ஒரு நடிகர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஒரு கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டால், அந்த கதாபாத்திரத்தை மெருகூட்ட என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடுவார் சிவாஜி கணேசன் அதற்காக கடுமையாக உழைப்பார். நடிப்பு மட்டுமின்றி தனது கதாபாத்திரத்துக்கான மேக்கப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அதற்காக சில அசவுகரியங்களை ஏற்றுக்கொள்ளவும் தயங்க மாட்டார்.
அவரைப் பற்றி இயக்குநர் பீம்சிங் ஒரு பேட்டியின்போது சொன்ன விஷயங்கள்…
‘ பாவமன்னிப்பு’ படத்தில் முஸ்லிம் இளைஞர் வேடத்தில் நடிக்கும் முன்பு, அவர் முஸ்லிம்களின் நடை உடை பாவனைகளைப் பற்றி சில முஸ்லிம் அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார்.. முஸ்லிம்கள் தொழுகை செய்யும் போது தரையில் நெற்றி அழுத்துவதால் அந்த இடம் கருப்பாகிவிடும். அதற்காக அங்கே கருப்பாக மேக்கப் செய்து கொண்டார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்துக்காகவும் மேக்கப்பில் சில நுணுக்கங்களை கையாண்டார்.
சிவாஜியின் உடல் பருமனைப் பற்றி நான் விமர்சனம் செய்வது உண்டு. அதற்கு சிவாஜி, ‘பீம் பாய் நான் என்ன செய்வது? சாப்பாட்டை கூட குறைக்கிறேன். ஆனால் உடல் குறையவில்லை’ என்பார்.
அவரிடம் கதை சொல்வது ஒரு இனிய அனுபவமாக இருக்கும். கதையை சொல்லிக்கொண்டு இருக்கும்போதே உணர்ச்சிவசப்படுவார். உணர்ச்சிமிக்க கட்டங்கள் அதில் வரும்போது, அதை பட்த்தில் எப்படி செய்வது என்று ஆலோசனை தருவார்.
‘பாவ மன்னிப்பு’ படத்தில் அவரது பாத்திரத்தின் தன்மையை மட்டும் 40 பக்கங்களுக்கு எழுதிக் கொடுத்தேன். இதேபோலத்தான் என் படங்கள் அனைத்திற்கும் அவருக்கு எழுதிக் கொடுத்து விடுவேன். இதை அவர் மிகவும் விரும்புவார். இதன்மூலம் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய முடிவதாக கூறுவார்.
சிவாஜி அடிக்கடி வேட்டையாடப் போவார். அது ஆபத்தான விளையாட்டு என்பதால் எனக்கு பிடிக்காது. அதுபற்றி பலமுறை அட்வைஸ் செய்தும் அவர் கேட்கவில்லை.
இப்படி சிவாஜியைப் பற்றி தன் மனதில் பட்ட விஷயங்களை சொல்லி இருக்கிறார் இயக்குநர் பீம்சிங்.
மற்றொரு இயக்குநரான எல்.வி.பிரசாத். “சிவாஜி கணேசனின் ஞாபகசக்தி அபாரமானது. மனோகராவில் பக்கம் பக்கமாக வசனங்களை கொடுப்போம். அவற்றை நொடியில் மனப்பாடம் செய்துவிட்டு உணர்ச்சிப்பிரவாகமாக பொழிந்து தள்ளுவார்.
இந்தப்படம் தெலுங்கிலும் இந்தியிலும் தயாரானபோது அவரது வசனங்களை படப்பிடிப்பின் போது அடிக்கடி மாற்றி தந்து கொண்டிருந்தோம். அவர் தெலுங்கு வசனத்தை தெலுங்கர் பேசுவது போல பேசினார். ஹிந்தியிலும் அப்படியே மனப்பாடம் செய்தார். ஜெர்மனியில் வசனம் எழுதிக் கொடுத்தாலும் அடுத்த நிமிஷங்களிலேயே மனப்பாடம் செய்து அதை ஒப்புவிக்காமல், ஜெர்மனியன் ஒருவன் பேசுவதைப் போல பேசும் ஆற்றல் சிவாஜி கணேசனிடம் இருக்கிறது .
சிவாஜியின் முகம் ‘மொபைல் பேஸ்’ என்று சொல்லக்கூடியது. சோகத்திலிருந்து மகிழ்ச்சிக்கோ, மகிழ்ச்சியிலிருந்து வெறுப்புக்கோ, வெறுப்பில் இருந்து கோபத்திற்கோ, கோபத்திலிருந்து சாந்தத்திற்கோ நொடிப்பொழுதில் மாற்றிவிடுவார்.
ஒன்றுக்கொன்று மாறுவது மட்டுமின்றி, எந்த உணர்ச்சியிலிருந்தது எந்த உணர்ச்சிக்கு வேண்டுமானாலும் தாவக்கூடிய முகமும் அவருடையது. சுபாவமாகவே அவருடைய அங்கங்களும் இவற்றுடன் நடிக்க ஆரம்பித்து விடுகின்றன” என்கிறார்.
இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு சொல்லும்போது, “பராசக்தி படத்தில் தெருவீதியில் குழாயடி அங்கே சிகரெட் பிடித்துக் கொண்டு போகிறான் ஒருவன். குணசேகரன் வருகிறான் கலைந்த தலை கசங்கிய ஆடை. சிகரெட் பிடிப்பவனின் முதுகில் ஓங்கி அறைகிறான்.