ராஜா உண்டு .. மந்திரி உண்டு ராஜ்ஜியம் உண்டு ஆள
இசைஞானி இளையராஜா பாடல்களைக் கேட்கும்போது உயிர் கரையும் .
இதன் ரகசியம் இதுவரைக்கும் அவருக்கே புரிபடாத புதிர்தான் என்பதை பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்.
அப்படி அவர் சொல்லி விட்டு சாதாரணமாக கடந்து செல்வதை நம்மால் ஏற்க முடியவில்லை.
அதுமட்டுமில்லாமல் அவர் ஆர்மோனியத்தில் தயாராகும் பாடல்கள் உருவான கதைகளும் வேறு எந்த இசைய்மைப்பாளருக்கும் நடக்காத ஒரு நிகழ்வாகவே இருப்பதுதான் இனிய வரலாறு.
இன்னும் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் ஒரு பாடல் எந்தளவுக்கு ரசிகர்களை மயங்க வைக்கிறது என்பதைப் பொருத்துதான் பாடல்கள் கொண்டாடப்படும்.
அப்படி மெலோடியால் மயங்க வைக்கும் பாடல்கள் புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் இடம் பெற்றிருக்கிறது.
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண் எனும் பொன்னழகே அடடா எங்கெங்கெங்கும் உன்னழகே
பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும் பாடிவா தென்றலே..
என்று இரண்டு மெலடி பாடல்களைக் கொடுத்திருந்தார் ராஜா. ரஜினிகாந்திற்கு ஒரு பாட்டு. சிவகுமாருக்கு ஒரு பாட்டு. இரண்டுமே மனதை வருடும் அருமையான பாடலாக இருக்கும்.
அதுவரைக்கும் வில்லன் பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் கைதட்டல் பெற்ற ரஜினியை இதில் நல்ல குணம் கொண்ட மனிதனாகவும், ஹீரோவாக நடித்து வந்த சிவகுமார் இதில் வில்லன் பாத்திரம் ஏற்பது போலவும் கதையோட்டம் அமைந்தது படத்தை விறுவிறுப்பாக மாற்றியிருக்கும்.
ஆனால் முதலில் பஞ்சு அருணாசலம் அவர்கள் கதை எழுதும்போது கேரக்டரை மாற்றி நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். அப்படி செய்திருந்தால் அது வழக்கமான ஒரு யோசனையாக இருக்குமே என்றுதான் மறுநாள் மாற்றி நடிக்க வைக்க முடிவு செய்தார். இந்த மாற்றத்தை ரஜினி , சிவகுமார் இருவரிடமும் சொன்னபோது மறுக்காமல் நடிக்க சம்மதித்தனர்.
இன்று அப்படியெல்லாம் நடக்குமா? ஒரு கதாசிரியருக்கு ஹீரோக்கள் அந்த அள்வுக்கு மரியாதையை கொடுக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பதில். மற்ற இரண்டு மெலடி பாடல்கள் இல்லாமல் மூன்றாவதாக ஒரு சோகப்பாடல்தான் இந்த படத்திற்கே பெரிய அடையாளமாக அமைந்தது.
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு நாணியும் இல்லை வாழ, ஒரு உறவும் இல்லை.. அதில் பிரிவும் இல்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நானே
என்ற இந்தபாடல் பதிவு செய்வதற்கு முன் இளையராஜா அவர்கள் மற்ற இரண்டு பாடல்களையும் எஸ்.பிபாலசுபரமணியத்தை வைத்து பாட வைத்து விட்டார் . இந்த ஒரு பாடலை மட்டும் வித்தியாசமாக நாமே பாடி விடலாம் என்று கருதி அவர் குரலிலேயே பாடி பதிவு செய்து விட்டார்.
வீட்டுக்குப் போனபிறகு அவருக்குள் ஏதோ சின்னதாக உறுத்தல் இருந்து கொண்டேயிருந்தது. மறுநாள் காலையில் கவிஞர் வாலி அவர்கள் வேறு ஒரு படத்தின் பாடல் எழுத, இளையராஜாவை சந்திக்க ஸ்டுடியோவுக்கு வந்திருக்கிறார்.
அவரிடம் அண்ணே ஒரு பாடல் நான் பாடியிருக்கிறேன் பஞ்சு அண்ணா எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார். கேட்டு விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் என்று ஸ்டுடியோவில் போட்டுக் காட்டியிருக்கிறார்.
பாடலை முழுவதுமாகக் கேட்ட வாலி அவர்கள் என்னய்யா வரிகள் எல்லாமே அவச்சொல்லாவே இருக்கே. ராஜ்ஜியம் இல்லை.. ராணியும் இல்லை.. என்று வந்திருக்கே ? நீயே ராஜா உனக்கு ராஜ்ஜியம் இல்லை என்று பாடியிருப்பது எனக்கு சரியாப்படலே என்று வெளிப்படையாக மனதில் பட்டதை சொல்லி விட்டார்.
இதை எதிர்பார்த்ததைப்போல ராஜா அவர்களும் எனக்கும், ஏதோ சரியா இல்லைண்ணா என்று சொல்லி அன்று மீண்டும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை வரவழைத்து மீண்டும் அந்தப் பாடலை பாட வைத்து பதிவு செய்தார். அந்த குரலைத்தான் நாம் இப்போது கேட்கிறோம். பாடலில் நாயகி பாடுவது போல இருக்கும் வரிகள் எல்லாம் பாஸிடிவாக அமைத்து அதை சரி செய்திருப்பார் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்
ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ராஜகுமாரன் உண்டு ..
தெய்வத்தில் உன்னை கண்டேன்
தினம் தினம் பூஜை செய்தேன்
இது சம்பிரதாயமாக அமைந்ததா அல்லது கவிஞராக நல்ல வரிகள் வேண்டும் என்று மீண்டும் எழுதப்பட்டதா என்ற கேள்விக்கு அது இயற்கையாக அமைந்து விட்டது என்றே சொல்ல முடியும்.
பாடலிலில் வரிகள் எதிர்மறையாக இருந்தாலும் கூட, அந்த நாளில் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்ட பாடல் இது என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதும் தென்மாவட்ட கிராமங்களில் திருமணம் வீடுகளில் கூட இரவு நேரங்களில் இந்தப்பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதே ஆச்சரியமான உண்மை.
1977ல் வெளியான புவனா ஒரு கேள்விக்குறி ஒரு தத்துவார்த்தமாக க்ளைமாஎக்ஸ் அமைக்கப்பட்டிருக்கும். அது படம் பார்க்கும் ரசிகர்களின் மனதை கனக்க செய்தது..
அதுதான் அந்த படத்தை மிகப்பெரிய வெற்றியை பெறவும் வைத்தது. மகிரிஷி எழுதிய கதையை நேர்த்தியாக திரைக்கதையை எழுதியிருந்தார் பஞ்சு அருணாச்சலம். பாபுவின் ஒளிப்பதிவில் தன் ஸ்டைலில் கமர்ஷியல் படமாக, விறுவிறுப்பாக இயக்கியிருந்தார் எஸ்.பி. முத்துராமன்.
அன்று பஞ்சு அவர்கள் மாற்றிக் கொடுத்த வரிகள் போலவே இன்று ராஜாவும் நிலைத்திருக்கிறார் அவருக்கென்று தனி இசை ராஜ்ஜியமும் அமைந்து விட்டது.
(தொடரும்)