2024ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908’ என்ற ஆய்வு நூலுக்காக வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
ஆய்வு எழுத்துக்கள் என்றாலே, ‘தகவல்களை அதிகமாக குவித்து வைத்து வாசகர்களை சோதிக்கும், தட்டையான எழுத்துக்களாக இருக்கும்’ என்பதுதான் பலரது அபிப்ராயமாக இருக்கும். இந்த முன் முடிவுகளை மாற்றும் விதமாக மிக சுவாரஸ்யமாக ஆய்வு நூல்களை எழுதி வருபவர் ஆ.இரா. வேங்கடாசலபதி. படைப்பிலக்கியத்துக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் வரலாற்று-பண்பாட்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவரும் இவர் பாரதி, புதுமைப்பித்தன், வ.உ.சி. போன்ற தமிழ் ஆளுமைகள் குறித்த மிக முக்கியமான ஆய்வு நூல்களைத் தந்துவருகிறார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக உள்ளார்.
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆ.இரா. வேங்கடாசலபதி, “சாகித்ய அகாடாமி விருது கடந்த பல ஆண்டுகளாக படைப்பு இலக்கியத்துக்கே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908’ நூலின் இலக்கிய தகுதியை கருத்தில் கொண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
நான் பல நூல்கள் எழுதியிருந்தாலும், வ.உ.சியில் இருந்து தான் எனது எழுத்து பயணம், கல்வி பயணம் தொடர்கிறது. வ.உ.சி பற்றி நான் எழுதிய நூல்களில் ஒன்றுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ரௌலட் சட்டத்துக்கு எதிராக வ.உ. சிதம்பரனார் 1908ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட பின்பு திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் இறங்கினர். ஆங்கிலத்தில் திருநெல்வேலி கலவரம் என அந்த நிகழ்வு என சுட்டப்படும். ஆனால் உண்மையில் அது ஒரு மக்கள் எழுச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக Swadeshi Steam நூலை ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் கொண்டு வந்துள்ள வேளையில், அவரது “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” நூல் சாகித்ய அகாடமி விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது!
கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் ‘எழுச்சி’ எனப் பதிவுசெய்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு என் வாழ்த்துகள்! பாராட்டுகள்!” என்று தெரிவித்துள்ளார்.
விருது பெறும் ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும்: 1908’ நூல் குறித்து பத்திரிகையாளர் கே. முரளீதரன் எழுதியுள்ள பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
“தமிழ்நாட்டின் அரசியல் மனநிலையை வடிவமைத்ததில் பல்வேறு கலகங்களும் எழுச்சிகளும் போராட்டங்களும் முக்கியப் பங்கை வகிக்கின்றன.
சுதந்திரத்திற்குப் பின்பு நிகழ்ந்த போராட்டங்கள் குறித்து பலருக்கும் சிறிதளவு அறிமுகமாவது இருந்தாலும், சுதந்திரத்திற்கு முன்பு நடந்த எழுச்சிகள், அதில் நிகழ்ந்த தியாகங்கள், அதன் தாக்கங்கள் குறித்த கவனம் மிகக் குறைவு. அப்படி ஒரு எழுச்சிதான் 1908ல் நடந்த திருநெல்வேலி எழுச்சி.
1908ஆம் ஆண்டு வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து மார்ச் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்களின் எழுச்சி ஏற்பட்டது. இந்த எழுச்சியின்போது பல இடங்களில் அரச சொத்துகள் சூறையாடப்பட்டன. தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
இந்த எழுச்சியின் பின்னணி இதுதான்.
1906ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பனி லிமிட்டெட் பதிவுசெய்யப்பட்டது. சில காலத்திலேயே இந்தக் கம்பனிக்கும் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பனிக்கும் இடையில் பலத்த போட்டி ஏற்பட்டது. பல தருணங்களில் கைகலப்புகளும் நடந்தன. பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு ஆதரவாக அரசாங்கம் நடந்துகொண்டது.
1908 ஜனவரியில் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் சுப்பிரமணிய சிவா, வ.உ.சி., பத்மநாப அய்யங்கார், சோமசுந்தர பாரதி ஆகியோர் வீறுமிக்க உரைகளை ஆற்றினர். இதன் விளைவாக எழுச்சி பெற்ற தூத்துக்குடி கோரல் ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். ஆலை மூடப்பட்டது. இதற்குப் பிறகு வ.உ.சி. தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தியதில், தொழிலாளர் கோரிக்கை ஏற்கப்பட்டு, மார்ச் 7ஆம் தேதி அவர்கள் வேலைக்குத் திரும்பினர்.
இதற்கிடையில் விபின் சந்திர பால் சிறையிலிருந்து வெளியேறும் மார்ச் 9ஆம் தேதியை சுயராஜ்ய நாளாக கொண்டாட சுதேசி இயக்கத்தினர் முடிவுசெய்தனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கூட்டம் நடத்தக்கூடாது எனக் கூறப்பட்டது. இருந்தபோதும் கூட்டம் நடத்தப்பட்டது. அடுத்த நாள் தூத்துக்குடியிலும் கூட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து வழக்குப் பதிவுசெய்யப்பட்டு மார்ச் 12ஆம் தேதி வ.உ.சி., சு.சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.
இதற்குப் பிறகு, மார்ச் 13ஆம் தேதி மக்கள் கூட ஆரம்பித்து, கலகத்தில் இறங்கினர். கடைகள் மூடப்பட்டன. நீதிமன்றம், மருத்துவமனைகள் தாக்கப்பட்டன. நகரெங்கும் விளக்குகள் உடைக்கப்பட்டன. போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. பலர் கொல்லப்பட்டனர். திருநெல்வேலியில் சார்பதிவாளர் அலுவலகம் தவிர்த்து அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாயின.
பிறகு ஒருவழியாக இந்த எழுச்சி முடிவுக்கு வந்தது.
இந்த எழுச்சியின் தாக்கம் என்னவாக இருந்தது, இதற்குப் பிறகு கைதுசெய்யப்பட்டவர்கள் என்னவானார்கள், என்ன தண்டனைகள் விதிக்கப்பட்டன, நீண்ட காலத் தாக்கம் என்ன என்பதை பல்வேறு சான்றாவணங்களின் உதவியுடன் விவரிக்கிறது ஆ.இரா.வேங்கடாசலபதியின் “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” புத்தகம்.
இந்தப் புத்தகம் ஒரு ஆய்வு நூல். ஆனால், ஒரு துப்பறியும் நாவலுக்கான சுவாரஸ்யத்துடன் எழுதப்பட்ட ஆய்வு நூல். இன்றைய காலகட்டத்திலிருந்து நாம் பல வரலாற்றுப் பாத்திரங்களை தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது உணர முடியும். ஒவ்வொருவரது சிந்தனைக்குப் பின்னாலும் எத்தகைய தியாக உணர்வும், நாட்டுப்பற்றும் இருந்ததென்பதை யூகிக்க முடியும்.
நம்மை 21ஆம் நூற்றாண்டின் அரசியல் சூழலில் இருந்து பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய், 1908ஆம் ஆண்டின் அரசியல் சூழலில் இந்தப் புத்தகம் நிறுத்தும் புத்தகம் இது.
கட்டாயம் படிக்க வேண்டிய நூல்” என முரளீதரன் தெரிவித்துள்ளார்.
ஆ.இரா. வேங்கடாசலபதியின் விருது பெற்றுள்ள ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் – 1908’ நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை: ரூ. 290/-. நடைபெற இருக்கும் சென்னை புத்தகக் காட்சியில் இந்த நூல் அதிகம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.