பாலிவுட்டில் நடிகைகளின் சம்பளம் சில நேரங்களில் ஹீரோக்களுக்கு இணையாக இருக்கிறது. இந்த சம்பளப் போட்டியை சமாளிக்க முடியாமல் தயாரிப்பாளர்கள் தர்மசங்கடத்தில் தவிப்பதாக மும்பை சினிமா ஊடகங்கள் எழுதியிருக்கின்றன.
இந்த சம்பளப் பிரச்சனை பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. கான் நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவது பார்த்து நடிகைகளும் தங்கள் சம்பளத்தை அதிகப்படுத்தி கேட்கிறார்கள். இந்த விஷயத்தில் தீபிகா படுகோனே, வித்யாபாலன், பிரியங்கா சோப்ரா, சன்னி லியோன், கங்கனா ரணாவத் உட்பட இன்னும் சில நடிகைகள் வெளிப்படையாக தங்கள் சம்பளம் குறித்து பேசி வருகிறார்கள்.
ஹீரோக்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஏற்றி கேட்கிறார்கள். அவர்களுக்கு இணையாக நாங்களும் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஒரு திரைப்படத்தில் ஹீரோ வரும் காட்சிகளுக்கு சரி சமமாக நாங்களும் வருகிறோம் ஆனால் நடிகைகள் கேட்கும் சம்பளத்தை மட்டும் தயாரிப்பாளர்கள் கொடுக்க தயங்குகிறார்கள் என்று தீபிகா பேசியிருந்தார். இவருடைய இந்த கருத்துக்கு கங்கனா ரணாவத் ஆதரவு தெரிவித்திருந்தார்.
சம்பளம் போதாது என்று நான் நடிக்க மறுத்த ஒரு படத்தின் இயக்குனரை சந்தித்து சில நடிகைகள் நாங்கள் நடிக்கிறோம், அந்த சம்பளமே போதும் என்று பேசி நடித்திருக்கிறார்கள். இப்படி இருந்தால் நடிகைகளுக்கு தனி மரியாதையும் சம்பளம் உயர்வும் எப்படி கிடைக்கும் என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் சமீபகாலமாக முன்னணி கதாநாயகிகள் ஒரு பாடலுக்கு ஆட ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் வாங்கும் சம்பளம் பல கோடிகள் என்று மும்பை சினிமாவில் இருக்கும் தயாரிப்பாளர் ஒருவர் புலம்பியிருக்கிறார்.
புஷ்பா 2ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் வரும் ஐட்டம் பாடலுக்கு ஆட பல நடிகைகளிடம் போட்டி நிலவுகிறது. முதல் பாகத்தில் சம்ந்தா ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்காக அவருக்கு 3 கோடிக்கும் மேல் கொடுக்கப்பட்டது. 2ம் பாகத்தில் அழைத்தபோது அதை மறுத்து விட்டார். இந்த இடத்தில் நோரா பதேஹி, திஷா பதானி ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அவர்கள் கேட்கும் சம்பளமும் அதிகமாக இருக்கிறதா, இதனால் இந்த பாடல் காட்சியை மட்டும் எடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறாகள். ஜெய்லர் படத்தில் தமன்னா ஆடிய பாடல் பெரிய ஹிட் ஆனது. இதற்காக அவருக்கு 3 கோடி கொடுக்கப்பட்டது. இது நடிகைகள் பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே ஒரு பாடலுக்கு நடனம் ஆட தீபிகா படுகோனே 2 கோடி வாங்கி வருகிறார். கத்ரீனா கைப் 3 கோடியும் வாங்கியிருக்கிறார். ஜாக்குலின் 2 கோடி. இவர்களெல்லாம் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் வாங்கும் சம்பளம் இது. மலைக்கா அரோரா வெறும் ஆல்பம் தனியார் நிகழ்ச்சி என்று இருந்தபோதும் ஒரு பாடலுக்கு 1 கோடி ரூபாய் வாங்குகிறார். சன்னி லியோன் 1.5 கோடியும், நோரா பதேஹி 1.3 கோடியும் வாங்கியிருக்கிறார்கள்.
இதனால் நாயகியாக படம் முழுவதும் வந்து நடிப்பதற்கு பதில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட நடிகைகளுக்குள் ரேஸ் நடக்கிறது. இதே கலச்சாரம் தமிழ் சினிமாவில் வந்து விட்டது. அடுத்தடுத்து தயாராகும் முன்னணி நடிகர்கள் படங்களில் சிங்கிள் பாடல் வைக்க இயக்குனர்கள் யோசித்து வருகிறார்கள்.