இந்தியாவின் உயர்மட்ட அறிவியல் அமைப்பான ‘அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில்’ (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார், தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லத்தம்பி கலைச்செல்வி. நாடு முழுவதும் 4,500க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றும் இந்த அமைப்பின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண் விஞ்ஞானி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி துறை (டிஎஸ்ஐஆர்) செயலாளராகவும் கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த கலைச்செல்வி, அவரது கண்டுபிடிப்புகள் என்ன என பார்க்கும் முன்பு சிஎஸ்ஐஆர் முக்கியத்துவம் பற்றி ஒரு சிறு பிளாஷ்பேக்…
இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சிக்காக ஆங்கிலேயர் ஆட்சியில் 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது சிஎஸ்ஐஆர் (Council of Scientific and Industrial Research). இப்போதும் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆராய்ச்சி அமைப்பு என்றால் சிஎஸ்ஐஆர்தான். தன்னாட்சி பெற்ற அரசு அமைப்பான இதன்கீழ் இந்தியா முழுவதும் 39 ஆய்வகங்கள், 50 களப்பணி நிலையங்கள் இயங்குகிறது. இவை எல்லாவற்றிலும் சேர்த்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதில் 4600 பேர் விஞ்ஞானிகள்.
இந்தியாவின் பிரசித்திபெற்ற பெங்களூர் – மத்திய கணித மாதிரியாக்கல் மற்றும் கணினி உருவகம், ஐதராபாத் – உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம், லக்னோ – மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம், சென்னை – மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், தான்பாத் – மத்திய சுரங்கவியல் & எரிபொருள் ஆய்வு நிறுவனம், மைசூர் – மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், கொல்கத்தா – மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம், லக்னோ – மத்திய மருத்துவ மற்றும் நறுமணப் பயிர்கள் நிறுவனம், சென்னை – மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், புது தில்லி – மத்திய சாலை ஆய்வு நிறுவனம், பாவ்நாகர் – உப்பு மற்றும் கடல்சார் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், தில்லி – மரபணு மற்றும் தொகுப்புயிரியல் நிறுவனம், பாலாம்பூர் – உயிர்வள தொழில்நுட்ப நிறுவனம், கொல்கத்தா – இந்திய வேதி உயிரியல் நிறுவனம், ஐதராபாத் – இந்திய வேதி தொழில்நுட்ப நிறுவனம், டேராடூன் – இந்தியப் பெட்ரோலிய நிறுவனம், சண்டிகர் – நுண்ணுயிரி தொழில்நுட்ப நிறுவனம், பெங்களூர் – தேசிய விண்வெளி ஆய்வகம், லக்னோ – தேசிய தாவரவியல் ஆய்வுக் கழகம், டோனா பவுலா – தேசிய கடலியல் நிறுவனம், புது தில்லி – தேசிய இயற்பியல் ஆய்வகம் ஆகியவை உட்பட பல முக்கிய அறிவியல் ஆராய்ச்சி நிலையங்கள் சிஎஸ்ஐஆர் கீழேயே வருகின்றன. இவை எல்லாவற்றுக்கும் தலைமை இயக்குநராகத்தான் தற்போது கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
18 ஆராய்ச்சி பத்திரிகைகளையும் 3 பிரபலமான அறிவியல் இதழ்களையும் சிஎஸ்ஐஆர் வெளியிடுகிறது.
சிஎஸ்ஐஆரின் தலைமை இயக்குநராக இருந்த சேகர் மாண்டே கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். அவருக்குப் பின்னர் புதிய இயக்குநர் நியமிக்கப்படாத நிலையில், தலைமைப் பொறுப்பை பயோடெக்னாலஜி துறையின் செயலாளர் ராஜேஷ் கோகலே கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில்தான், புதிய தலைமை இயக்குநராக மூத்த விஞ்ஞானி நல்லதம்பி கலைச்செல்வி 6-8-2022 (சனிக்கிழமை) அன்று நியமிக்கப்பட்டார். மேலும், இந்த துறையின் செயலாளர் பொறுப்பையும் இவர் சேர்ந்து வகிக்க உள்ளார்.
யார் இந்த கலைச்செல்வி?
