் ஏன் அவர்கள் வருகிறார்கள்? உணவுதான். தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முன்பு இந்த நிலையில்தான் இன்றும் பல வடமாநிலங்கள் உள்ளன.

இன்று இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்த வளர்ச்சிக்கு காரணம் பட்டினை ஒழித்து, கல்வியை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்த்ததுதான். இனிமேல் யாரும் இந்த வளர்ச்சியை தடுத்து நிறுத்திவிட முடியாது. நிறுத்த முயற்சித்தால் அவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...