எந்த வம்பு தும்பிலும் சிக்கிக்கொள்ளாமல் தான் உண்டு தன் பரதக் கலையுண்டு அன்று அமைதியாக சென்றுகொண்டிருந்த காலஷேத்ரா வளாகத்திற்குள் அண்மைக் காலமாக புயல். இது சாதா புயல் அல்ல. பாலியல் புயல்! பிரச்சினை சமூக வளைதலங்களில் அரசல் புரசலாக வெளிவந்து இப்போது டி.ஜி.பி. அலுவலகத்திற்குள் நுழைந்துவிட்ட பின்பும், சம்பந்தப்பட்ட யாரும் வாய் திறக்கத் தயாராக இல்லை! புகை மட்டும் அடங்கவில்லை.
சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான கலாஷேத்ராவில் உண்மையில் என்னதான் நடக்கிறது? வேண்டாதவர்கள் வெறுப்பில் கிளப்பி விட்டதுதான் பூதாகாரமாகி விட்டதா? அல்லது பல நாள் புழுக்கம் இப்போது வெளியே வந்து விட்டதா.. இதுபோன்ற கேள்விகளுடன் ஆராயக் கிளம்பியபோது நமக்கு பல திடுக் தகவல்கள் கிடைத்தன.
1936-ம் ஆண்டு திருமதி ருக்குமணி தேவி அருண்டேலினால் ஆரம்பிக்கப்பட்ட இது ஒரு கவின் கல்லூரியாகும். ஒரே ஒரு மாணவியுடன் துவங்கப்பட்டு இன்று இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இங்கு தங்கி வெவ்வேறு கலைகளை பயில்கின்றனர். இதில் பலர் வெளி நாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை பெசண்ட் நகரிலுள்ள கலாஷேத்ரா இப்போது ஃப்வுண்டேஷனாகி அதன் தலைவராக எஸ்.ராமதுரையும் இயக்குனராக ரேவதி ராமசந்திரனும் உள்ளனர். நாடு போற்றும் பல தலைசிறந்த பரத கலைஞர்களை உருவாக்கியுள்ள இந்த ஃப்வுண்டேஷனில் மைசூர் வாசுதேவாச்சாரியார், காரைக்குடி சாம்பசிவ ஐயர் போன்ற மகா மேதைகள் பணியாற்றியுள்ளனர். சொல்லப்போனால் பரத நாட்டிய உலகில் ‘கலாஷேத்ரா மாணவி’ என்றாலே அவருக்கு ஒரு தனி மவுசு இன்றைக்கும் உண்டு. மத்திய அரசு பெரிய அளவில் இதற்கு தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகிறது. மாநில அரசும் பல்வேறு விதங்களில் உதவுகிறது.
கடந்த சில வருடங்களாகவே இதன் நிர்வாகம் உள்பட பல்வேறு விஷயங்களில் கடுமையான விமர்சனங்கள் பொது வெளிக்கு வந்த நிலையில், முன்னாள் இயக்குனர் லீலா சாம்ஸன் கொஞ்ச காலம் முன்பு பதவியிலிருந்து வெளியேறினார். ‘உட்பூசல் காரணமாக வெளியேற்றப்பட்டார்’ என்றும் அப்போது செய்திகள் வந்தன.
அடுத்து இப்போது விஸ்ரூபமெடுத்துள்ளது பாலியல் விவகாரம்! கலாஷேத்ராவிலுள்ள ஓர் ஆசிரியர் கொஞ்சகாலமாகவே அங்குள்ள சில மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பதே குற்றசாட்டு!. பலாத்காரம் நடந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மிகுந்த கண்டிப்பான ஒரு நிர்வாகம் என்பதால் சம்பந்தப்பட்ட மாணவிகள் வெளியே சொல்லவே அஞ்சியுள்ளனர். மெதுவாக இந்த விவகாரம் ‘அலுமினி’ மாணவிகள் எனப்படும் பழைய மாணவிகள் மூலம் முதலில் வெளியே கசிய ஆரம்பித்து, இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒரு கட்டத்தில் நிர்வாகத்தால் கடுமையாக மிரட்டப்பட்டதாகவும் செய்திகள்.
“இந்த ஒட்டுமொத்த விவகாரத்தை முதலில் வெளியே கொண்டு வந்தது, மலேசிய தமிழரான சங்கீதா நமச்சிவாயம் மற்றும் லீலா சாம்ஸன். தொடர்ந்து ‘அலுமினி’ மாணவிகள் பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு நீதி கேட்கின்றார்” என்றார் பிரபல நடன மங்கை.
லீலா சாம்ஸனை தொடர்பு கொண்டு பேசியபோது, “இப்போது பேசுவதற்கு இல்லை. நேரம் வரும் போது பேசலாம்.. “ என்று முடித்துக்கொண்டார். தற்போது பெங்களூர் வந்துள்ள டான்ஸர் சங்கீதா நமச்சிவாயம், “நிறைய நடந்துள்ளது. நீங்கள் கேட்ட சம்பவங்கள் உண்மை, பொறுத்திருங்கள். பேசுகின்றேன் சம்பவங்கள் நடந்ததற்கு சாட்சியாக 700 பேரிடம் இது தொடர்பாக கையெழுத்து வாங்கியுள்ளோம்” என்றார் சற்று படபடப்புடன்.
இந்த விவகாரத்தை நன்கு அறிந்த பிரபல நடன கலைஞர் அனிதா ரத்னத்தை தொடர்பு கொண்டபோது, “ என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என பார்த்து விட்டு பேசலாம்” என்று ஒதுங்கிக் கொண்டார்!.
ஒன்று மட்டும் புரிந்தது. கலாஷேத்ராவின் ‘நெட் ஓர்க்’ பெரியது.. மத்திய மாநில அரசுகளோடு அவர்களுக்குள்ள நெருக்கம் ஆழமானது என்பதால் யாருமே வெளிப்படையாக வர யோசிக்கின்றனரோ என்ற ஐயம் எழுந்தது.
பிரபல பாடகரும் ‘மாக்சேசே’ விருது பெற்றவருமான டி.எம்.கிருஷ்ணா மட்டும் இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறார். தொடர்ந்து சமூக வளைதளங்களில் குரல் எழுப்புகிறார். கலாஷேத்ராவின் தலைவர் ராமதுரைக்கே அவர் பகீரங்க கடிதம் எழுதியது மீடியாவில் வந்தது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு துணை நிற்கிறார்!
இதன் நடுவே கலாஷேத்ராவின் தற்போதைய இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து தங்கள் பக்க நியாயத்தை எடுத்துரைத்துள்ளதாக செய்திகள். புகார் கொடுத்ததாக சொல்லப்படும் மாணவிகளையே அழைத்துப் போயுள்ளார். ‘எதுவுமே நடக்கவில்லை, எல்லாம் தவறான செய்திகள்’ என்றும் அவர்கள் டி.ஜி.பி.யிடம் கூறியுள்ளதாக தகவல்! கலை நிறுவனத்தின் Internal Committee என்று சொல்லப்படும் ஆய்வு குழுவே விசாரித்து ஒன்றுமில்லை என்று தீர்ப்பு தந்துள்ளதாக சொல்கிறார் ரேவதி.