‘இப்ப ஸ்கோர் என்ன?’
‘300’
‘350ஐத் தாண்டும் போல’
‘ரொம்ப ஈசியா தாண்டிரும்’
இந்த மாதிரிதான் நேற்றுவரை பேசிக் கொண்டு இருந்திருக்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். அவர்கள் பேசிக் கொண்டது ஏதோ கிரிக்கெட் போட்டி ரன் ஸ்கோரைப் பற்றி அல்ல. ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி.யான தீரஜ் பிரசாத் சாஹூவிடம் இருந்து பறிமுதல் செய்த கோடிகளைப் பற்றி!
ஒடிசா மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம், பவுத் மதுபான நிறுவனம். இந்த நிறுவனத்திலும் அது தொடர்பான இடங்களிலும், வருமான வரித்துறை கடந்த 7ஆம்தேதி அதிரடி சோதனையைத் தொடங்கியது. இந்த நிறுவனம் மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி.யான தீரஜ் பிரசாத் சாஹூவின் குடும்பத்துக்குச் சொந்தமானது.
பால்டியோ என்பது தீரஜ் பிரசாத் சாஹூவின் அப்பா பெயர். அந்த பெயரில் அமைந்த பால்டியோ சாஹூ குழுமத்தில் வரிஏய்ப்பு நடந்ததாகக் கேள்விப்பட்டு அந்த குழுமத்துக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தது.
அதன் ஒருகட்டமாக, தீரஜ் பிரசாத் சாஹூவின் வீடு உள்பட பல இடங்களும் வருமான வரித்துறையின் சோதனைக்கு இலக்காயின. அப்போது சாஹூவின் வீட்டில் இருந்து 176 பண மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த மூட்டைகளில் இருந்த பணம் அத்தனையும் கணக்கில் வராத பணம். எல்லாமே புத்தம்புதிய 500 ரூபாய் நோட்டுகள். அந்த பணக்கட்டுகளைப் பார்த்து வருமானவரித்துறை அதிகாரிகளே மலைத்துப் போய்விட்டனர்.
குத்து மதிப்பாக பார்த்தால் எப்படியும் 290 கோடி ரூபாய் தேறும் என்ற முடிவுக்கு முதல் கட்டமாக வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தார்கள். ஆனால் அது மொத்தமும் தப்புக்கணக்கு என்பது பிறகுதான் தெரிந்தது.
பறிமுதல் செய்த பணத்தை பலாங்கிர் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிக் கிளைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துப்போனார்கள். அங்கே 3 வங்கிகளைச் சேர்ந்த 50 அதிகாரிகள், 40 பணம் எண்ணும் இயந்திரங்களின் உதவியுடன் பணத்தை எண்ணும்வேலை ஆரம்பமானது. பாவம். பணத்தை எண்ண ஆரம்பித்தபோது, பணம் எண்ணும் இயந்திரங்களே திணறிப்போய் பழுதாக ஆரம்பித்தன.
திரௌபதி துகில் உரியப்பட்டபோது புதிய புதிய சேலைகள் வந்து வந்து குவிந்த மாதிரி, எண்ணிக்கையில் அடங்காமல் போய்க்கொண்டே இருந்தது எம்.பி.தீரஜ் பிரசாத் சாஹூ விடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம்.
கையில் இருக்கிற பணத்தையே எண்ணி முடிக்க முடியாத நிலையில், இன்னும் மிச்சமிருக்கிற பணத்தை எப்போது எண்ணி முடிப்பது என்று ஒரு கட்டத்தில் திகைத்து திக்குமுக்காடிப் போனார்கள் அதிகாரிகள்.
தமிழக அளவில் கடந்த 2018ஆம் ஆண்டு, சாலை கட்டுமான நிறுவனத்திடம் இருந்து 163 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதுதான் மிகப்பெரிய ரெக்கார்ட். இந்திய அளவில் பார்த்தால், 2019ஆம் ஆண்டு கான்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு தொழிலதிபரிடம் இருந்து 257 கோடி பறிமுதல் செய்யப்பட்டதுதான் உச்சகட்ட சாதனை.
ஆனால், சாஹூ வசம் இருந்த பறிமுதல் செய்யப்பட்ட பணம், இந்த சாதனைகளை எல்லாம் அலட்சியமாக முறியடித்து வெற்றிநடை போட்டு போய்க் கொண்டே இருந்தது. இறுதியாக, ஒருவழியாக பணம் எண்ணும் வேலை முடிந்து, அது 353 கோடியில் வந்து முடிந்தபோது, ‘அப்பாடா’ என்ற பெருமூச்சு விட்டார்கள் அதிகாரிகள்.
வருமான வரித்துறையின் ஒற்றை நடவடிக்கையில் இவ்வளவு பெரிய அளவில் கருப்புப் பணம் சிக்கியது இதுவே முதல்முறை.
இந்த இடத்தில் எம்.பி.தீரஜ் பிரசாத் சாஹூவைப் பற்றி ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். சாஹூ, கருப்புப் பணத்துக்கு எதிராக எப்போதும் பொங்கி எழுபவர். யாராவது கருப்புப்பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று கேட்டால் சாஹூ அப்படியே கொதித்து கொந்தளித்து விடுவார்.
