No menu items!

கொரோனாவில் இறந்த பாடகர்: 3.5 கோடி ரூபாய் பில் போட்ட ஹாஸ்பிடல்!

கொரோனாவில் இறந்த பாடகர்: 3.5 கோடி ரூபாய் பில் போட்ட ஹாஸ்பிடல்!

அரசு மருத்துவமனை என்றாலே எதுவும் சரியாக இருக்காது, அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் அலட்சியமாக நடந்துகொள்வார்கள்; சரியான சிகிச்சை கிடைக்காது என்ற பிம்பம் பொதுவாக இருக்கிறது. ஏன் இந்த நிலை? இது சரியானதுதானா? சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவரும் சிறுநீரக அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவருமான ஜெய்சன் பிலிஃப்ஸ் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இதற்கு பதில் சொல்கிறார்.

அரசு மருத்துவமனைகள் தொடர்பாக பொதுமக்களிடையே நிலவும் அபிப்ராயங்கள் குறித்து நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த பிம்பம் குறித்து உங்கள் பார்வை என்ன?

நான் பணிபுரிகிற சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். 3600 உள் நோயாளிகள் படுக்கை உள்ளது. அதில் 3000 படுக்கைகளில் இன்று நோயாளிகள் இருக்கிறார்கள். தினமும் 15 ஆயிரத்துக்கே மேல் வெளிநோயாளிகள் வந்து செல்கிறார்கள். இதனடிப்படையில் பார்த்தால் ஒரு நாள் கிட்டதட்ட 20 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ஒரு சிலருக்கு குறை இருக்கலாம். ஊடகங்களும் மற்றும் சிலரும் அந்த ஒன்றிரண்டு குறைகளை மட்டும் பெரிதுபடுத்துவதால், அரசு மருத்துவமனை என்றாலே இப்படித்தான் என்று மக்கள் மத்தியில் எண்ணம் உருவாகியுள்ளது.

ஒரு தனியார் மருத்துவமனையில், காப்பாற்ற முடியாது என கைவிடப்பட்ட புற்று நோயாளியை நாங்கள் குணப்படுத்தி இருக்கிறோம். இது போல் எத்தனையோ உதாரணங்கள் சொல்ல முடியும். ஆனால், இதை ஊடகங்கள் சொல்வதில்லை. தனியார் மருத்துவமனைகளில் பல லட்சங்கள் செலவாகும் உயர்தரமான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே வழங்கப்படுகிறது. இது பற்றி ஊடகங்கள் பேசுகிறதா?

அரசு மருத்துவமனைகள் பற்றி மக்களிடையே தவறான எண்ணம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இதற்கு பின்னால் ஒரு சதி இருக்கிறது.

யார் அதை செய்கிறார்கள்? ஏன் செய்கிறார்கள்?

நேர்மறையான செய்திகளைவிட எதிர்மறையான செய்திகளுக்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது. மனிதர்களின் எச்சரிக்கை உணர்வு காரணமாக இது நடக்கிறது. எனவே, எதிர்மறையான செய்திகள் வெளியிட்டால் பத்திரிகைகள் அதிகம் விற்கும்; யூ டியூப் சேனல்களுக்கு அதிக பார்வைகள் கிடைக்கும். இதனால் அவர்களுக்கு பொருளாதார பலன் உள்ளது. இதுதான் காரணம். ஆனால், எதிர்மறையான செய்திகளே வெளியிடக்கூடாது என்று நான் சொல்லவில்லை. அதை வெளியிடுவதுபோல் எவ்வளவு நல்லது அரசு மருத்துவமனைகளில் இருக்கிறது என்றும் சொல்லுங்கள் என்றுதான் கேட்கிறேன்.

அரசு மருத்துவமனைகள் சுத்தமாக இல்லை என்பது பொதுவான குற்றச்சாட்டாக இருக்கிறது. அரசு மருத்துவமனை சுவர் ஓரங்களில் வெற்றிலை அல்லது பான்பராக் துப்பப்பட்டு அசுத்தமாக இருப்பது, குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பது அனைவரும் பார்க்கக் கூடியதாகத்தானே இருக்கிறது? ஏன் அரசு மருத்துவமனைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியவில்லை?

அதையெல்லாம் செய்வது யார்? அரசு மருத்துவர்களோ அல்லது செவிலியர்களோ பான்பராக் போட்டு துப்புகிறார்கள் அல்லது பிஸ்கட் கவரை ஆங்காங்கே போட்டு செல்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 20 ஆயிரம் பேர் வந்து செல்லும் இடத்தில் பொது மக்களில் யாரோ சிலர்தான் அதை செய்கிறார்கள். பொது இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்; அசுத்தம் செய்யக்கூடாது என்ற விழிப்புணர்வு மக்களிடையே இல்லை; அவர்களும் வேண்டுமென்றே இல்லை, அறியாமையால்தான் செய்கிறார்கள். ஆனாலும், உடனுடனே அவற்றையெல்லாம் சுத்தம் செய்யும்படி அறிவுறுத்தி இருக்கிறோம். இப்போது தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளும் சுத்தமாக உள்ளது. நீங்களோ பொதுமக்களோ எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து பார்க்கலாம்.

அரசு மருத்துவமனைகள் இப்போது எந்தளவு நவீனமாகி இருக்கிறது. சென்னையில் இருக்கும் அதி நவீன தனியார் மருத்துவமனைகளுடன் அரசு மருத்துவமனைகளை ஒப்பிட முடியுமா? அதே கருவிகள், அதே சிகிச்சை பெரிய அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்படுகிறதா?

சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளுடன் மட்டுமல்ல அமெரிக்காவில் உள்ள நவீன மருத்துவமனைகளுடனேயே நம் அரசு மருத்துவமனைகளை ஒப்பிடலாம். அந்தளவு எல்லா துறைகளிலும் நவீன கருவிகளை பயன்படுத்துகிறோம். அமெரிக்கா மற்றும் ஜெர்மன், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் உள்ள உச்சகட்ட நவீன சிகிச்சை என்பது ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சை தான். இது சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவனையில் உள்ளது. விரைவில் எல்லா மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் இது வரவுள்ளது.

ஒரு சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் எடுத்துக் கொள்வதற்கும் அரசு மருத்துவமனைகளில் எடுத்துக் கொள்வதற்கும் செலவில் என்ன வித்தியாசம் வரும்?  குறிப்பிட்டு சொல்ல முடியுமா?

தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் (TNMSC) நிர்ணயிக்கிற பரிசோதனைகள் தவிர மற்ற அனைத்தும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே வழங்கப்படுகிறது. பரிசோதனை, சிகிச்சை, மருந்து எல்லாமே இலவசம். எனது உறவினர் ஒருவருக்கு சிறுநீரக கல்லை நீக்குவதற்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் 15 லட்சம் வசூலித்திருக்கிறார்கள். அவர் எங்களிடம் வந்திருந்தால் ஒரு பைசா செலவில்லாமல் இலவசமாகவே அதை செய்திருப்போம். அதே சிகிச்சை, அதே நவீன கருவிகள்தான். இன்னொரு உதாரணம் சொல்கிறேன்… கொரோனாவில் காலமான பிரபல பாடகருக்கு ஒரு தனியார் மருத்துவமனையில் மூன்றரை கோடி பில் போட்டிருக்கிறார்கள். அவர் அரசு மருத்துவமனை வந்திருந்தால், அந்த தனியார் மருத்துவமனை வழங்கியதைவிட சிறந்த சிகிச்சையை இலவசமாகவே நாங்கள் வழங்கியிருப்போம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...