இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட நிலையில், அதனை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்ததால், குரல் வாக்கெடுப்பு மூலம் அவைத் தலைவர் அப்பாவு, வாக்கெடுப்பு நடத்தி, எதிர்ப்பு இல்லாததால் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் எனவும், இந்தியா – இலங்கை இடையேயான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப்பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்தியா – இலங்கை கடல் எல்லையில், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்கள்தான் என்பதை அடிக்கடி மத்திய அரசு மறந்துவிடுகிறது. எனவே, அவர்களும் இந்திய மீனவர்கள்தான் என்பதை அழுத்தமாக மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதாக இருக்கிறது என்று தீர்மானத்தைக் கொண்டு வந்து முதல்வர் பேசினார்.
இந்த தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆதரவு அளித்தனர். பாஜக, அதிமுக என எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளித்ததால், தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.