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் ஊரைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரது குடும்பம் வசதியான பின்னணி கொண்டதல்ல. ஆனாலும், படிப்பில் பள்ளிப் பருவம் முதலே சுட்டியாக இருந்துள்ளார். விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரையும், பின்னர் திருநெல்வேலியில் உள்ள காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையும் படித்துள்ளார். பள்ளிக்கல்வியை முழுவதும் தமிழ் வழியிலேயே படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி படிப்பு முடிந்ததும் அறிவியல் ஆர்வம் காரணமாக, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Central Electrochemical Research Institute – CECRI)) தொடக்க நிலை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். இது சிஎஸ்ஐஆர் கீழ் வரும் 40க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களில் முதன்மையான ஒன்று. இந்நிறுவனத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக எலக்ட்ரோ கெமிக்கல் மின்சார சாதனங்களில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார். இத்துறை சார்ந்து இதுவரை 125-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். தனது கண்டுபிடிப்புகளுக்காக 6 காப்புரிமைகளும் பெற்றுள்ளார்.
எலக்ட்ரோ கெமிஸ்ட்ரி, எனர்ஜி, மெட்டீரியல் வேதியியல், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, நானோ மெட்டீரியல்ஸ் கெமிஸ்ட்ரி, எலக்ட்ரோ கெமிக்கல் பவர் சோர்ஸ் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர், கலைச்செல்வி. லித்தியம் பேட்டரிகள், சூப்பர் கேபாசிட்டர்கள், கழிவுகளிலிருந்து இயக்கப்படும் மின்முனைகள், ஆற்றல் சேமிப்பு, எலக்ட்ரோ லைட்டுகள் ஆகியவை கலைச்செல்வியின் ஆராய்ச்சியில் முக்கிய அங்கமாகும். குறிப்பாக லித்தியம் – அயன் பேட்டரிகள் துறையில் இவரது பங்களிப்புகளுக்காக புகழ்பெற்றவர். மின்சார இயக்கத்திற்கான தேசிய இயக்கத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளார். தற்போது நடைமுறையில் சாத்தியமான சோடியம்-அயன்/லித்தியம்-சல்பர் பேட்டரிகள் மற்றும் சூப்பர் கேபாசிட்டர்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார்.
இத்துறைகளில், இவரது கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் காரணமாக 2007ஆம் ஆண்டு சர்வதேச விஞ்ஞானியாக அங்கீகரிக்கப்பட்டார். 2011இல், விஞ்ஞானிகளின் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் கொரியா எலக்ட்ரோ டெக்னாலஜி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (KERI) செல்ல இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டார். 2009ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல ‘CSIR ராமன் ஆராய்ச்சி பெல்லோஷிப்’ இவருக்கு வழக்கப்பட்டது. இந்தியளவில் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான ‘சிவி ராமன் மகிளா விஞ்ஞான புரஸ்கார்’ விருதை 2019ஆம் ஆண்டு இவருக்கு வழங்கி கெளரவித்தது, மத்திய அரசு.
2019 பிப்ரவரி 22 அன்று மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (சிஇசிஆர்ஐ) இயக்குநராக நியமிக்கப்பட்டார். அதன்மூலம் இந்த நிறுவனத்துக்கு தலைமை தாங்கிய முதல் விஞ்ஞானி என்ற பெருமையை பெற்றார். தற்போது அவது சாதனையை அவரே ‘பிரேக்’ செய்து, முதல் பெண் சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநராகவும், டிஎஸ்ஐஆர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வளவு உயரத்தை தான் அடைய முடிந்தததற்கும் தனது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக தமிழ் வழியில் படித்ததும், அதுதான் அறிவியலின் கருத்துகளைப் புரிந்துகொள்ள உதவியது என்றும் சொல்கிறார் கலைச்செல்வி.
இதையே இவருக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘தமிழ் வழிக்கல்வி, அறிவியலை கற்றுணரத் தடையாகாது என்பதற்கு கலைச்செல்வியின் இந்த சாதனையே சிறந்த சான்று’ என தெரிவித்துள்ளார்.
தமிழ் வழியில் படித்து தலை சிறந்த விஞ்ஞானிகளான இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், ஐஎஸ்ஆர்ஓ மயில்சாமி அண்ணாதுரை, சிவன், நாசா விஞ்ஞானி மெய்யப்பன் ஆகியோர் வரிசையில் இப்போது கலைச்செல்வியும் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.