ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய வசதியாக பந்து வீச்சாளர்கள் தங்கள் எச்சிலை பயன்படுத்தி பந்தை துடைத்து தேய்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களின் முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக ரிவர்ஸ் ஸ்விங் இருந்து வருகிறது. ரிவர்ஸ் ஸ்விங் மூலம் பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேனுக்கு அதிக நெருக்கடி கொடுப்பார்கள். அப்படி ரிவர்ஸ் ஸ்விங் செய்ய வேண்டுமானால் பந்தை ஒரு பக்கம் சொர சொரப்பாகவும், மறுபக்கம் பளபளப்பாகவும் வைத்திருக்க வேண்டும். இப்படி பந்தின் ஒரு பக்கத்தை பளபளப்பாக வைக்க, பந்துவீச்சாளர்கள் தங்கள் எச்சிலை வைத்து பந்தை தேய்ப்பது வழக்கம்.
2020-ம் ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து பந்து வீச்சாளர்கள் தங்கள் எச்சிலை பந்தில் தடவ தடை விதிக்கப்பட்டது. இதனால் பழைய பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியாமல் பந்துவீச்சாளர்கள் தடுமாறி வருகிறார்கள். தங்கள் எச்சிலை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். சாம்பியன்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரின்போது முகமது ஷமி இது தொடர்பாக ஒரு கோரிக்கையை விடுத்திருந்தார்.
இந்த சூழலில் ஐ.பி.எல். தொடரில் களமாடும் அணிகளின் கேப்டன்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “கேப்டன்களிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டன. எச்சில் தடையை நீக்குவதும் அவற்றில் ஒன்று. அதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை, அதை நீக்க ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இது பி.சி.சி.ஐ-யின் உள்நாட்டுப் போட்டி. எனவே நாங்கள் இங்கே ஐ.சி.சி-யின் வழிகாட்டுதல்களுக்குக் கட்டுப்படவில்லை,” என்று பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரில் பந்துவீச்சாளர்கள் தங்கள் எச்சிலை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக்க ஐபிஎல் அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. கடந்த ஐபிஎல்லில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த்தால், அதைக் கட்டுப்படுத்த பந்து வீச்சாளர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் மூன்று பந்துகள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிசிசிஐ இந்த புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் 11வது ஓவர் முதல் அந்தப் போட்டியின் மூன்றாவது பந்தை பயன்படுத்த முடியும்.