கிரிக்கெட்டில் வாழ்நாள் சாதனை செய்த்தற்காக சச்சின் டெண்டுல்கருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த சனிக்கிழமை சி.கே.நாயுடு விருதை வழங்கியுள்ளது. அந்த விருதை வாங்கிய பிறகு பேசிய சச்சின் டெண்டுலகர் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லி இருக்கிறார்.
கடந்த 35 வருடங்களாக தன் வாட்ச்சை எப்போதும் 7 நிமிடங்கள் ஃபாஸ்டாக வைத்திருப்பதாகவும், அதற்கு காரணம் முன்னாள் கேப்டன் கபில்தேவ் என்றும் அன்றைய நிகழ்ச்சியில சச்சின் சொல்லி இருக்கார். அத்துடன் அதற்கான காரணத்தையும் அவர் சொல்லி இருக்கார்.
“1989-ல எனக்கு 16 வயசா இருந்தப்ப நான் எங்கயும் கொஞ்சம் லேட்டா போவேன். காலையில பயிற்சிக்கு 9 மணிக்கு பஸ் கிளம்பும்னு சொன்னா, நான் என் ரூம்ல இருந்தே 9 மணிக்குதான் கிளம்புவேன். மத்தவங்க எனக்காக காத்திருப்பாங்க. சீனியர் வீர்ர்கள் எனக்காக காத்திருக்கிறது அப்ப எனக்கு கஷ்டமா இருக்கும்.
அந்த நேரத்துல பாகிஸ்தானுக்கு இந்தியா பயணம் செஞ்சப்ப ஒருநாள் கபில்தேவ் என்கிட்ட பேசினார். காலை 9 மணிக்கு ஸ்டேடியத்துக்கு கிளம்பறோம்னு சொன்னா, நம்ம பஸ் 9 மணிக்கு கிளம்பும்னு அர்த்தம். ஆனா நீ அப்பதான் ரூம்ல இருந்து கிளம்பற.
அதனால்தான் நீ எப்பவும் லேட்டா வர்றே. இதை சரிசெய்ய நீ உன் வாட்ச்ல நேரத்தை சில நிமிஷங்கள் முன்னால வச்சுக்கன்னு சொன்னார்.
அன்னையில இருந்து நான் அதைத்தான் ஃபாலோ பண்றேன். அதனால கடந்த 35 வருஷமா என் வாட்ச் எப்பவும் 7 நிமிஷம் முன்னாடி காட்டும்” என்று விருது வழங்கும் விழால சொல்லியிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.