சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் இமான் கிளப்பிய சர்ச்சைக்குப் பிறகு தனது சினிமா பயணத்தை இன்னும் உறுதியானதாக மாற்றும் வேலைகளில்தான் மும்முரம் காட்டி வருகிறார்.
பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியிட்ட ‘அயலான்’ படம் நினைத்த அளவிற்கு சரியாக போகாததால், சிவகார்த்திகேயனுக்கு பெரும் ஏமாற்றமாம். இதனால் அடுத்தடுத்த படங்களில் ஒப்புக்கொள்ள ரொம்பவே தயக்கம் காட்டிவருகிறாராம்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் படம் முடிவடைந்துவிட்டது. இதில் சிவகார்த்திகேயன் நடிக்க காரணம், ராஜ்குமார் பெரியசாமி, விஜய் டிவியில் ஷோ டைரக்டராக பணியாற்றியவர். அப்போது சிவகார்த்திகேயன் அங்கே நிகழ்ச்சி வர்ணனையாளராக இருந்தார். இந்த நட்பின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் இணைந்தார்கள்.
இதற்கு அடுத்து இப்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படம் அப்படியே இருக்கிறதாம். இதற்கிடையில் ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட் பக்கம் படம் இயக்க சென்றிருக்கிறார்.
இதனால் சிவகார்த்திகேயன் தனது அடுத்தப்படம் குறித்த குழப்பத்தில் இருக்கிறாராம்.
இந்த சமயத்தில்தான் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க ’டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி ஒரு கதை சொல்லியிருக்கிறார். ‘டான்’ படம் வெற்றிக்குப் பிறகு சிபி சக்ரவர்த்தி, ரஜினிக்கு ஒரு கதை சொன்னாராம். அந்த கதை ரஜினிக்குப் பிடித்து போகவே, திரைக்கதை அமைக்கும் வேலைகளை தொடங்க சொன்னாராம்.
ஆனால் அந்த கதையை திரைக்கதையாக்கிய விதம் ரஜினிக்கு செட்டாகாமல் போய்விட்டதாம். இதனால் இதே கதையை தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவிக்கு சொன்னாராம் சிபி சக்ரவர்த்தி. அவருக்கும் கதை பிடித்து போக, அங்கே சிபிக்கு தனி அலுவலகம் எல்லாம் போட்டு கொடுத்துவிட்டார்கள். மூன்று மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து திரைக்கதை வேலைகளைப் பார்த்தார் சிபி. ஆனால் அங்கேயும் சரிப்பட்டு வரவில்லை.
இப்போது அதே கதையைதான் சிவகார்த்திகேயனுக்கு சொல்லியிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கின்றன. ரஜினி, சிரஞ்சீவி என சீனியர் ஹீரோக்களுக்கு சொன்ன கதையை சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற மாதிரி திரைக்கதை அமைத்திருக்கலாம் என்றுக் கூறுகிறார்கள்.
ஆக ரஜினிக்கு சொன்ன கதையில் சிவகார்திகேயன் நடிக்க இருக்கிறார். மேலும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிக மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
யார் இந்த அதிதி பொஹங்கர்?
சமீபத்தில் வெளியான ’ஸ்டார்’ படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருக்கும் அதிதி பொஹங்கர் இப்போது அதிகம் பேசப்படும் நட்சத்திரமாகி இருக்கிறார்.
சமூக ஊடகத்தில் தனது கணக்கில் ரீல்களை அடிக்கடி ஏற்றும் அதிதி, ஸ்டைலாகவும், இன்றைக்குள்ள பாணியிலும் தூள் கிளப்பிவருகிறார். இவர் பாலிவுட், தமிழ், மராத்தி சினிமாக்களில் நடித்துவருகிறார். இவர் மேடை நாடகங்களிலும் நடிப்பதில் கில்லாடி நடிகை. நடிப்புக்குப் பெயர் பெற்ற மாக்ராந்த் தேஷ்பாண்டே மற்றும் சத்யதேவ் துபே ஆகியோரிடம் நடிப்பு பயிற்சி பெற்றவர் அதிதி பொஹங்கர்.
2010-ல் பாலிவுட்டில் நடிகையாக களமிறங்கினார் அதிதி. எல்.எஸ்.டி : லவ், செக்ஸ் அவுர் தோக்கா’ என்ற அவரது முதல் படமே தடாலடி படம்தான். அதுமுதல் தனது வித்தியாசமான கதாபாத்திரங்களில் நுணுக்கமான முக பாவனைகளுடன் ரசிகர்களைக் கவர்ந்தவர் அதிதி. 2014- லய் பாரி என்ற மராத்தி படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களின் கைத்தட்டல்களைப் பெற்றார். மேலும் புதிய அறிமுக நடிகைக்கான ஐ.எம்.எஃப்.ஏ.ஏ- விருதையும் வென்றார்.
இதற்குப் பிறகுதான் 2017-ல் ‘ஜெமினி கணேசனும், சுருளி ராஜனும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நான்கைந்து கதாநாயகிகளில் ஒருவராக தமிழில் அறிமுகமான அதிதிக்கு அதற்குப் பிறகு ஒரு துக்கடா கதாபாத்திரத்தில் நடித்தார். இதனால் அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமலே போனது.
2020-ல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘ஷி’ வெப் சிரீஸில் நடித்தார். இதில் கொஞ்சம் ஓபனாக நடித்தார். இவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்தியா முழுவதும் தெரிந்த நடிகைகளில் ஒருவரானார் அதிதி.
அடுத்து 2020-ல் வெளியான ‘ஆஷ்ரம்’ வெப் சிரீஸ் இவருக்கு மேலும் ஒரு விருதைப் பெற்று தந்தது.