‘பணமதிப்பு நீக்கத்துக்குப்பிறகு நாட்டில் இவ்வளவு கருப்புப் பணத்தையும், ஊழலையும் கண்டு என் மனம் வருந்துகிறது(!) மக்கள் எங்கே இருந்து இவ்வளவு கருப்புப் பணத்தைக் குவிக்கிறார்கள் என்பது புரியவில்லை. இந்த நாட்டில் இருந்து கருப்புப் பணத்தை ஒழிக்க காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும்’ என்று இதற்குமுன் ட்விட்டரில், ட்விட்டியவர் சாஹூ.
2022ஆம் ஆண்டு கருப்புப் பணத்துக்கு எதிராக இப்படி இவர் கொந்தளித்துப் போட்ட டிவிட்டர் பதிவு, தற்போது வைரலாகி வருகிறது. இப்படி டிவிட்டர் பதிவு போட்ட சாஹூவிடமா இவ்வளவு பணம் என்று திகைக்கிறார்கள் பலர்.
‘சாஹூ செம நகைச்சுவைக்காரர். பிளாக் காமெடிக்காரர்’ என்று இந்த ட்விட்டர் பதிவை வைத்து கிண்டலடித்திருக்கிறார் பாரதிய ஜனதாவின் ஐ.டி.விங் தலைவரான அமித் மாள்வியா.
இவராவது பரவாயில்லை. பாரதிய ஜனதாவின் தேசியச் செய்தித் தொடர்பாளரான ஷெஹ்சாத் பூனவாலா இன்னும் ஒருபடி போய், ‘ஒரு காங்கிரஸ் எம்.பி. எவ்வளவு கொள்ளை அடித்திருக்கிறார் பாருங்கள். அந்த கொள்ளை பணத்தை எண்ண முடியாமல் ஒரு படையே திணறுகிறது. இந்த தொகையை ஆயிரம் காங்கிரஸ் எம்.பி.க்கள், 60 ஆண்டுகளோடு பெருக்கிப் பாருங்கள். பல ஆயிரமாயிரம் கோடிகள் வரும். காங்கிரஸ் என்பது ஓர் ஊழல் நோய்’ என்று கூறியிருக்கிறார்.
‘அமலாக்கத்துறை மாதிரியான அமைப்புகளை கண்டு காங்கிரஸ் கட்சி ஏன் சீறிப்பாய்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர் பங்குக்கு நையாண்டி செய்திருக்கிறார்.
சாஹூ, காங்கிரஸ் எம்.பி. என்ற நிலையில், ‘அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்துக் கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று காங்கிரஸ் கட்சி மெல்ல கழன்று கொண்டுள்ளது.
‘சாஹூவிடம் எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று விளக்கம் கேட்டிருக்கிறோம். மற்ற படி இது சாஹூவின் தனிப்பட்ட விவகாரம். கட்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்றிருக்கிறார் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் அவினாஷ் பாண்டே.
சாஹூவின் குடும்பம் சாதாரண குடும்பம் இல்லை. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சாஹூவின் தந்தை பால்டியோ, 47 லட்சம் ரூபாயையும், 47 கிலோ தங்கத்தையும் இந்திய அரசுக்கு நன்கொடையாக வழங்கியவராம். சாஹூவின் குடும்பம், மதுபானத் தொழிலை மையமாகக் கொண்ட குடும்பம். லோஹர்டகாவில் உள்ள அவரது வீட்டை ‘லோஹர்டகாவின் வெள்ளை மாளிகை’ என்றுதான் மக்கள் அழைப்பார்களாம்.
2018ஆம் ஆண்டு சாஹூ, வேட்புமனு தாக்கல் செய்தபோது அதில், ‘அசையும் சொத்துகள் 20.4 கோடி, அசையா சொத்துகள் 14.43 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். ரேஞ்ச் ரோவர், பி.எம்.டபிள்யூ, ஃபார்ச்சூனர், பேஜரோ என 4 கார்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆண்டு வருமானம் ஒரு கோடி ரூபாய், மனைவி வசம் இருப்பது 94.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3.1 கிலோ தங்கம், 26.26 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் என்று சாஹூ குறிப்பிட்டுள்ளார்.
வேட்புமனுவில் இவர் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்புக்கும், தற்போது சாஹூவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் பணத்துக்கும் ஏணியில்லை எலிவேட்டர் வைத்தாலும் கூட எட்டாது.
சாஹூவின் பெயரில் இதுவரை ஒரு குற்ற வழக்கு கூட இல்லை என்பது இன்னொரு குறிப்பிடத்தக்க ஆச்சரியமான விஷயம்.
சாஹூ விவகாரம் சலசலப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில், ‘கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் பற்றி மத்திய புலனாய்வு நிறுவன விசாரணை வேண்டும்’ என பாரதிய ஜனதா வற்புறுத்தி வருகிறது.
காங்கிரஸ் எம்.பி.யின் இந்த கருப்புப்பண களேபரத்தில் இன்னும் சில புதிய திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.